பிறக்கப்போகின்ற 2016 ஆம் ஆண்டில் இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணப்படும் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் ஆணித்தரமான நம்பிக்கையாகும்.
இன்றைய தமிழ் அரசியலில், அதனை ஒரு தாரக மந்திரமாகவே அவர் ஒலித்துக் கொண்டிருக்கின்றார்.
யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களாகப் போகின்றது. இழுபறி நிலையில் உள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும்.
யுத்தத்திற்கு மூல காரணமாகிய இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது சர்வதேச மட்டத்திலும் உள்ளூர் அரசியல் மட்டத்திலும் பலவாறாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
இன்னும் வலியுறுத்தப்படுகின்றது.
ஆயினும், ஒரு அரசியல் தீர்வு காண்பதற்குரிய ஆக்கபூர்வமான முயற்சிகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை
இந்தச் சூழலில் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள புதிய அரசாங்கமானது 2016 ஆம் ஆண்டு நிச்சயமாக ஒரு அரசியல் தீர்வைத் தரும். அல்லது அரசியல் தீர்வைக் கொண்டு வரும் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அடித்துக் கூறி வருகின்றார்.
முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் மனித பேரவலத்தை ஏற்படுத்தி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் பிரச்சினைகளைக் கூட்டுவதற்கே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வழி வகுத்திருந்தார்.
எனவே, அவரை அரியணையில் இருந்து வீழ்த்தி, புதிய ஜனாதிபதியை ஆட்சியில் அமர்த்துவதற்கான முயற்சிகளுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.
அதனைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் அதன் தலைமையிலான தமிழ் மக்களும் பேராதரவை வழங்கியிருந்தார்கள்.
புதிய அரசாங்கம் நல்லாட்சிக்கானதோர் அரசாங்கமாகக் கருதப்பட்ட போதிலும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு அப்பால், அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்த நல்லாட்சி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.
இது, தமிழ் மக்களின் அரசியல் ஆதங்கமாகும். நடவடிக்கைகளைத்தான் எடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. நல்லெண்ண சமிக்ஞைகளையாவது வெளிப்படுத்தியிருக்கலாம் தானே என்பது அவர்களின் அரசியல் ஏக்கமாகப் பரிணமித்திருக்கின்றது.
இந்த நிலையிலேயே, அரசியல் பிரச்சினைக்கு, புதிய ஆண்டில் தீர்வு காணப்படும். எனவே, அமைதி காக்க வேண்டும். பொறுமையாகவும் பொறுப்போடும் நடந்து கொள்ள வேண்டும் என்று தலைவர் சம்பந்தன் வலியுறுத்தி வருகின்றார்.
இதன் அடிப்படையிலேயே இராணுவ மேலாதிக்கத்திற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளது, மற்றும்படி உப்புசப்பற்றதொரு வரவு –செலவுத் திட்டமாகும் என்று பலராலும் விமர்சித்து, எதிர்க்கப்பட்ட அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தை சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரித்து வாக்களித்திருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு புதிய அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே, அரசாங்கத்திற்குத் தொடர்ந்து, எல்லா வழிகளிலும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்பது சம்பந்தனின் நிலைப்பாடாகத் தெரிகின்றது.
நல்லாட்சி நம்பிக்கையூட்டவில்லையே
அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளாகத் தோற்றம் பெற்றுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவித்து, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய கடமையை அரசாங்கம் செய்தல், வடமாகாண சபை அர்த்தமுள்ள வகையில் செயற்படுவதற்குத் தேவையான சூழலை உருவாக்குதல் போன்ற விடயங்களில் நல்லாட்சிக்கான புதிய அரசாங்கம் எந்தவிதமான அக்கறையையும் தீவிரமாகச் செலுத்தியதாகத் தெரியவில்லை.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அளித்திருந்த வாக்குறுதிகள், சட்டமா அதிபருடைய அதிகாரச் செயற்பாட்டுக்குள் ஆரவாரமின்றி அடங்கிவிட்டன.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது, ஒரு சிலரை பிணையில் செல்ல அனுமதித்ததோடு தேங்கி நிற்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நவம்பர் 7 ஆம் திகதியென்ற காலக்கெடுவுடன் கூடிய உறுதிமொழி, முடமாகிவிட்டது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு (பிணையில் செல்ல அனுமதிக்குமாறு) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு விடுத்ததாகக் கூறப்படும் உத்தரவு, நடைமுறையில் செயலற்றுப் போய்விட்டது.
