“வேதம் புதிது” படத்தில் பாலுத்தேவராக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ். பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான “வேதம் புதிது” படம் சத்யராஜை மிகச்சிறந்த குணசித்ர நடிகராகவும் வெளிப்படுத்தியது. அவருக்கு 6 விருதுகள் கிடைத்தன.

“முதல் மரியாதை” படத்தில் சிறு வேடத்தில் மட்டும் நடித்த சத்யராஜை, தனது கிராமத்துக் காதல் கதையான “கடலோரக் கவிதைகள்” படத்தில் கதாநாயகன் ஆக்கினார், பாரதிராஜா.

“கடலோரக் கவிதைகள்” படத்தின் வெற்றிக்குப் பிறகு, “மதங்களை கடந்தது மனிதநேயம்” என்ற கருத்தை வெளிப்படுத்தும் “வேதம் புதிது” படத்திலும் சத்யராஜையே நடிக்க வைத்தார்.

பாலுத்தேவர் என்ற கம்பீரமான குணச்சித்திர வேடத்தில் சத்யராஜ் வாழ்ந்து, ரசிகர்களை பிரமிக்க வைத்தார். படமும் வெற்றி பெற்றது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-

“என் நடிப்பு வரலாற்றில் நிச்சயம் ஒரு மைல்கல் `பாலுத்தேவர்’ கேரக்டர்.

பாரதிராஜாவின் “வேதம் புதிது” கதையை என்னிடம் சொல்லும்படி சித்ரா லட்சுமணனிடம் பாரதிராஜா கூறியிருக்கிறார். அவர் என்னிடம், “கதையின் அவுட்லைனை கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.

“நான் டைரக்டர் பாரதிராஜா சாரிடம் முதல் மரியாதை படத்தில் என் கேரக்டர் என்ன என்பது பற்றி கேட்கவில்லை. கடலோரக் கவிதைகள் படத்திலும் கதை கேட்கவில்லை.

இந்தப் படத்திலும் கதை கேட்கப்போவதில்லை. நான் கதை கேட்டு முடிவு செய்கிற நிலையை கடந்தவர் அவர்” என்று சித்ரா லட்சுமணனிடம் கூறி, கதை கேட்க மறுத்துவிட்டேன்.

இந்தப் படத்தில் நடித்த பிறகு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியிலும், எனக்கு பெரிய அளவில் மரியாதை கிடைத்தது.

நான் அப்போது பெரியார் கொள்கைகளுக்குள் வந்திருந்த நேரம். படத்தில் வரும் பாலுத்தேவர் கேரக்டர் `நாத்திகர்’ என்பது எனக்கு மிகவும் வசதியாகி விட்டது.

படத்துக்கு கண்ணன் என்பவர் வசனம் எழுதியிருந்தார். இந்தப்படத்துக்கு அவர் வசனம் எழுதிய பிறகு, `வேதம் புதிது கண்ணன்’ என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு படத்துக்கு வசனங்களும் உயிர் நாடியாக அமைந்தன.

“பராசக்தி”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “மனோகரா” போன்ற படங்கள் வசனங்களுக்காகவும் பேசப்பட்டவை. “காக்கி சட்டை” படத்தில் நான் இரண்டு தடவை சொன்ன `தகடு தகடு’ வசனம் சினிமாவில் என் நடிப்புக்கு புதிய பாதையை உருவாக்கித் தந்தது.

இப்படி வசனங்கள் மூலம் கிடைக்கும் பெருமை, இந்தப் படத்தில் கண்ணன் வசனத்துக்கும் கிடைத்தது. கதைப்படி, என் மகன் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்திருப்பான்.

அது தெரியாத உறவினர்கள், அவனைக் காணோம் என்று தேடிப்போயிருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்ததும் நான் பதட்டத்திலும் பரபரப்பிலும் “கிடைச்சிட்டானா?” என்று கேட்பேன். அவர்கள் பதிலோ, “கிடைச்சிட்டுது” என்பதாக இருக்கும்.

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த வசனம் நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி உணர்த்தி விட்டது.

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த ஒரு வரி வசனத்தில் சொல்லி, கதைக்கே ஒரு ஜீவன் கொடுத்திருந்தார், கண்ணன். படத்தில் இந்தக் காட்சிக்கு, காட்சியின் சோகம் தாண்டியும் கைதட்டிய ரசிகர்கள் அதிகம். என் படங்களில் நான் பேசிய வசனங்களிலேயே சிறந்த வசனமாக இதைக் கருதுகிறேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது, ஊர்க்காவலன் படப்பிடிப்புக்காக ரஜினி சாரும் அங்கே வந்திருந்தார். அவர் நடித்த படப்பிடிப்பு முடிந்ததும் எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார்.

