தொட்டதற்கெல்லாம் கூட்டணி அமைப்பது அந்தக் காலத்தில் இருந்து வரும் ஒரு அரசியல் கலாசாரம். தனது சொந்த சுயநலத்திற்காக யாரையாவது கூட்டுச் சேர்த்துக் கொண்டு காரியத்தை முடித்துக் கொள்வதற்குத் தான் இந்த கூட்டணி எல்லாம். இதுவல்லாமல் பிரமாதமாக வேறு எந்த அர்த்தமும் இல்லை.

இப்போதெல்லாம் சர்வதேச கூட்டணிகளுக்கு பஞ்சமில்லை. பட்டாசு வெடித்தாலும் கூட்டணி அமைத்து கண்டன தீர்மானம் நிறைவேற்றுவார்கள். அதற்கு தோதாக ஐ.எஸ். என்ற குழுவும் வந்து வாய்த்திருக்கிறது. அதனை வைத்துக் கொண்டு சர்வதேச நாடுகள் நடத்தும் குறும்புத் தனங்களுக்கு பஞ்சமில்லாமல் போய்விட்டது.

அமெரிக்கா ஒருபக்கம் கூட்டுச் சேர்த்துக் கொண்டு ஐ.எஸ்ஸை தாக்குகிறது. மறுபக்கம் ரஷ்யா கூட்டணியாக தாக்குகிறது. போதாக்குறைக்கு அவசரத்திற்கு பிரிட்டன், பிரான்ஸ் தனித் தனியே தாக்கிவிட்டு போகின்றன.

இது போதாதென்று சவூதி அரேபியாவும் இப்போது கிளம்பிவிட்டிருக்கிறது. அமெரிக்கா அண்மையில் பேச்சோடு பேச்சாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம் நாடுகளின் பங்களிப்பு போதாதென்று சொல்லிவிட்டு வேலையை பார்க்க போய்விட்டது.

>

அதனை பிடித்துக் கொண்டு சவூதி அரேபியா தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம் நாடுகளின் கூட்டணி ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ஏற்கனவே எக்கச்சக்கமாக கூட்டணிகள் குவிந்து கிடப்பதால் சவூதியின் இந்த கூட்டணி, சர்வதேச அளவில் பெரிதாக பரபரப்பு காட்டவில்லை.

ஆனால் ‘தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம் நாடுகளின் கூட்டணி’ என்ற கோட்பாடு இப்போதைக்கு தெருவுக்கொரு கூட்டணிகளை விடவும் பலம்கொண்டது.

என்ன பிரச்சினை என்றால் கூட்டணி அமைக்கப்பட்ட இடம், பொருள், ஏவல் தான் பிரச்சினையே. ஆரம்பத்தில் சவூதி இதனை தனித்து செய்யப்போனது தான் வெறும் சோடா போத்தல் திறந்தது போலானது.

அதனாலேயே ஆரம்பத்திலேயே சொதப்பிவிட்டது. சவூதி கூட்டணி அறிவித்து 24 மணி நேரம் கழிவதற்குள் பெயர் வாசிக்கப்பட்ட சில நாடுகள், ஆளை விட்டால் போதும் என்று குறிப்பிட்டு விட்டன.

எம்மை ஆட்டத்தில் சேர்த்தது எமக்கே தெரியவில்லை என்று சொல்கிறது பாகிஸ்தான். நாம் முடிவு எடுக்கவே இல்லை அதற்குள் வம்புக்கு இழுத்துவிட்டீர்களே என்று இந்தோனேஷியா புலம்புகிறது.

மறுபக்கம் மலேஷியாவோ, திட்டமென்றால் நன்றாகத்தான் இருக்கிறது சண்டையென்றால் எம்மால் வர முடியாது என்று சொல்லிவிட்டது.

இதையெல்லாம் பார்க்கும்போது சவூதி தன்னிஷ்டத்திற்கு ஏதோ பொழுதுபோக்காக அறிவித்த கூட்டணி போலத்தான் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக சவூதியின் தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம் நாடுகளின் கூட்டணியில் 34 நாடுகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

வளைகுடா, ஆபிரிக்கா, ஆசியா என்று பரந்த ஒரு கூட்டணி. ஆனால் என்ன, அனைத்து நாடுகளும் போல் ஏற்கனவே சவூதியின் எண்ணெய் அதிகாரத்திற்கு பயந்து அதற்கு ஆமா போடும் நாடுகளாகத் தான் தெரிகின்றன.

இதிலே இருக்கும் சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜோர்தான் நாடுகளை எடுத்துக் கொண்டால் அவை ஏற்கனவே அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் சேர்ந்துகொண்டு சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக கண்டமேனிக்கு வான் தாக்குதல்களை நடத்துகின்றன.