இராணுவத்தினருடைய பிடியில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் முன்னைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கமைவாகவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் கிள்ளிக்கொடுத்த கணக்கில் விடுவிக்கப்பட்டன.
மேலும் காணிகள் விடுவிக்கப்படும் என்ற அறிவிப்பு கவர்ச்சிகரமான அரசியல் அறிவிப்பாக மட்டுமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நடைமுறையில் எந்தவொரு அசைவையும் இதில் காண முடியவில்லை.
இதனால் புதிய அரசாங்கம் தங்களுடைய பிரச்சினைகளுக்கு நிச்சயமாகத் தீர்வு காணும். அதற்கான நடவடிக்கைகளைத் துணிந்து மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மனங்களில் இதுவரையில் துளிர்க்கவில்லை.
ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள், அரசாங்கத்தை நம்புங்கள் என்று தூண்டி வருகின்றது.
இத்தகைய பின்னணியில்தான், புதிய அரசியலமைப்பொன்று கொண்டு வரப்படவுள்ளது. அந்த அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் இந்தத் தீர்வுத் திட்டம் அமைந்திருக்கும் என்ற மற்றுமொரு தகவலும் அரச தரப்பில் இருந்து கசியவிடப்பட்டிருக்கின்றது.
அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.
எனவே, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதைப் போன்ற நல்லதொரு சந்தர்ப்பம் அமையமாட்டாது என்று வாதிடவும் இடமுண்டு.
இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் கண்டு, அதனை நிரந்தரமாக்குவதற்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவந்தே ஆக வேண்டும்.
அவ்வாறு தீர்வொன்றைக் கண்டு அதற்காகவே அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதிலும் பார்க்க, புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும்போது, இனப்பிரச்சினைக்கான தீர்வை அதில் உள்ளடக்குவது சாதுரியமான ஒரு செயற்பாடாகவும் கருதலாம். அதில் தவறில்லை.
ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால், இனப்பிரச்சினைக்கு எவ்வாறான ஒரு தீர்வு காணப்படும் என்பது குறித்து, அரசியலமைப்பை மாற்றம் செய்வதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக இழுபட்டு, இழுபட்டு, புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு முற்கூட்டியே பேச்சுக்கள் நடத்தப்படாமல், எழுந்தமானத்தில் தீர்வு காணும் வகையில், அரசியலமைப்பில் விடயங்களை உள்ளடக்க முடியுமா என்பது கேள்விக்குரியது. விவாதத்துக்கும் உரியது.
தீர்வு என்ன?
புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு அதில் உள்ளடக்கப்படும் என்று அரசாங்கம் கூறினாலும், அந்தத் தீர்வு என்ன என்பது எவருக்கும் தெரியாது.
பிறக்கவுள்ள புத்தாண்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று மலைபோல நம்பியிருக்கின்ற கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்காவது அந்தத் தீர்வு என்ன என்பது தெரிந்திருக்கின்றதா என்பது தெரியவில்லை.
கூட்டமைப்பினரும், இனப்பிரச்சினைக்குரிய தீர்வு என்ன என்பது குறித்த ஆலோசனைகளை இதுவரையில் முன்வைக்கவில்லை.
வெறுமனே ஐக்கிய இலங்கைக்குள் ஒரு சமஷ்டி முறையிலான ஒரு தீர்வையே மக்கள் விரும்புகின்றார்கள். அத்தகைய தீர்வொன்றே பொருத்தமானதாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர, அந்த சமஷ்டி எத்தகையது, என்பது பற்றிய விளக்கமுமில்லை. விபரங்களும் முன்வைக்கப்படவில்லை.
சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு என்பது பல்லின மக்களையும் பல்வகையான சமூகங்களையும் கொண்ட ஒரு நாட்டிற்குப் பொருத்தமானது என்பதில் எந்தவிதமான ஐயமும் கிடையாது.
ஆனால், இலங்கையைப் பொறுத்தமட்டில், சமஷ்டி முறையிலான ஒரு அரசியலமைப்புக்கு சிங்கள மக்கள் மத்தியிலும்சரி, சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியிலும்சரி, ஆட்சியில் உள்ள அரச தரப்பினரிடமும்சரி, ஆதரவு காணப்படவில்லை. சமஷ்டி என்ற சொல்லானது, அவர்களுடைய அரசியல் போக்கில் தீண்டத்தகாத ஒரு சொல்லாகவே பார்க்கப்படுகின்றது.
மிகச் சிறிய நாடாகிய இலங்கைத் தீவில் சமஷ்டி முறையில் ஒரு அரசியல் தீர்வு காணப்படுமேயானால், அது பிரிவினைக்கு வழிவகுக்கும்.
நாட்டை இரண்டாகத் துண்டாடவே வழிவகுக்கும் என்ற அரசியல் அச்சம் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் இந்த நாட்டை இரண்டாகத் துண்டாடி, ஈழம் என்ற அவர்களுக்கான ஒரு தனிநாட்டை உருவாக்கிக் கொள்வதற்கான சட்டரீதியான அந்தஸ்தை சமஷ்டி அரசியல் முறை வழங்கிவிடும் என்பது அவர்களின் அரசியல் நிலைப்பாடாக உள்ளது. அவர்களின் அரசியல் நம்பிக்கையாகவும் அது காணப்படுகின்றது.
ஒற்றையாட்சியின் கீழ் மிகவும் குறைந்த அளவிலான அதிகாரப் பங்கீட்டைக் கொண்டதோர் அரசியல் தீர்வே அவர்களுடைய இலக்காக, இதுவரையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவர்களைப் பொறுத்தமட்டில், ஐக்கிய இலங்கையும், ஒற்றையாட்சியும் கேள்விக்கு அப்பாற்பட்டது.
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், சிங்கள பௌத்த மேலாதிக்கம் கொண்ட ஒற்றையாட்சி முறையின் கீழ், சம அந்தஸ்து கொண்ட அதிகாரங்களற்ற ஒரு அரசியல் தீர்வே அவர்களுடைய மனங்களில் நிழலாடுகின்றது.
ஆனால், ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான தீர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்குரிய மேலோட்டமான வடிவம் குறி த்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இணைந்த வடக்கு கிழக்கு தாயகத்தில் சுயநிர்ணயமுள்ள அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய ஒரு அரசியல் தீர்வே வேண்டும் என்பது கூட்டமைப்பின் நிலைப்பாடு.
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், சிங்கள மக்களும், சிங்கள அரசியல் கட்சிகளும் அரசாங்கமும் கொண்டிருக்கின்ற நிலைப்பாடும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கொண்டுள்ள நிலைப்பாடும் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான பாரிய வித்தியாசங்களைக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.
இந்த நேரெதிர் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அரசாங்கத் தரப்பினரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் ஒரு நேர்கோட்டில் எந்தப் புள்ளியின் அடிப்படையில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி ஒரு இணக்கப்பாட்டிற்கு வர முடியும் என்பது சிக்கல்கள் நிறைந்ததொரு கேள்வியாகும்.
இந்தக் கேள்விக்கு உரிய பதில் இந்த இரண்டு தரப்பினரிடமும் இருக்கின்றதா என்பதே இன்னுமொரு கேள்வியாக இருக்கின்றது.
முதன் நிலை பேச்சுக்களற்ற நிலையில் தீர்வு சாத்தியமா?
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சர்வதேசம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பவற்றுக்குப் பொறுப்பு கூறும் விடயத்தில் புதிய அரசாங்கத்திற்குக் கால அவகாசத்தையும், அரசாங்கத்தின் விருப்பத்திற்கமைவான உள்ளூர் விசாரணைப்பொறிமுறைக்குரிய இணக்கப்பாட்டையும் வழங்கி சர்வதேசம் ஒத்துழைத்துள்ளது.
