இலங்கையுடனான உறவுகளை அமெரிக்கா வலுப்படுத்திக் கொண்டுள்ள போதிலும், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய விவகாரங்களில், தனது பிடியை அமெரிக்கா தளர்த்திக் கொள்ளவில்லை என்பதை, ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் விசா விண்ணப்பத்தை அமெரிக்கா முடக்கியுள்ளதன் மூலம் உணர முடிகிறது.
முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா கடந்த ஞாயிற்றுக்கிழமை (13ஆம் திகதி) அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.
அமெரிக்காவில் தங்கியுள்ள தனது இரு மகள்மாரையும் பார்வையிடுவதும், அங்குள்ள இலங்கையர்களுடன் கலந்துரையாடல் நடத்துவதும் தான் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பயணத் திட்டத்துக்கான அடிப்படைக் காரணமாக கூறப்படுகிறது.
அதற்காக அவர் விமானப் பயணச்சீட்டையும் முன்பதிவு செய்திருந்தார்.
விசாவுக்கு விண்ணப்பித்து இரண்டு வாரங்களாகிய போதிலும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவரது, விசா விண்ணப்பம் தொடர்பாக எந்தப் பதிலையும் வழங்கவில்லை.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இதுபற்றி அமெரிக்கத் தூதரகத்திடம் தொடர்பு கொண்ட போது, விசா விண்ணப்பத்துக்கு இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை என்று பதிலளிக்கப்பட்டதாக, சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு செய்திருந்த விமானப்பயணச்சீட்டை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடைசி நேரத்தில் ரத்துச் செய்ய நேரிட்டதாகக் கூறப்படுகின்றது.
அமெரிக்காவில் உள்ள இலங்கை சமூகத்தினரைச் சந்திக்க வருமாறு, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமே, சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், ஆனால், அவருக்கு விசா வழங்க அவர்களே மறுத்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியிருக்கிறார் சேனக டி சில்வா.
அமெரிக்காவில் வதிவிட உரிமையைப் பெற்றிருந்த சரத் பொன்சேகா, கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கு பயணம் மேற்கொள்ளாத நிலையில் அவரது வதிவிட உரிமை காலாவதியாகியிருந்தது.
சரத் பொன்சேகாவின் விசா விண்ணப்பத்தை பகிரங்கமாக நிராகரிக்காமல் அதனை முடக்கி வைத்திருந்து அவரது பயணத்தை தடுத்திருக்கிறது அமெரிக்கா.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை புதியதொரு விடயமல்ல. ஏனென்றால், கடந்த காலங்களில் இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு அமெரிக்கா இவ்வாறு விசா வழங்க மறுத்திருக்கிறது.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போன்றவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கவில்லை, அல்லது, தமது பாதுகாப்பு கல்லூரிகள், பயிற்சிக் கருத்தரங்குகளில் அனுமதி வழங்கவில்லை.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை இராணுவத்தினர் மீதான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டியே அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
இந்தநிலையில், அமெரிக்காவின் விசா நடைமுறைகளின் படி, தனது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்பதை சரத் பொன்சேகா உணராமல் இருந்திருக்கமாட்டார்.
ஏனென்றால், சரத் பொன்சேகாவே, இறுதிக்கட்டப் போருக்குத் தலைமை தாங்கியவர்.
போருக்குத் திட்டமிட்டு, தலைமை தாங்கி,இராணுவத்தை வழி நடத்தியவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தான்.
இறுதிக்கட்டப் போரில், மீறல்கள் இடம்பெற்றன என்பது சர்வதேச சமூகத்தின் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது.
இந்த விடயத்தில் அமெரிக்கா இன்னும் கூடுதலான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று கூடச் சொல்லலாம்.
அமெரிக்காவிடம் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் பற்றிய ஆதாரபூர்வமான சான்றுகளும், சாட்சியங்களும் இருப்பதாக பரவலான கருத்துகள் உள்ளன.
குறிப்பாக, போர் நடந்த பகுதிகளில் அமெரிக்கா செய்மதி மூலம், படங்களை எடுத்திருந்தது. அவை போர்க்குற்றங்களுக்கான வலுவான ஆதாரங்களாக குறிப்பிடப்படுகின்றன.
