இராணுவத்தினரின் உணர்ச்சியைத் தூண்டி, நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அதே இராணுவத்தை தமது கைக்குள் போட்டுக் கொள்வதற்கான முயற்சியில் அரசாங்கமும் தீவிரம் காட்டி வருவதை அவதானிக்க முடிகிறது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, லெப்.கேர்ணல் சம்மி குமாரரத்ன, லெப்.கேர்ணல் பிரபோத வீரசேகர, சார்ஜன்ட் மேஜர் உபசேன உள்ளிட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் சென்று பார்வையிட்டிருந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ.
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தனது முன்னாள் அமைச்சர்கள், அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்வையிடவே அங்கு சென்று வந்த மஹிந்த ராஜபக் ஷ, இப்போது இராணுவ அதிகாரிகளைச் சந்திக்கவும் அங்கு சென்றிருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷவுக்கும், இந்த இராணுவ அதிகாரிகளுக்கும் தனிப்பட்ட தொடர்புகள் அல்லது அறிமுகம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை.
அவ்வாறிருந்தும், அவர் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளைப் பார்வையிடச் சென்றிருக்கிறார் என்றால், அதற்கு ஒரே காரணம் அரசியல் நலன் தான்.
தேர்தல் காலங்களில் விடுதலைப் புலிகள் தலைதூக்கப் போகின்றனர் என்று சிங்கள மக்களை உசுப்பேற்றியும், புலிகளை அழித்த வெற்றிப் பிரதாபங்களைக் கூறியும் வாக்கு வேட்டையாட முனைந்தவர் தான் மஹிந்த ராஜபக் ஷ.
ஆனால் கடைசியாக நடந்த இரண்டு தேர்தல்களிலும் அவரது இந்தப் பிரசாரங்கள் சிங்கள மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
அதனால் அவரது, மீண்டும் ஜனாதிபதியாகும் கனவு மட்டுமன்றி, குறைந்தபட்சம் பிரதமர் பதவியையாவது பிடித்து விடலாம் என்ற கனவும் கூடத் தகர்ந்து போனது.
ஒரு சில மாதங்கள் அவ்வப்போது அரசாங்கத்துடன் முட்டி மோதி வந்த மஹிந்த ராஜபக் ஷ, வரவு-செலவுத் திட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் முதல் முறையாக உரையாற்றினார்.
அந்த உரையில் அவர், போரில் பங்கெடுத்த மூத்த படை அதிகாரிகளை ஓய்வு பெறும் நிலைக்கு கொண்டு செல்லாமல் சேவையில் வைத்திருக்க வேண்டும் என்றும், அதன் மூலம் போர்க்குற்ற விசாரணையில் இருந்து அவர்களுக்கு நிறுவன ரீதியான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது அந்த உரை, தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கும் படையினரையே பயன்படுத்த திட்டமிடுகிறார் என்பதை வெளிப்படுத்தியிருந்தது.
தேசிய பாதுகாப்பு மற்றும் போர்க்குற்ற விசாரணையில் இருந்து படையினரைப் பாதுகாத்தல் ஆகிய விடயங்களின் ஊடாக, படையினர் மத்தியிலும், சிங்கள மக்கள் மத்தியிலும், தன் மீது கவனத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார் மஹிந்த ராஜபக் ஷ.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவப் புலனாய்வு அதிகாரிகளைப் பார்வையிட்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதானது, படையினர் மத்தியில் அரசாங்கத்தின் மீது அவர்களின் அதிருப்திகளைத் திருப்பி விடுவதற்கான முயற்சியாகும்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில், இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுக்கு படையினர் பலிக்கடாக்களாக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டுள்ளவர்களில் பலரும் படையினராகவே உள்ளனர்.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ் மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைகள், பிரகீத் எக்னெலிகொட கடத்தல் என்று பல்வேறு சம்பவங்களிலும் தொடர்புடையவர்களாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள் படையினர் தான்.
இராணுவத்தின் நம்பிக்கையை சம்பாதிப்பதற்காக போராடுகின்ற ஒரு அரசாங்கம், இத்தகைய சம்பவங்கள் அனைத்திலும், படையினரை திட்டமிட்டு மாட்டி வைக்க ஒருபோதும் முனையாது.
அது எத்தகைய எதிர்விளைவை ஏற்படுத்தும் என்பதை ஒரு அரசாங்கம் நன்றாகவே அறியும். இது மஹிந்த ராஜபக் ஷவுக்கும் கூட தெரியாத விடயமல்ல.