அந்த ஒத்துழைப்பின் மூலம் சர்வதேசம் இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. ஆகவே, சர்வதேசத்தின் முகத்தை முறிக்காத வகையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் செயற்பட்டே ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூட்டமைப்பின் தலைமையிடம் காணப்படுகின்றது.
ஆகவே, சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு அடிபணிந்தும், அதன் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் எழக்கூடிய பின்விளைவுகளைக் கருத்திற்கொண்டும் அரசாங்கம் நிச்சயமாக இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைக் காணும் என்பது அந்தத் தலைமையின் நம்பிக்கை என்றுகூடக் கூறலாம்.
இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே சர்வதேசத்தின் பொதுவான நிலைப்பாடாகும்.
அந்தத் தீர்வானது பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக – அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யத்தக்கதாக அல்லது அவர்கள் சந்தித்துள்ள உயிரிழப்புக்கள், உடமை இழப்புக்கள், தாயகப் பிரதேச இழப்புக்கள் என்பவற்றை ஈடுசெய்யத்தக்க வகையில் அமைய வேண்டும் என்ற அழுத்தத்தை சர்வதேசம் அரசாங்கத்திற்குக் கொடுக்குமா என்பது சந்தேகமே.
வேண்டுமானால், பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்புக்களின் இணக்கப்பாட்டிற்கு அமைவான ஒரு தீர்வைக் காண வேண்டும் என்று சர்வதேசம் வலியுறுத்தலாம்.
..
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியானது, குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு காரியமாகும்.
எனவே, அத்தகைய ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் சிக்கல் நிறைந்த இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு கண்டுவிட முடியுமா என்பதைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாதுள்ளது.
அது மட்டுமல்லாமல், அரசியல் தீர்வுக்குரிய அடிப்படையான விடயங்கள் ஏற்கனவே ஆராயப்பட்டு, அதன் அடிப்படையில் பேச்சுக்கள் நடத்தி தீர்வு காணலாம் என்றதோர் இணக்கப்பாடு எதுவுமே அற்ற நிலையில் அரசியல் தீர்வு என்பது எந்த வகையில் சாத்தியமாகும் என்று தெரியவில்லை.
இலங்கையைப் பொறுத்தமட்டில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரண்டு பெரிய தேசிய கட்சிகளும் இனப்பிரச்சினை விவகாரத்தில் எதிரும் புதிருமான செயற்பாட்டையே இதுவரையில் முன்னெடுத்து வந்துள்ளன.
இப்போதுதான் இரண்டு கட்சிகளும் இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றன. அதுவும் இரண்டு வருடங்களுக்கே இணைந்து செயற்பட வேண்டும் என்ற இணக்கப்பாடும் உள்ளது. ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நல்லதொரு முயற்சி என்றே கூற வேண்டும்.
ஆயினும் தேசிய அரசாங்கமாக இருந்தாலும்கூட, அதனுள்ளே எத்தனையோ பிடுங்குபாடுகளும், முரண் நிலை மோதல்களும் காணப்படுகின்றன.
இத்தகைய ஒரு நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய ஒரு இணக்கப்பாட்டை அவர்கள் தங்களுக்குள்ளேயே எந்த அளவுக்கு விரைவாக எட்ட முடியும் என்று வரையறுத்து கூற முடியாதிருக்கின்றது.
அவ்வாறு எட்டப்படுகின்ற ஒரு இணக்கப்பாடு தமிழர் தரப்புக்கு ஒத்ததாக அமையுமா, அவ்வாறு ஒத்ததாக அமைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது பற்றியும் ஊகித்துக் கூற முடியாதுள்ளது.
எனவே, இப்போதுள்ள நிலையில் 2016 ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்று கூறுவது – அதுவும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சந்தர்ப்பத்தில் தீர்வு காண முடியும் என்பது வெறும் கையில் முழம் போடுகின்ற முயற்சியின் தோற்றமாகவே தோன்றுகின்றது.
-செல்வரட்ணம் சிறிதரன்-