இரத்த வெறி கொண்ட போர் முடிவடைந்தபோது, மூன்று வருடங்களுக்கு மேலாக தformer ltte memberனது நிலையான துணையாக இருந்த ரி – 56 இனை அவள் கைவிட்டாள்.

செல்விக்கு இப்போது தேவையானது ஒரு பூரணமான இடைவெளி. 2009ன் நடுப்பகுதியில் அரசாங்கத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு முகாமுக்குள் நுழைந்தபோது ஒரு சிறப்பான வாழக்கையை பற்றிய ஒரு கலக்கமான நம்பிக்கையையே செல்வி கொண்டிருந்தாள்.

ஒன்றரை வருடங்களுக்குப் பின் அவள் புனர்வாழ்வு முகாமை விட்டு வெளியே வந்தபோது இந்த நம்பிகைகள் உறுதி பெற்றன.

அவள் தனது சொந்த நகரமான கிளிநொச்சிக்குத் திரும்பும்போது புனர்வாழ்வு பெற்ற 24 வயது முன்னாள் போராளியை போல அல்லாது ஒரு பதின்ம வயது இளம்பெண்ணின் மனநிலையிலேயே இருந்தாள்.

ஒரு வீடு, ஒரு கணவன், பிள்ளைகள் என்கிற புதிய கனவுகள், புதிய நம்பிக்கைகள் என்கிற ஒரு இன்ப மயக்கம் அவளிடம் குடிகொண்டிருந்தது. ஆனால் அங்கு அவளுக்கு கிடைத்ததோ ஒரு பேரதிர்ச்சி.

அவளது சொந்தக் கிராமத்தவர்களே அவளை நிராகரித்தார்கள், அவள் பயன்படுத்தி தூக்கியெறியப்பட்ட பழைய பண்டம்.

சிலருக்கு அவள் இரத்தம் மற்றும் காயங்களின் கறைபடிந்த ஒரு தமிழ் புலிகளின் முன்னாள் அங்கத்தவர், மற்றவர்களுக்கு அவள் அரசாங்கத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு பெண். அவர்கள் அனைவருமே அவளை நிராகரித்தார்கள். இன்னும் சிலர் அவளை பரத்தை என்றுகூட அழைத்தார்கள்.

“ ஒரு பெண்ணின் வாழ்க்கை திருமணம் மற்றும் குழந்தைகள் இன்றி பூரணத்துவம் பெறாது என்று நாங்கள் அறிந்த வாழ்க்கை, எனது வாழ்வில் இல்லை, ஆனால் எல்லோருமே என்னை சந்தேகக் கண்களோடுதான் பார்க்கிறார்கள்” என்று கண்கள் பனிக்க செல்வி சொன்னாள்.

அவள் தனது 19ம் வயதில் 2006ம் ஆண்டு புலிகளில் இணைந்தாள். எல்.ரீ.ரீ.ஈயில் அங்கத்தவராக இருந்த அவளது சகோதரன் போரில் இறந்ததால் அவளுக்கு புலிகள் இயக்கத்தில் இணைய வேண்டி ஏற்பட்டது.

அப்போதிலிருந்து அவளது வாழ்க்கை புலிகளுடையதாக மாறிவிட்டது. யுத்தம் முடியும்வரை அது தொடர்ந்தது. “மக்கள் எங்கள் மீது நிறைய சந்தேகங்களைக் கொண்டிருக்கிறார்கள், அப்படி எதுவும் நடக்கவில்லை. புனர்வாழ்வின்போது நாங்கள் உண்மையில் மிகவும் நன்றாக நடத்தப்பட்டோம்” என்று அவள் சொன்னாள்.

செல்வியின் நிலமை தனித்துவமானது இல்லை, துரதிருஷ்டவசமாக அரசாங்கத்தால் அனுசரணை வழங்கி புனர்வுவாழ்வு வழங்கப்பட்ட 12,000 முன்னாள் போராளிகள் மத்தியில் நிலவும் ஒரு பொதுவான நிலமையாகவே அது உள்ளது.