மறுபக்கம் சவூதி அரேபியா யெமனில் கூட்டணி சேர்ந்துக் கொண்டு செய்யும் அட்டகாசத்தை சொல்லத்தேவையில்லை. கிட்டத்தட்ட பிராந்தியத்தில் இருக்கும் சுன்னி அரபு நாடுகள் எல்லாம் சவூதியின் இந்த கூட்டணியில் சேர்ந்து கொண்டு ஈரான் ஆதரவு ஷியா ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது மழையே இல்லாத யெமன் வானில் குண்டு மழை பொழிகின்றன.

பொழுது போகவில்லை என்றால் கூட யெமனுக்குப் போய் குண்டுகளை போட்டுவிட்டு வரும் வகையிலேயே அந்த உன்னத கூட்டணியின் செயல் அமைந்திருக்கிறது.

இப்படிப்பட்ட கூட்டணியில் இருக்கும் அனைத்து நாடுகளும் சவூதியின் தீவிரவாத எதிர்ப்பு கூட்டணியிலும் தமக்கான இடத்தை பிடித்துக் கொண்டன. எனவே இவர்களின் லட்சணம் எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கூட்டணி அமைத்த கையோடு சவூதி பாதுகாப்பு அமைச்சரான இளவரசர் முஹமது பின் சல்மான் இந்த கூட்டணி சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதில் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டார். இதில் சுவாரஸ்யமான கதை முஹமது குறிப்பிடும் எந்த நாடும் சவூதியின் கூட்டணி கோட்டாவில் இல்லை.

சிரியாவின் பஷர் அல் அஸாத் அரசு செல்லாக்காசு என்று வைத்துக் கொண்டாலும் ஈராக், ஆப்கானிஸ்தான் இணைவதில் என்ன குறைந்துவிடப்போகிறது. இதிலேதான் இன்னுமொரு குளறுபடி இருக்கிறது. அதாவது எங்கே போனது ஈரான்?

சவூதி தான் அமைத்திருக்கும் கூட்டணியில் ஓமானையும் துருக்கியையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் முழுக்க முழுக்க சுன்னி சார்பு, தனது கருத்துடன் ஒத்துப்போகும் நாடுகளாகவே இக்கின்றன.

பிராந்தியத்தின் பிரதான ஷியா நாடான ஈரான் இணைக்கப்படவில்லை. மற்றுமொரு ஷியா நாடும் தீவிரவாதத்தால் அதிகம் அடிபடும் நாடுமான ஈராக்கும் இதனாலோ என்னவோ இணையவில்லை.

இப்படியிருக்கும் சவூதியின் இந்த கூட்டணி ஒரு தலைப்பட்சமானது என்று தெரிவதோடு அது பிரச்சினையை மேலும் குழப்புவதற்கு சிறப்பாக காரியமாற்ற வாய்ப்புகள் அதிகம்.

மொட்டையாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம் நாடுகளின் கூட்டணி என்றதற்கென்ன உருப்படியான திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்த கூட்டணியின் கூட்டு நடவடிக்கை மையம் ஒன்று சவூதி தலைநகர் ரியாதில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டு மையத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்று எந்த தகவலும் இல்லை.

தலைகால் புரியாமல் தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று அமெரிக்கா பாணியில் அறிவித்து விட்டால் என்னவும் செய்யலாம் என்ற நினைப்பில் சவூதி இருக்கிறதோ தெரியவில்லை. தீவிரவாதம் என்பதற்கு இன்றுவரை எல்லோரும் ஒத்துக்கொள்ளும்படி எவரும் வரைவிலக்கணம் சொன்னதாக தெரியவில்லை.

ஐ.எஸ்ஸுக்கு எதிராக தாக்குதல் நடத்தவென்று குறிப்பிட்டால் அமெரிக்கா, ரஷ்யாவை விடவா இந்த சவூதி கூட்டணி பெரிதாக சாதிக்கப்போகிறது.

உண்மையில் தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம் நாடுகளின் கூட்டணி என்று உருப்படியான கூட்டணி அமைக்கப்படுமேயானால் அது ஆயுதத்தை தூக்கிக் கொண்டு போய் அர்த்தம் இல்லாமல் சண்டை பிடிப்பதாக இருக்க முடியாது. அது ஐ.எஸ்., அல் கொய்தா போன்ற மூளை குழம்பிய ஆட்களிடம் இருந்து முஸ்லிம் உலகையும் இஸ்லாத்தையும் பாதுகாப்பதற்கான தீர்வு சொல்லும் அமைப்பாகவே இருக்க வேண்டும்.

ஆனால் அப்படி ஒரு தீர்வைச் சொல்வதற்கு தகுதியான முஸ்லிம் நாடுகளை தேடுவதே பெரிய சிக்கலாகப் போய்விடும். ஆழமாகத் தோண்டிப் பார்த்தால் தீவிரவாதத்திற்கு எதிராக இப்போது கூட்டுச் சேர்ந்திருக்கும் அதிகமான நாடுகளே அந்த தீவிரவாதம் உருவாக காரணமாக இருந்தவை என்பது தெரிந்துவிடும்.

எஸ். பிர்தெளஸ் …

Share.
Leave A Reply

Exit mobile version