தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டம்  தயாரிக்கும் உபகுழுவில், வட மாகாண முதலமைச்சரின் பிரதிநிதியாக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை, சிறிலங்காவின் முன்னாள் சட்டமா அதிபரும், அரசியலமைப்பு நிபுணருமான சிவா பசுபதி, நிராகரித்துள்ளார்.

சிவா பசுபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சிவா பசுபதி தனிப்பட்ட பயணமாக நேற்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

தீர்வுத்திட்டம் தயாரிக்கும் உபகுழுவில் தனது பிரதிநிதியாக பங்கேற்கும்படி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தொலைபேசி மூலம் சிவா பசுபதியிடம், வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால்,சிறிலங்காவுக்குள் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க தீர்வு ஒன்றைக் காணும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெறும் போது, தமிழ் மக்கள் பேரவை போன்று தனியானதொரு உருவாக்கம் பொருத்தமற்றது என்று தாம் நினைப்பதாக, முதலமைச்சரிடம் சிவா பசுபதி வெளிப்படையாக கூறிவிட்டார்.

இந்த நேரத்தில் தமிழர்களின் ஒற்றுமையே அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், விக்னேஸ்வரன் விடாப்படியாக அவரை வலியுறுத்திய போதிலும், சிவாபசுபதி தனது முடிவில் தளரவில்லை.

இறுதியாக விக்னேஸ்வரன் கோபத்துடன் தொலைபேசியை வைத்து விட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவா பசுபதியின் இந்த முடிவு விக்னேஸ்வரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவா பசுபதி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டிருந்தார் என்றும், அரசியல் நோக்கமற்ற, முற்றிலும் தனிப்பட்ட பயணமாகவே வந்திருந்தார் என்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

சிவா பசுபதி யாழில்

sivaa

இலங்கையின் 34ஆவது சட்டமா அதிபராக பதவி வகித்த சிவா பசுபதி யாழ்ப்பா ணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பலதரப்பட்ட தரப்பினருடனும் சந்திப்புக்களை மேற்கொள்வாரென எதிர்பார்க் கப்படுகின்றது.

தமிழ் மக்கள் பேரவையினால் அரசியல் தீர்வு சம்பந்தமாக வரைவைத் தயாரிப்பதற்காக 15பேர் கொண்ட உபகுழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உபகுழுவுக்கான கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்த தலா இரண்டு பிரதிநிதிகளின் தெரிவு இடம்பெற்று வரும் நிலையில் முன்னாள் சட்ட மா அதிபர் சிவா பசுபதியும் அக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படுவாரென தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்விடயம் தொடர்பான முழுமையான தீர்மானங்கள் இதுவரையில் எட்டப்பட்டிருக்காத நிலையில் சிவா பசுபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது 82வயதாகும் சிவா பசுபதி இலங்கையின் 34 ஆவது சட்ட மா அதிபராக 13 வருட காலம் (1975 – 1988) பணியாற்றியுள்ளார். இவர் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியுமாவர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலை கல்வியைப் பயின்ற சிவா பசுபதி, கொழும்பு பல்கலைக் கழகத்தில் தனது சட்ட பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததன் பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திலும் பட்ட பின்படிப்பை பூர்த்தி செய்திருந்தார்.

தற்போயை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2002ஆம் ஆண்டில் பிரதமராக பதவி வகித்த தருணத்தில் அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுகும் இடையில் ஒஸ்லோ பேச்சுவார்த்தை நடைபெற்றபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை குழுவின் ஆலோசகராக பணியாற்றியிருந்தார்.

அவ்வமைப்பின் அரசியல் விவகார குழுவின் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார். விடுதலைப்புலிகள் இடைக்கால தீர்வாக முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை இந்த அரசியல் விவகார குழுவே தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version