நடுவானில் பறந்துக்கொண்டு இருந்த கனடா விமானம் ஒன்று மோசமான வானிலை, பயங்கர சூறை காற்றில் சிக்கி சேதம் அடைந்த நிலையிலும், விமானத்தில் இருந்த 351 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

ஏர் கனடா நிறுவனத்திற்கு சொந்தமான AC088 என்ற விமானம் கடந்த டிசம்பர் 30-ம் தேதி, சீனாவில் உள்ள ஷாங்காய் நகரிலிருந்து கனடாவில் உள்ள டொரன்டோ நகருக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 332 பயணிகள் மற்றும் 19 விமான குழுவினர் பயணம் செய்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு, விமானி ஒருவர் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘மோசமான வானிலை உள்ள பகுதிக்குள் விமானம் நுழைவதால், பயணிகள் அனைவரும் இருக்கைகளை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார். விமானியின் அறிவிப்பை தொடர்ந்து விமானத்தில் ஒருவிதமான பீதி கிளம்பியுள்ளது.

இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் சூறாவளி காற்றை போன்ற கொந்தளிப்புகள் விமானத்தை தாக்கியதை தொடர்ந்து, அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறியுள்ளனர்.

அதேசமயம், பயணிகளில் சிலர் இருக்கைகளை விட்டு தூக்கியெறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக, விமானம் மிக மோசமான ஆபத்தை சந்திக்கும்போது பயணிகளின் தலைக்கு மேலே ஆக்சிஸன் குழாய்கள் தானாக கீழே விழும். இதேபோன்று, இச்சூழலிலும் ஆக்சிஸன் குழாய்கள் கீழே விழுந்ததால், விமானத்திற்கு ஆபத்து ஏற்படப்போகிறது என பயணிகள் அனைவரும் அலறியுள்ளனர்.

எனினும், மிகத்திறமையாக செயல்பட்ட விமானிகள் டொரண்டோ நகருக்கு செல்வதற்கு பதிலாக, கல்கேரி நகர விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளனர். இந்த தகவல் விமான நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விமானம் வருவதற்கு முன்னதாகவே 15 மருத்துவ அவசர வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

எனினும், விமானத்தில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 21 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து பேசிய ஒரு பயணி, நரகத்திலிருந்து விமானம் தப்பி பிழைத்து வந்துள்ளதாகவும், இந்த அச்சத்தில் இருந்து தங்களால் இன்னும் மீளமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

விமானிகளிடம் நடத்திய விசாரணையில், அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா நகருக்கு மேல் விமானம் வந்துகொண்டு இருந்தபோது தான் இந்த மோசமான வானிலை தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

எனினும், இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்வதற்காக, விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியை ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version