“புனர்வாழ்வின்போது எங்களுக்கு நிறைய உணவுகள் கிடைத்தன, ஆனால் எங்களுக்கு பயனளிக்கும் படியான வேறு எதுவும் இல்லை” என்று கிளிநொச்சி ஜயந்தி நகரைச் சேர்ந்த மணிமேகலை சொன்னாள்.

”புலிகளில் நாங்கள் இணைந்திருந்த சமயம் நாங்கள் வேலையற்றவர்களாக இருக்கவில்லை, எங்களுக்கு செய்வதற்காக ஏதாவது இருந்தது, இப்போது எதுவும் இல்லை, வேலைகள் இல்லை, இந்த நிலையில் நாங்கள் எப்படி வாழ்வது” என்று சொன்னாள் இந்த 34 வயதான பெண், அவள் பல வருடங்களாக புலிகளில் அங்கத்தவராக இணைந்திருந்து போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவள்.

சிவில் பாதுகாப்பு படைப் பிரிவில் சில வேலைகள் இருப்பதாக பேச்சுக்கள்; நடந்தன ஆனால் அதுவும் கூட நடைமுறைக்கு வரவில்லை என்று மணிமேகலா சொன்னாள்.

அவளது கணவன் மத்திய கிழக்குக்கு சென்றுள்ளதாகவும் அங்கும்கூட அவர் இன்னும் வேலையில்லாமல்தான் இருப்பதாகவும் அவள் சொன்னாள்.

அவள் ஒரு சிறிய வேலையை செய்து வருகிறாள், அதன் மூலம் அவளுக்கு 7000 ரூபா மாத வருமானம் கிடைக்கிறது.

”ஆனால் இந்த 7000 ரூபாயில் நீங்கள் என்ன செய்ய முடியும்?” இத்தகைய மனக்கவலைகள் இருந்தபோதிலும், தனது கடந்தகாலத்துக்கு திரும்பிச் செல்வதில்லை என்கிற ஒரு விடயத்தில் அவள் உறுதியாக இருக்கிறாள். “நாங்கள் சமாதானமாக வாழ முடியுமானால் அதுவே போதும்”.

அதே போல சத்தியன் என்கிற அங்கவீனரான ஒரு முன்னாள் போராளிக்கு சமாதானம் மட்டும் போதும். அவர் 1993 இலிருந்து புலிகளுடன் இருந்துள்ளார்.

ஆனால் 1996ல் யாழப்பாணத்தில் வைத்து ஒரு நிலக்கண்ணி வெடிப்பினால் தனது வலது காலை இழந்துள்ளார். போரின் பின்னர் அவர் சரணடைந்து ஒரு வருடம் புனர்வாழ்வு பெற்றுத் திரும்பியுள்ளார்.

“நான் விடுதலை அடைந்து வந்தபோது எனக்கு 250 ரூபா கிடைத்தது, நான் கிளிநொச்சியில் இறங்கி எனது வீட்டுக்குச் செல்வதற்காக ஒரு முச்சக்கர வண்டிக்கு 250 ரூபாவையும் கொடுத்து விட்டேன். கையில் ஒரு சதம்கூட இல்லாமல்தான் நான் வீட்டுக்குள் நுழைந்தேன்” என்று அவர் சொன்னார்.

முன்னாள் புலி அங்கத்தவர்கள் மீது ஒரு சின்னம் போல குறிப்பிடப்படும் புலி முத்திரையை அசைப்பது மிகவும் கடினம் என சத்யன் சொல்கிறார்.

ஒரு செயற்கை காலை பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய அவர் விரும்புகிறார், ஆனால் 50,000 ரூபா மானியத்தை பெறுவதற்கு அவரது கிராமத்தின் அரசாங்கப் பிரதிநிதியின் சான்றுப் பத்திரம் அவருக்கு தேவையாக உள்ளது.

ஆனால் அந்த படிவத்தில் எந்தக் காலத்திலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கோ அல்லது இராணுவத்துக்கோ எதிராக வேலை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும்படி ஒரு வரி உள்ளது. சத்தியனின் பின்னணியில் அரசாங்க அதிகாரிகள் அந்தப் படிவத்தில் கையெழுத்திடுவதற்கு தயங்குகிறார்கள்.

