வேலூர்: குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், காதலன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கவி. பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு மாணவியான இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
வேறு வேறு சாதியை சேர்ந்த இவர்களின் காதல் சங்கவி வீட்டிற்கு தெரியவர, சங்கவியை கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த சங்கவி நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விஷயம் ஆனந்தனுக்கு தெரிந்ததும் பதறி போய் சங்கவியின் உடலை பார்க்க சென்றிருக்கிறார். ஆனந்தனை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த சங்கவியின் உறவினர்கள், ஆனந்தனை அடித்து உதைத்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ஆனந்தன் தப்பி ஓடியிருக்கிறார். இருப்பினும், பத்து பதினைந்து பேர் ஊருக்குள் புகுந்து, ஆனந்தனின் பெற்றோர் முன்னிலையிலேயே அவரை அடித்திருக்கின்றனர்.
இதில் மயங்கி விழுந்த ஆனந்தனை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கு ஆனந்தன் கோமா நிலைக்கு சென்றதால், அங்கிருந்து நேற்று மதியம் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஆனந்தன் உயிரிழந்தார்.
இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இரண்டு சாதிக்காரர்களுக்குள் பிரச்னை ஏற்பட கூடும் என்பதால் குடியாத்தத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காதல் பிரச்னையால் இரண்டு உயிர்கள் பலியான சம்பவம் குடியாத்தத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அ.அச்சணந்தி