2 மணி நேரம் எங்களுடன் இருந்தார். என் `பாலுத்தேவர்’ கெட்டப் அவரை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. அதுபற்றிப் பேசி பாராட்டினார்.

படத்தில் நடிகை அமலா என் மருமகளாக நடித்திருந்தார். இதே அமலா என் அடுத்த படமான “ஜீவா”வில் என் ஜோடியாக நடித்தார்! அதுமாதிரி, `மிஸ்டர் பாரத்’ படத்தில் அம்பிகா எனக்கு மருமகள்.

அடுத்து வந்த “மக்கள் என் பக்கம்” படத்தில் என் ஜோடி! இரண்டு விதமான வேறுபாட்டையும், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

“வேதம் புதிது” படத்தில் பாலுத்தேவராக நடித்த என் நடிப்புக்கு `பிலிம்பேர்’ பத்திரிகை உள்பட 6 பத்திரிகைகள் விருது கொடுத்து சிறப்பித்தன.

மத்திய அரசின் விருது கமிட்டியில் அப்போது ஜுரியாக இருந்தவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர். இந்தப்படத்தில் என் நடிப்புக்கு விருது கொடுப்பதற்கான பரிசீலனையில், சின்ன விஷயத்துக்காக `விருது’ வாய்ப்பு தவறி விட்டதாக லட்சுமி என்னிடம் சொன்னார்.

அதாவது என் கேரக்டருக்கு `விக்’ பயன்படுத்தியிருந்தது விருதுக்கு தடையாக அமைந்திருந்ததை தெரிந்து கொண்டேன். ஆனாலும் ரசிகர்களின் பாராட்டை எனக்கு கிடைத்த பெரிய விருதாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தேன்.

ஜெயலலிதா மேடம் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது நான் பல படங்களில் நடித்திருந்தாலும் `பாலுத்தேவர்’ கேரக்டர் பற்றியே அதிகம் பாராட்டிப் பேசினார்கள்.

படத்தில் ஒரு காட்சியில் நானே ஆடிப்போய்விட்டேன். என் வளர்ப்பு மகனாக வரும் சிறுவனை நான் தோளில் தூக்கி வைத்தபடி கதை சொல்லிக்கொண்டே வருவேன்.

ஆற்றைக்கடக்கும்போது அந்த சிறுவன் என்னிடம், “உங்க பெயர் என்ன?” என்று கேட்க, “நான் பாலுத்தேவர்” என்பேன். “பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா?” என்று அந்த சிறுவன் கேட்பான்.

இந்தக் காட்சியை, தனக்கே உரிய ஆற்றலில் மிகத் திறமையாக இயக்கினார், பாரதிராஜா. இந்தக் கேள்வியால் அந்தச் சிறுவன் என்னை கன்னத்தில் அறைவதாக உணர்வேன்.

`ஜாதிய சமூகத்தை தாண்டியது மனித நேயம்’ என்பதை சொல்லாமல் சொல்கிற அந்தக் காட்சி, என் நடிப்பிலும் மறக்க முடியாத காட்சியாகி விட்டது.

படம் தயாரான பிறகு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக ஒரு தகவல் உலாவந்து படத்துக்கு பிரச்சினையாக அமைந்தது.

இதுபற்றி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டபோது அவர் படத்தை பார்க்க விரும்பினார். ஏவி.எம். தியேட்டரில் படம் பார்த்தபோது என்னையும் அவர் அருகே அமர வைத்துக்கொண்டார்.

முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தவர், “இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லையே!” என்றார். என் நடிப்பையும் பாராட்டினார்.

முதல்-அமைச்சர் பாராட்டிய பிறகு, படத்தின் வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ரசிகர்கள் உணர்ச்சி மயமாய் ரசித்ததோடு, படத்தையும் வெற்றி பெறச்செய்தார்கள்.

“வேதம் புதிது” பாலுத்தேவர் கேரக்டர் என்னை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெளிப்படுத்தியதால்தான் இன்றைக்கு “பெரியார்”, “ஒன்பது ரூபாய் நோட்டு” போன்ற படங்களிலும் நடிப்பில் என்னை நிலைநிறுத்த முடிந்தது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

(நடிகர் சத்தியராஜின் சினிமா வாழ்க்கை தொடர்1…2…3…11)

Share.
Leave A Reply

Exit mobile version