சத்தியன் கிளிநொச்சிக்கு திரும்பியதிலிருந்து தனது மனைவியையும் மற்றும் மூன்று மகள்மாரையும் கவனிப்பதற்காக சில கூலிவேலைகளைச் செய்து வருகிறார்.

அவர் ஒரு வீடு கட்டுவதற்கான வேலையினையும் ஆரம்பித்துள்ளார் ஆனால் அது எப்போது பூர்த்தியாகும் என்பதை சொல்ல முடியாது.

அவர் ஒரு முச்சக்கர வண்டியையும் வாடகைக்கு அமர்த்துகிறார். ஆனால் அங்கவீனர்களுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட வாகனத்தை வாங்க அவரால் இயலவில்லை அது மிகவும் விலை கூடியதாக உள்ளது.

“ நான் கிராமத்தில் நடக்கும் செயற்பாடுகளில் ஈடுபட விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியவில்லை, நான் ஈடுபடும் அந்தக்கணமே புலி முத்திரை என்மீது ஒட்டப்பட்டு விடுகிறது”.

இந்த புனர்வாழ்வு பெற்றவர்கள், தாங்கள் திரும்பி வந்துள்ள இந்தக் கிராமங்கள் ஒருபோதும் முன்னாள் போராளிகளை சேர்த்துக்கொள்ளும் உணர்திறன் அற்றவையாக இருப்பதாக உணர்கிறார்கள்.

தினேஸ் என்கிற மற்றொரு மனிதர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நினைக்கிறார். அவருக்கு 30 வயது, மற்றும் தனது திருமணத்துக்குப் பின்னர் 2008ல் புலிகளில் இணைந்தார்.

”திருமணமானவர்களை யுத்த முன்னரங்குக்கு அனுப்பமாட்டோம் ஆனால் உதவி வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துவோம் என்று புலிகள் சொன்னார்கள்.

நான் ஏழு நாள் ஆயுதப் பயிற்சி பெற்றதன் பின்னர் முன்னரங்குக்கு அனுப்பப் பட்டேன்” புலிகளுடன் குறுகிய காலம் இருந்ததுக்காக தான் புனர்வாழ்வு பெறத் தேர்ந்தெடுக்கப் பட்டதாக அவர் சொன்னார்.

ஆறு மாதங்களின் பின்னர் தன்னை விடுவிப்பதாக அதிகாரிகள் சொன்னார்கள், ஆனால் தான் இரண்டரை வருடங்கள் புனர்வாழ்வு முகாமில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

அவரது சகோதரிகளில் ஒருவரும் 2008ல் மன்னாரில் நடந்த யுத்தத்தில் கொல்லப்பட்டதாகவும்,அவரது தந்தை 2007ல் புற்றுநோயால் மரணமடைந்ததாகவும் அவர் கூறினார்.

அவரது சுகவீனம் காரணமாக 2003ல் தனக்குப் படிப்பை கைவிட்டு தனது ஏழு உடன்பிறப்புகளையும் காப்பாற்றுவதற்காக வேலை தேட வேண்டி நேர்ந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் அங்கத்தவர்கள் அனைவரும் தெரிவிப்பது, தாங்கள் திரும்பி வந்துள்ள வன்னி போரின்போது இருந்ததைக் காட்டிலும் இப்போது அதிகம் குழப்பமுள்ளதாகவும் மற்றும் ஒழுங்கீனமானதாகவும் இருக்கிறது என்று.

“அப்போது யாரும் சமூக விரோதச் செயல்கள் புரிவதில்லை, அவர்கள் அனைவரும் பிரபாகரனுக்கு பயந்தார்கள். இப்போது மாலை ஆறு மணிக்குப் பிறகு ஒரு இளம் பெண்ணால் வீதியில் நடந்து செல்ல முடியாமலுள்ளது”

அந்தப் பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முடியும், இளைஞர்கள் தொடர்பான ஏராளமான பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியும் என தினேஸ் நினைக்கிறார்.

