யாழ்ப்பாணத்தில் உள்ள சமூகவிரோதிகளின் சிம்மசொப்பனமாக விளங்கும் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று கண்ணீர் விட்டு கலங்கி அழுத காட்சிகள் எல்லோர் கண்களையும் கலங்க வைத்தது.

தனக்கு கல்வி கற்பித்த ஜென். ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியர் ஜீவானந்தம் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் கண்கலங்கி அழுதுள்ளார்.

ஒரு ஆசிரியன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இளஞ்செழியனின் அழுகை அப்பட்டமாகக் காட்டியுள்ளது.

ஜீவானந்தம் கற்பித்த மாணவனான மேல்நீதிமன்ற நீதிபதியாக உள்ள இளஞ்செழியனின் பண்பையும் துணிவையும் குற்றவாளிகளுக்கு கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியத்தையும் வைத்தே ஜீவானந்தம் ஆசிரியரின் ஆற்றலும் வழிநடத்தும் திறமையும் மக்களுக்குப் புரிந்திருக்கும்.

தற்போது பணத்தாசையும் தவறான நடத்தைகளையும் கொண்டு அலையும் ஆசிரியர்கள் இனிவரும் காலம் நல்ல நடத்தையுள்ள பண்புள்ள மாணவர்களை உருவாக்குவார்களா? என்பது சந்தேகமே.

அதே நேரம் இனி வரும் காலம் இவ்வாறான ஒரு ஆசிரியனுக்காக மிகவும் உயர் தர பதவியில் இருக்கும் ஒரு மாணவன் அழுவானா என்பதும் சந்தேகமே! சென்ஜோன் கல்லுாரி ஆசிரியர் ஜீவானந்தம் மற்றும் அவரது மாணவனான இளம்செழியன் ஆகியோருக்கு யாழ்ப்பாணச் சமூகம் தலைவணங்க வேண்டும்.

ஆசிரியர் திலகம் எஸ். பி ஜீவானந்தம்….!

யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியின் ஆரம்ப பிரிவு தலைமை ஆசிரியராக விளங்கியவர் எஸ். பி. ஜீவானந்தம் அவர்கள்.

இவருடைய அறிவூட்டலில், வழிகாட்டலில் வளர்ந்து பல இலட்சம் மாணவர்கள் உன்னத நிலையை அடைந்து உள்ளனர்.

அரியாலை மேற்கை சேர்ந்த ஜீவானந்தம் ஆசிரியர் எப்போதும் சைக்கிள் வண்டியிலேயே பயணம் செய்வார். தமிழ் தேசிய உடையிலேயே தோன்றுவார். பாடசாலையில் கையில் பிரம்புடன் சுற்றித் திரிவார்.

ஆரம்ப பிரிவுக்கு உட்பட்ட அனைத்து வகுப்புக்களையும் இவர் சோதனை செய்கின்றமை வழக்கம். சோதனை என்பதை விட இவர் ரோந்து செல்கின்றார் என்று சொல்கின்றமையே பொருத்தமானது.

இவர் செருமக்கூட தேவை இல்லை. இவர் நடந்து வருகின்ற காலடிச் சத்தம் கேட்டாலே போதும். ஊசி நிலத்தில் விழுந்தால் சத்தம் கேட்கின்ற அளவுக்கு அனைத்து வகுப்புக்களிலும் மயான அமைதி நிலவும்.

இவர் ஆசிரியர் பதவிக் காலத்தில் விடுப்பு பெற்றார் என்று எந்த மாணவனுக்குமே நினைவு இராது. பாடசாலைக்கும் சரி, வகுப்பறைக்கும் சரி இவர் ஒரு நிமிடம்கூட பிந்தி வந்தார் என்று கூற முடியாது.

மாணவர் எவரை, எங்கு கண்டாலும் இவர் கூறுகின்ற முதலாவது ஆலோசனையிலேயே வாழ்க்கையின் தத்துவம் முழுவதுமே அடங்கி இருக்கின்றது.

அப்பனின் பெயரை மண்ணாக்காதே, மண்ணின் பெயரை நாசமாக்காதே என்பதுதான் இவரின் ஜீவ வார்த்தை.

இவர் கற்பிக்கின்ற பாடம் தமிழ். அப்போது தரம் 6 வகுப்பு பாடத் திட்டத்தில் கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா? என்று ஒரு பாடம் காணப்பட்டது. இது ஒரு கதைதான். பெற்றோரை ஒழுங்காக பார்க்க தெரியாதவன் தவம் செய்ய போய் எந்தவொரு பயனுமே இல்லை

இதைதான் இக்கதை சொல்கின்றது என்று பாடத்தின் ஆரம்பத்திலேயே இவர் சொன்னது இன்றும் பசுமரத்து ஆணி போல பரி. யோவான் கல்லூரி மாணவர்களின் மனங்களில் பதிந்து காணப்படுகின்றது.

இவர் வீதியில் முன்னால் வருகின்றபோது மாணவர்கள் எவ்வளவு வேகத்தில் வந்தாலும்கூட சைக்கிளை விட்டு இறங்கி , தொப்பியை கழற்றி மரியாதை செய்வார்கள். முன்னாள் மாணவர்கள் இவரை எங்கு காண்கின்றபோதிலும் சரி நெடுஞ்சாண் கிடையாக கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்.

இவர் ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பிற்பாடும்கூட சமூக சேவையிலேயே முழுவதும் ஈடுபட்டார். இவருக்கு எவ்வித கெட்ட நடத்தையும் கிடையாது. இவரை நம்பி எத்தனை கோடி ரூபாயையும் கொடுக்கலாம், அத்தனைக்கு நேர்மையானவர். இவர் அண்மைய சில வருடங்களுக்கு முன் பிரித்தானியாவுக்கு சென்று இருந்தார். இங்கு இவருக்கு முன்னாள் மாணவர்களால் விமான நிலையத்தில் வைத்து செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

இவர் இரு வாரங்களுக்கு முன்னர் வீட்டில் கிணற்றில் தவறி விழுந்து இறந்து போனார். இறக்கும்போது வயது 85. ஒருவர் எப்படி வாழ்ந்தார்? என்பதை அவருடைய செத்த வீடு காட்டிக் கொடுக்கும் என்று சீனப் பழமொழி ஒன்று உள்ளது.

யாழ். மேயர் துரையப்பாவின் மரணச் சடங்குக்கு பிற்பாடு மிக மிக அதிகமானவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்திய செத்த வீடு இதுவாகத்தான் இருக்க வேண்டும். கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பரி. யோவான் கல்லூரி பழைய மாணவர்கள் இவரின் மரணச் சடங்கை முன்னின்று நடத்தினார்கள்.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இவரின் மரணச் செய்தி குறித்து கேள்விப் பட்டமையுடன் இந்தியாவில் இருந்து அவசர அவசரமாக திரும்பி வந்து மரணச் சடங்கை தலைமை தாங்கி நடத்தினார்.

கண்டிப்புக்கு மிகவும் பெயர் போன இளஞ்செழியன் கண்ணீரும் கம்பலையுமாக காணப்பட்டார். இளஞ்செழியன் இங்கு ஆற்றிய இரங்கல் உரை ஒரு உன்னத ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? என்பதை மட்டும் அல்லாமல் ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும்? என்பதையும் உணர்த்தி நிற்கின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version