தமிழ் மக்கள் பேரவையில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பே கேட்க முடியும் அவ்வாறு கேட்டால் அதற்கான விளக்கத்தைக் கொடுப்பேன்.என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளெட் அமைப்பின் தலைவருமான
த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையயின் கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் விளக்கம் கோரப்படும் என பாராளுமன்ற உறுப்பினரரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா
தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் சித்தார்த்தனிடம் கேட்டபோதே அவ்வாறு பதிலளித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பேரவையில் நான் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழரசுக் கட்சி எனக்கு நடவடிக்கை எடுக்க முடியாது. அவ்வாறு அவர்கள் என்னிடம் விளக்கமும் கேட்க முடியாது. ஆனால் கூட்டமைப்பு அவ்வாறு விளக்கம் கேட்கலாம்.

அவ்வாறு அவர்களும் விளக்கம் கேட்பதாயின் அதுவும் கூட்டமைப்பின் பொதுக் கூட்டத்திலேயே கேட்க முடியும். அவ்வாறு கூட்டமைப்பு கேட்டால் அதற்கான பதிலை நாங்கள் வழங்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

தொடர்புடைய செய்தி

சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க கோருகிறார் மாவை
mavai-senathirajah-300x200

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியின்றி, தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் பங்கெடுத்தது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியின்றி, தமிழ் மக்கள் பேரவையில் சித்தார்த்தன் இணைந்து கொண்டது குறித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தமிழ் மக்கள் பேரவையில் இலங்கை தமிழ் அரசு கட்சி இணைந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும்,அவர் தெரிவித்துள்ளார்.

‘எதிரிகள், துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை என்ற செய்தி தவறானது

‘எதிரிகள், துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை – ஒருபோதும் இணையோம்‘ என்ற தலைப்புடன் இன்றைய தினம் ஒரு சில பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்த செய்திகளை கண்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(29) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

‘எதிரிகள், துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை – ஒருபோதும் இணையோம்’ என்ற தலைப்புடன் அச்செய்தியில் நானும் எமது கட்சியின் உபதலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமும் (ஜனா) கூறியதாக வெளிவந்த செய்தி எம்மால் குறிப்பிடப்படவில்லை. அது உண்மைக்கு புறம்பானது.

இச்செய்தியானது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினதோ அல்லது பெயர் குறிப்பிடப்பட்டுள்ள எமது கருத்தோ அல்ல என்பதையும் மிகவும் தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றேன்.

ஞாயிற்றுக்கிழமை(27) கூடிய எமது கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் தமிழ் மக்கள் பேரவை சம்பந்தமாக கட்சியின் நிலைப்பாட்டை ஊடக அறிக்கை மூலமாக தெளிவுபடுத்தி இருந்தோம்.

தமிழ் மக்களின் ஒற்றுமை என்ற பலத்தின் ஊடாகவே எமது அரசியல் உரிமைகளையும் இனப்பிரச்சனைக்கான தீர்வையும் வென்றெடுக்க முடியும் என்ற நிலைப்பட்டில் நாம் உறுதியாக உள்ளோம்.

இந்த நிலையில் எப்படி இந்த வார்த்தையை நாம் பிரயோகித்திருக்க முடியும். இக்கருத்தினை நாம் ஒரு போதும் கொண்டிருக்கவுமில்லை.

இதேவேளை, தமிழ் மக்கள் பேரவைக்கு கருணா, டக்ளஸ் போன்றவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது நல்லது என வடக்கு முதலமைச்சரும் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பது எமக்கு கவலை தருகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version