இதனை ஒரு பகுதியினர் பெருமிதமாக கருதினாலும், மற்றொரு பகுதியினர் மறுவளமாகச் சிந்திப்பார்கள் என்பதை அவர் மறந்து விட்டிருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் நடந்த குற்றச்செயல்கள் எல்லாமே அவருக்குத் தெரிந்து தான் நடந்ததா? என்ற கேள்வியை அவர்கள் எழுப்ப முனைவார்கள்.
குற்றம்சாட்டப்பட்ட படையினருக்காக பரிந்து பேசியிருப்பதும், நாட்டின் சட்டத்துறையினால் நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களை அப்பாவிகள் என்று விழித்திருப்பதும், அவரும் இத்தகைய குற்றங்களுக்கு உடந்தையாக இருந்திருக்கிறாரோ என்ற எண்ணத்தையே ஏற்படுத்தும்.
அதுமட்டுமன்றி, வடக்கில் எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளையும், பாதுகாப்பை பலவீனப்படுத்தும் நகர்வுகளாக மஹிந்த ராஜபக் ஷவும் அவரது தரப்பினரும் வெளிப்படுத்த முனைவது, படையினரின் அனுதாபத்தையும் ஆதரவையும் தேடிக்கொள்ளும் முயற்சியே என்பதை தான் காட்டுகிறது. இது ஆபத்தான ஒரு விடயம் என்பதை அரசாங்கமும் அறியும்.
யாழ்ப்பாணத்தில் நடந்த தேசிய நத்தார் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதனைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதேவேளை, தியத்தலாவ இராணுவ முகாமில் நடந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
‘பாதுகாப்பை பலவீனப்படுத்துகிறது அரசாங்கம்’ என்ற மஹிந்த ராஜபக் ஷவின் குற்றச்சாட்டுகளை வலுவற்றதாக்குவதற்கு அரசதரப்பும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
உலக மாற்றங்களை இலங்கை இராணுவமும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டது, தனியே படைகளை நவீன மயப்படுத்தும் விடயத்தை மட்டுமல்ல.
அதற்கும் அப்பால், நவீன உலகத்தில் மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் முக்கியமானவை என்பதைத் தான் அவர் கூற முனைந்துள்ளார்.
பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விடவும் இப்போது மனித உரிமைகள் என்ற விடயம் பெரியதொரு விவகாரமாக மாறியிருக்கிறது.
மனித உரிமைகளைச் சார்ந்தே முடிவுகளை எடுக்க உலகம் தலைப்படுகிறது.
அரசியல் ரீதியான, இராஜதந்திர ரீதியான, பாதுகாப்பு ரீதியான உறவுகளுக்கும், முடிவுகளுக்கும் மனித உரிமைகள் முக்கியமான ஒரு கருவியாக மாறியிருக்கிறது.
இந்த உண்மையை இராணுவம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் ரணில் வலியுறுத்தியிருக்கிறார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளதற்குக் காரணம், போர்க்குற்ற விசாரணை தான்.
போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்படும் போது, படையினர் மீதான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதது என்பதையும், அரசாங்கம் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது படையினர் பொறுமை காக்க வேண்டும் என்பதையும் தான் அவர் அவ்வாறு கூற வந்திருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷ தரப்பு, இந்த விவகாரத்தை பழிவாங்கலாகவோ, பாதுகாப்பை பலவீனப்படுத்தும் செயலாகவோ, காட்டிக்கொடுப்பாகவோ அல்லது இனவாதமாகவோ பயன்படுத்தக் கூடிய ஆபத்து இருப்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டிருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷ வின் வலையிலும் சிக்கிக் கொள்ளாமல் அதேவேளை, சர்வதேச சமூகத்தையும் பகைத்துக் கொள்ளாமல் இந்த விடயத்தை கையாள்வது மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு சிக்கலானதொரு விடயம் தான்.
படையினர் மீதான நடவடிக்கைகள், பாதுகாப்பு ரீதியான மறுசீரமைப்புகள் எல்லாமே இந்த அரசாங்கத்தினால் விரும்பி மேற்கொள்ளப்படும் விடயங்களல்ல.
இது சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களினால் இடம்பெறும் விடயங்கள். இருந்தாலும், எப்படி ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் தரப்பினருக்கு வாய்ப்பையும் கொடுக்காமல்- அதேவேளை, படையினரையும் பகைத்துக் கொள்ளாமல், சர்வதேச சமூகத்தையும் விரோதித்துக் கொள்ளாமல், இவையெல்லாவற்றுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் திருப்திப்படுத்துவது என்பது, தற்போதைய அரசாங்கத்துக்கு குதிரைக் கொம்பான விடயம் தான்.
இதனை அரசாங்கம் எவ்வாறு சாதிக்கப் போகிறது என்பதை எதிர்வுகூற முடியாது. பொறுத்திருந்து பார்ப்பதை விட வேறு வழியில்லை.
-சுபத்ரா-