மனைவிக்கு தெரியாமல் கணவர் லட்சக்கணக்கான பணத்தை பழைய பையில் போட்டு சேமித்து வந்துள்ளார். அந்த பையை மனைவி, குப்பை லாரியில் வீசியதால்,

கணவன் மயக்க நிலைக்கே சென்று விட்டார். கடைசியில் காவல்துறை மூலம் குப்பைகளை எரித்து மறுசுழற்சி செய்யும் மையத்திற்கு சென்று பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த ருசிகர சம்பவம் ஜெர்மனி நாட்டில் அரங்கேறியுள்ளது.

பவேரியா மாகாணத்தில் உள்ள நூரம்பர்க் என்ற நகரில் 55 வயதுடைய ஒருவர்,  தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார்.

புத்தாண்டு தினத்தில் வீட்டிற்கு உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவதற்காக அவர் லட்சக்கணக்கான பணத்தை சேமித்து வந்துள்ளார். மனைவிக்கு தெரிந்தால், எளிதில் செலவாகிவிடும் என்பதால், மனைவிக்கு தெரியாமலேயே சேமிக்க முடிவு செய்துள்ளார்.

மனைவியின் பார்வையில் படாத இடம் எது என தீர்மானிக்கையில், மனைவியின் உபயோகம் இல்லாத ஒரு பழைய கைப்பை வீட்டில் இருந்ததை கண்டு அதற்குள் தினமும் பணத்தை ரகசியமாக சேமித்து வந்துள்ளார்.

இந்நிலையில், புத்தாண்டு வருவதை தொடர்ந்து கணவன் வெளியே சென்றிருந்த நிலையில், நேற்று மனைவி வீட்டை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவரது பழைய கைப்பை குப்பை பையாக தோற்றமளிக்க, அதனை திறந்துக்கூட பார்க்காமல், மூட்டைக்கட்டி எடுத்துச்சென்று குப்பை தொட்டியில் வீசிவிட்டு வந்துள்ளார்.

இதனிடையே, வீட்டிற்கு திரும்பி வந்த கணவன், வீட்டில் மனைவியின் கைப்பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரிடம் உண்மையை கூறி புலம்பியுள்ளார்.

லட்சக்கணக்கான பணத்தை தெரியாமல் குப்பை தொட்டியில் வீசி விட்டேனே என இருவரும் அழுது புலம்பியவாறு அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்ற காவல்துறையினர், அப்பகுதியில் குப்பைகளை எரித்து மறுசுழற்சி செய்யும் மையத்திற்கு உடனடியாக சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு செல்வதற்கு முன்னதாக அப்பகுதியில் இருந்து சேகரித்து இரண்டு லாரி குப்பைகளை ஏற்கனவே எரித்து விட்டனர். இதனை கண்டு தம்பதி இருவரும் மயக்க நிலைக்கே சென்றுள்ளனர்.

எனினும், அங்கு 2 லாரிகள் நின்றுகொண்டு இருந்ததை கண்டு அவற்றை பரிசோதனை செய்ய கணவன் விரும்பியுள்ளார்.

லாரியில் இருந்து ஒவ்வொரு குப்பை மூட்டையாக பிரித்து பார்த்த வந்த கணவனின் முகம் பிரகாசமானது. மனைவி வீசிய அந்த கைப்பை பத்திரமாக அங்கேயே இருந்துள்ளது.

மேலும், அதில் வைக்கப்பட்டிருந்த பணம் அனைத்தும் அப்படியே இருந்துள்ளது. காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த தம்பதியர் மகிழ்ச்சியாக வீடு திரும்பினர்.

Share.
Leave A Reply

Exit mobile version