வடிவேல் எல்.ரீ.ரீ.ஈ யில் 13 வருடங்களாக சேவையாற்றினார் மற்றும் போர் முடிவடைவதற்கு ஒரு மாதம் முன்னால் ஏப்ரல் 17, 2009ல் தனது கண்பார்வையை இழந்தார்.

அவரது இறுதிப் பணி உயர் பதவியில் இருந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதாகும்.”புனர்வாழ்வு மையத்தில் நாங்கள் நன்கு உபசரிக்கப் பட்டோம்.

ஆனால் நாங்கள் எதுவித தொழிற் பயிற்சியையும் பெறவில்லை. எனது விடுதலைக்குப் பின்னர் ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியால் வாசற்படிகளில் போடும் பாய்களை தைக்கப் பயிற்சி பெற்றேன்.

தும்பால் செய்யப்பட்ட ஒரு பாயினை 250 ரூபாவிற்கு விற்க முடியும், ஆனால் இப்போது துணிகளால் தைக்கப்பட்ட பாய்களுகக்குத்தான் கிராக்கி.

அதனால் நான் ஒரு சமையற்காரராக பயிற்சி எடுத்து இப்போது நான் ஒரு சிறிய உணவக சேவையை நடத்துகிறேன். ஆனால் இந்த தொழிலுக்கு புதிதாக வந்தவர்கள் ஏராளமான பணம் செலவழித்து வியாபாரத்தை பெற்றுக் கொள்கிறார்கள், அவர்களுடன் போட்டி போடுவது கடினமாக உள்ளது”.

அவரது விடுதலைக்கு பிறகு அவரது அலைபேசியில் தவறுதலாக தொடர்பு கொண்ட ஒரு பெண்ணை அவர் சந்திக்க நேர்ந்தது.

அவர்கள் இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் மற்றும் வடிவேல் இப்போது ஒரு வயதான குழந்தை ஒன்றின் தந்தை. முடிவுகளை மேற்கொள்ள அவர் சந்தித்த போராட்டம் கடுமையானது.

இராணுவத்தினருடன் தான் குரோதம் கொள்ளவில்லை என அவர் கூறுகிறார். அவர்களுடன் நட்பாக இருக்கவே அவர் விரும்புகிறார்.

“ஆனால் விசேட தேவை உள்ளவர்களாகிய எங்களைப் போன்றவர்களை நோக்கிய அரசாங்கத்தின் கவனம் பெரிய அளவில் இல்லை. ஒரு முன்னாள் புலி என்று முத்திரை குத்தப்படுவதை நான் விரும்பவில்லை.

சிங்களவர்களாக இருந்தாலும் சரி அல்லது தமிழர்களாக இருந்தாலும் சரி ஒவ்வொருவருக்கும் தங்கள் இனத்தை பற்றிய உணர்வு உள்ளது, அப்போது அதற்காக வேண்டியே நாங்களும் செய்தோம், இப்போ அவை அனைத்தும் முடிந்துவிட்டது.

நான் திரும்பவும் அதற்குள் இறங்கமாட்டேன், அரசியலிலும் நான் ஈடுபட மாட்டேன். எங்களுக்கு இன்னொரு யுத்தம் வேண்டாம்.

அந்த பிராந்தியத்திலுள்ள சமூகப் பணியாளர்கள் மற்றும் சிவில் தலைவர்கள் சொல்வதின்படி புனர்வாழ்வு பெற்றவர்கள் மலையளவு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

“மூன்று பிரதான கவலைகள் உள்ளன, ஒன்று அவர்கள் ஆயுதப் படையினரின் முகவர்கள் எனக் கருதி நிராகரிக்கப் படுகிறார்கள், அவர்கள் உளவாளிகளாக இருக்கலாம் எனக் கருதி ஒதுக்கப் படுகிறார்கள்,

இரண்டு, புலிகளின் காலத்தின்போது அவர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்து அங்கத்தவர்களை ஆட்சேர்ப்பு செய்தார்கள், அப்படி ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர் யுத்தத்தில் இறந்து அவரை ஆட்சேர்ப்பு செய்தவர் உயிர் பிழைத்திருந்தால், பின்னவர் இறந்தவரின் குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர்களால் நிராகரிக்கப்படுகிறார்.

