யாழ்ப்பாணத்தில் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம் என்றும் இது ஒரு அரசியல் கட்சி அல்ல என்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் இன்று விக்னேஸ்வரனிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களின் கேள்வி:

மிகவும் அந்தரங்கமாக தமிழ் மக்கள் பேரவை கூட்டத்திற்குப் போய் விட்டு வெளியில் வந்து “நான் ஊமை” என்று கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் வேறொரு கட்சியைத் தொடக்கி வைத்துள்ளீர்கள் என்று கூறப்படுகிறது. அது உண்மை தானா? தேர்தலில் தோற்ற பலரும் கூட்டத்திற்கு வந்தார்களாமே?

பதில் – தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். பலவிதமான மக்கள் குழுக்களும், ஒன்றியங்களும், கட்சிகளும் சேர்ந்து நல்லை ஆதீனம் போன்ற மதாச்சாரியார்கள் உள்ளடங்கலாகத் தொடங்கியுள்ள ஒரு மக்கள் இயக்கம் அது. இதற்கு தலைமை வகிக்க ஏற்பாட்டாளர்கள் குழு என்னை அழைத்தார்கள்.

உண்மையில் இணைத்தலைவராகத் தான் என்னை அழைத்தார்கள். வைத்திய கலாநிதி இலக்ஷ்மனும் மட்டக்களப்பு மக்கள் ஒன்றியத் செயலாளர் திரு.வசந்தராஜா அவர்களும் என்னுடன் இணைத்தலைவர்களாக இருக்கிறார்கள். இது ஒரு அரசியல் கட்சி அல்ல. அரசியலில் குதிக்கும் எண்ணம் கூட அதற்கு இருக்கமாட்டாது

இது வரைகாலமும் நாங்கள் அரசியல் தீர்வு பற்றி பேசி வருகின்றோம். எப்பேர்ப்பட்ட தீர்வை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதை இதுவரையில் எவருமே வெளிப்படுத்தவில்லை.

அடுத்து சமூகப் பிரச்சனைகள் பலவுண்டு. அவை பற்றி நாங்கள் விஞ்ஞான ரீதியாக முறையாக ஆராய முற்படவில்லை. எனவே தான் இப்பேர்ப்பட்ட மக்கள் குழுவொன்று பல நல்ல காரியங்களில் இறங்குகின்றது என்று அறிந்த போது நான் அதில் பங்குபற்ற இசைந்தேன்.

அரசியல் கட்சிகளையும் அழைத்ததாகக் கூறினார்கள். கௌரவ சித்தார்த்தன் வருவதாகக் கூறியிருந்தார்கள். திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வந்திருந்தார். அரசியல் ரீதியான விடயங்களை ஆராய இருப்பதால் அரசியல்வாதிகள் அதில் பங்கேற்பதி;ல் என்ன பிழையிருக்கின்றது?

எமது மாகாணசபை எதிர்கட்சித் தலைவர் திரு.தவராசா அவர்களுடன் மிக சுமூகமான உறவையே நாம் பேணிவருகின்றோம். அதற்காக நாங்கள் சேர்ந்துவிட்டோம் என்று அர்த்தமில்லை.

திரு.கஜேந்திரகுமார் முன்னர் திரு.சம்பந்தன் அவர்களின் வலது கையாகச் செயற்பட்டவர். அவருடன் ஒரு கூட்டத்தில் நான் காணப்பட்டால் நான் புதிய கட்சியொன்றை உருவாக்க முனைந்துள்ளேன் என்று அர்த்தமா?

“நான் ஊமை” என்று கூறியதன் காரணம் ஏற்பாட்டாளர்கள் அறிக்கை ஒன்றினை தாங்களே கொடுப்பதாக கூறியமையினால். அவர்கள் அறிக்கையைத் தரும் போது நான் இன்னுமொரு அறிக்கையை தருவது முறையன்று. எனவே தான் அவ்வாறு கூறினேன்.

இந்தப் பேரவை அரசியற் கட்சியல்ல. மாற்றுத் தலைமையினை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமும் அல்ல. இது அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கும் போருக்குப் பிந்திய எமது தமிழ் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் தொடர்பிலான சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான ஓர் உறுதியான செயற்றிட்ட முன்னெடுப்பேயாகும்.

தமிழ் மக்கள் பேரவை: ‘மாற்றுத் தலைமையை உருவாக்கும் நோக்கம் இல்லை’
20-12-2015
இலங்கையில் தமிழ் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மருத்துவ நிபுணர் டாக்டர் லக்ஸ்மன், மட்டக்களப்பு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் வசந்தராஜா ஆகியோர் இந்த அமைப்பின் இணைத் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை தொடக்கம் இரவு வரையில் தமிழ் மக்கள் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

151220105341_tamil_people_council_sri_lanka_tamil_makkal_peravai_512x288_bbc_nocredit

‘ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்கின்ற ஒரு பொது முடிவின் அடிப்படையில் தீர்வு காண்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது’

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு அரசியல் எல்லையைக் கடந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்கின்ற ஒரு பொது முடிவின் அடிப்படையில் தீர்வு காண்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் துணைத் தலைவருமான பேராசிரியர் சிற்றம்பலம், புளொட் அமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன, நல்லை ஆதீன முதல்வர், கிறிஸ்தவ மத குருமார்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் என பலதரப்பட்டவர்களும் இந்த அமைப்பின் ஆரம்ப கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

மாற்றுத் தலைமையினை ஏற்படுத்தும் கூட்டம் இல்லை’

ஒரு சில அரசியல்வாதிகளின் ஒத்தோடலை நிரந்தர தீர்வாக்கிக் கொள்வது அர்த்தமற்றது’

‘இந்தப் பேரவை அரசியல் கட்சியல்ல. மாற்றுத் தலைமையினை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமும் அல்ல. இது அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கும் போருக்குப் பிந்திய எமது தமிழ் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான ஓர் உறுதியான செயற்றிட்ட முன்னெடுப்பே அகும் என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருக்கின்றார்.