இவை தவிர, வேறும் பல நேரடிச் சாட்சிகளையும் அமெரிக்கா வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் சில இராணுவ அதிகாரிகளும் அடங்கியிருப்பதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகின.
ஆனால், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவைப் பொறுத்தவரையில், தாம் நடத்திய போரில் போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதே அவரது உறுதியான நிலைப்பாடு.
எனினும், வெள்ளைக்கொடி விவகாரம் உள்ளிட்ட ஒரு சில விதிவிலக்கான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனாலும், போர்க்குற்றங்கள் இடம்பெற்றது நிரூபிக்கப்பட்டால், அதற்குத் தான் பொறுப்பேற்கத் தயார் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.
இராணுவத்துக்குப் பொறுப்பானவர் என்ற வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வந்தாலும், தனது இராணுவம் தவறு செய்யவில்லை என்பதே அவரது நிலைப்பாடாக இருக்கிறது.
தனக்குத் தெரியாமல்- மேலிருந்து இடப்பட்ட உத்தரவுகளால் எங்கேனும் ஒன்றிரண்டு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றுக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சூழலில் தான், சரத் பொன்சேகாவுக்கான கதவை அமெரிக்கா அடைத்திருக்கிறது.
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு விசா வழங்காமல் விட்டதன் மூலம், அமெரிக்கா ஒரு செய்தியைக் கூற வந்திருக்கிறது.
இலங்கையுடன் அண்மையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கங்கள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்ற அமெரிக்க கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தாது என்பதே அந்தச் செய்தி.
சரத் பொன்சேகா ஒன்றும் அமெரிக்காவுக்கு விரோதமானவர் அல்ல.
அமெரிக்காவின் ஆசியுடன் தான் அவர் 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
அதைவிட, கடந்த 2010ஆம் ஆண்டு கடைசியாக அமெரிக்கா சென்றிருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்திருந்தனர்.
அந்த விசாரணை, கோத்தாபய ராஜபக் ஷவுக்கு எதிரான சாட்சியத்தை திரட்டும் நோக்கில் நடத்தப்பட்டதாகவே மஹிந்த ராஜபக் ஷ தரப்பு குற்றம்சாட்டியது.
விசாரணை நடத்தப்படவுள்ளது என்பதை அறிந்து சரத் பொன்சேகாவை உடனடியாக நாடு திரும்புமாறு கோத்தாபய ராஜபக் ஷ பணித்திருந்தார்..
சரத் பொன்சேகா அதற்குப் பின்னர் அமெரிக்கா சென்றிருக்கவில்லை. அதனால் அவர் எந்தச் சர்ச்சைகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ள நேரவில்லை.
இப்போது அவர், அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டுள்ளதன் மூலம், அவர் தன்னைத் சர்வதேச கண்காணிப்புக்குரியவர் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்.
மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி இலங்கைப் படை அதிகாரிகளுக்கான பயிற்சிகளை நிராகரிக்கக் கூடாது என்று, அமெரிக்காவிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
ஆனால், அமெரிக்கா இந்த விடயத்தில் அவ்வளவு இறங்கிப் போகத் தயாராக இல்லை.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களை தமது நாட்டுக்குள் அனுமதிக்க அமெரிக்கா தயாராக இல்லை.
இலங்கை விவகாரத்தில் விட்டுக்கொடுத்தால் வேறு பல நாடுகளில் உள்ள பலரும் அதே வழியைப் பின்பற்ற முனைவார்கள் என்று அமெரிக்கா கருதுகிறது.
அண்மையில் இலங்கை வந்த அமெரிக்க உயர் அதிகாரிகளான சமந்தா பவரும், தோமஸ் சானொனும், கூட, மனித உரிமைகள் நிலையில் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்பதையே வலியுறுத்தியிருக்கின்றனர்.
இதனை அடிப்படையாக வைத்தே பாதுகாப்பு சார்ந்த உறவுகளுக்கான கதவைத் திறக்க திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்கா.
அரசாங்கம் நடத்தவுள்ள போர்க்குற்ற விசாரணைகளின் போக்குத் தான், சரத் பொன்சேகாவுக்கு மட்டுமன்றி, ஏனைய இலங்கை படை அதிகாரிகளுக்கும் அமெரிக்க விசா கிடைக்குமா? இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கும்.
-சுபத்ரா