மூன்று, புனர்வாழ்வு பெற்று வந்த பெண்கள் களங்கப் பட்டவர்கள் என மக்கள் நினைக்கிறார்கள், அவர்களின் நிலையை பார்க்காமலே தன்னிச்சையாகவே அவர்களை நிராகரித்து விடுகிறார்கள்” எனத் தெரிவித்தார் கிளிநொச்சியை சேர்ந்த வணக்கத்துக்குரிய எஸ்.கே.டானியல் அவர்கள்.

அவரும் தவறான வழிநடத்தல்களைப் பற்றி விமர்சிக்கிறார். “விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன,எப்படித் தைப்பது என்று அவர்களுக்கு யாரும் கற்றுத்தரவில்லை.

அதனால் பயன் எதையும் அடைய முடியவில்லை. கிட்டத்தட்ட 2000 புனர்வாழ்வு பெற்றவர்கள் சிவில் பாதுகாப்பு படையில் உள்வாங்கப் பட்டுள்ளார்கள், ஏனையவர்கள் இன்னும் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்”.

முன்னாள் போராளிகள் தங்கள் கடந்தகால தொடர்புகள் காரணமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி அவரும் நினைவு கூர்ந்தார்.

“ஒரு ஆசிரியை எல்.ரீ.ரீ.ஈ யில் இணைவதற்கு முன்பு எட்டு வருடங்களாக ஒரு பாடசாலையில் பணியாற்றி இருந்தார், அந்த ஆசிரியை தனது பணிச் சான்றிதழ் ஒன்றைப் பெறுவதற்காக அந்தப் பாடசாலைக்குச் சென்றபோது அந்த அதிபர் அவர் எல்.ரீ.ரீ.ஈயில் இருந்ததை காரணம்காட்டி சான்றிதழ் வழங்க மறுத்துள்ளார்.

மற்றொரு சம்பவத்தில் ஒரு யோகா பாடநெறிக்காக ஒருவர் இந்தியா செல்ல விரும்பிய சமயத்தில் அவரது கடவுச்சீட்டு இலக்கத்தை பதிவு செய்தபோது பல்வேறு பிரச்சினைகள் உருவாகின.

பின்னர் அவர் ஒரு முன்னாள் போராளி என்கிற குறிப்புடன் அது திரும்பியது”. யுத்தம் நிறைவடைந்த ஆறு வருடங்களாக, புனர்வாழ்வு பெற்றவர்கள் புதிய போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு இப்போதுள்ள மிகப்பெரிய பிரச்சினை அங்கீகாரம், சாதாரண மக்களாக அவர்களை அங்கீகரிக்க வேண்டும்.

“நாங்கள் யுத்தத்தினால் ஏராளமானவற்றை இழந்து விட்டோம்.  இரு தரப்பினரும் இதைச் செய்தார்கள். திரும்பவும் ஒரு போர் வரக்கூடாது.

நீங்கள் எங்களை எப்படி அழைத்தாலும் பரவாயில்லை, ஆனால் தயவு செய்து எங்களை கைவிட்டு விடாதீர்கள்” என்று புனர்வாழ்வு பெற்ற ஒருவர் தெரிவித்தார்.

வேண்டுகோளுக்கு இணங்க சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

(இந்தக் கதையின் உருவாக்கம் இன்ரநியுஸ் வலையமைப்பின் ஆதரவுடன் செயற்பட்ட உடகவியலாளர் விரைவு முயற்சி அமைப்பின் வெளிப்பாடு)

– தாரிது ஜெயவர்தனா, இதுநில் உஸ்கொட்டராச்சி, உதயா கார்த்திகா மற்றும் ஆர்.இந்துமதி

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share.
Leave A Reply

Exit mobile version