‘தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு என்பது தமிழ்மக்களின் அபிலாசைகளை, அவர்களின் வாழ்வியலுக்கான உரிமைகளை, சுயநிர்ணயத்தின் பண்புகளை தாராளமாகக் கொடுப்பதாக இருத்தல் வேண்டும். இத்தகையதொரு நிலைமையில், தனிமனிதர்களின் தீர்மானங்களை, ஒரு சில அரசியல்வாதிகளின் ஒத்தோடலை நிரந்தர தீர்வாக்கிக் கொள்வது அர்த்தமற்றது’ என்று தமிழ் மக்கள் பேரவையின் அறிக்கை கூறுகின்றது.

‘ஒரு காத்திரமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழுகின்ற தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற தீர்வுகளே தேவையானவையாகும்.

எனினும் இத்தகைய தீர்வை வழங்குவதில் இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமோ, பெரும்பான்மை இனம் சார்ந்த கட்சிகளோ முன்வரவில்லை’ என்றும் ‘இத்தகையதொரு நிலைமையில் பொதுமுடிவை எடுப்பதில் அரசியல் என்ற எல்லையை கடந்து ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்யக்கூடியதான அமைப்பு தேவைப்படுகிறது’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘அந்த இலக்கை ஈடு செய்யக்கூடியது என்ற நம்பிக்கையோடு மதபீடங்கள், அரசியல் தலைமைகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்த ஓர் அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை உருவாகியுள்ளது’ என்று அந்த அறிக்கை விபரித்துள்ளது.

‘தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற எல்லைகளுடன் மட்டும் தனது பணியை மட்டுப்படுத்தாமல் தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்தல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டில் கரிசனை கொள்ளுதல், பொருளாதாரத்தை- வளப்பயன்பாடுகளை உச்சமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும்’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

யாழ்ப்பாணத்தில் நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்றிருந்த கூட்டம் ஒன்றில், “தமிழ் மக்கள் பேரவை” என்ற புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்!..

மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசன், நல்லை ஆதீன குருமுதல்வர், உள்ளிட்ட அரசியல்வாதிகள், மதகுருமார், மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் வரை பங்கேற்றனர்.

இணைத்தலைவர்களாக:

01. திரு.க.வி.விக்கினேஸ்வரன் (முதலமைச்சர்- வடமாகாண அவை)
02. திரு.பி.லக்ஸ்மன் (மருத்துவர் – யாழ். போதனா மருத்துவமனை)
03. திரு.ரி.வசந்தராஜா (செயலாளர் – மட்டக்களப்பு சிவில் சமூக அமையம்)
நடவடிக்கை குழு உறுப்பினர்கள்:
01. சிவசிறீ சபா வசுதேவ குருக்கள் (நல்லை ஆதீனம்)
02. வண ஜெயபாலன் குரூஸ் (மன்னார்)
03. வண எஸ்.வி.பி மங்களராஜா
04. திரு சி.கே.சிற்றம்பலம் (உபதலைவர் – இலங்கை தமிழ் அரசு கட்சி)
05. நா.உ த.சித்தார்த்தன் (தலைவர் – புளட்)
06. கந்தையா பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈபிஆர்எல்எப்)
07. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தலைவர் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
08. பேராசிரியர் வி.பி.சிவநாதன் (போசகர் – யாழ்ப்பாணம் பொருளாதார நிபுணர் சங்கம்)
09. மருத்துவர் கே.பிரேமகுமார் (மேனாள் தலைவர் – விவசாய பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்)
10. திரு கே.சதாசிவம் (மட்டக்களப்பு)
11. திரு எஸ்.சோமசுந்தரம் (பொருளாளர், மட்டக்களப்பு சிவில் சமூக அமையம்)
12. திரு முரளீதரன் (திருகோணமலை)
13. திரு வி கோபாலபிள்ளை (அம்பாறை)
14. மருத்துவர் ஜி.திருக்குமாரன் (தலைவர் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம்)
15. மருத்துவர் ஏ.சரவணபவான் (துணைத்தலைவர் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம்)
16. வண ரவிச்சந்திரன் (யாழ்ப்பாணம் மறைமாவட்டம்)
17. சட்டவாளர் வி.புவிதரன் (தலைவர் – தமிழ் சட்டவாளர்கள் சங்கம்)
18. திரு என்.சிங்கம் (செயலாளர் – தமிழ் சிவில் சமூக அமையம்)
19. திரு என்.இன்பநாயகம் (தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்)
20. திரு எம்.சிவமோகன் (இரணைமடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு)
21. திரு தேவராஜ் (தலைவர் – வவுனியா சிவில் சமூக அமையம்)

ஏற்பாட்டு குழு:

01. மருத்துவர் எஸ் சிவன்சுதன்
02. திரு என் விஜயசுந்தரம்
03. திரு அலன் சதிதாஸ்
04. திரு எஸ் ஜனார்த்தனன்

இயங்கவுள்ள உபகுழுக்கள் :

01. அரசியல் துறை
02. கல்வித்துறை
03. நலத்துறை
04. சுற்றாடல் துறை
05. விவசாய துறை
06. மீன்பிடி துறை
07. மீள்குடியேற்ற துறை
08புனர்வாழ்வு துறை
09. கலை துறை
10. பண்பாட்டு துறை

Share.
Leave A Reply

Exit mobile version