ஐந்து நாள் பயணமாக சீனக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் முதல் முறையாக சீனப் போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன.

சீனக் கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை போர்க்கப்பல்களான, லியூசோ, சன்யா ஆகியனவும், விரிவான விநியோக கப்பலான குயிங்ஹாய்ஹுவுமே நேற்று கொழும்புத் துறைமுகம் வந்தன.

இந்தப் போர்க்கப்பல்களை கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் யி ஜியான்லியாங் மற்றும் நூற்றுக்கும் அதிகமான சீன அதிகாரிகளும் மாலுமிகளும் வரவேற்றனர்.

நான்கு மாதங்களாக ஏடன் வளைகுடாவிலும், சோமாலியாவை ஒட்டிய கடற்பகுதியிலும், வணிகக் கப்பல்களுக்கான பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்த சீனப் போர்க்கப்பல்கள், தமது பணியை முடித்துக் கொண்டு திரும்பும் வழியிலேயே சிறிலங்காவுக்கான நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டுள்ளன.

இந்தப் போர்க்கப்பல்கள் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் தரித்து நின்று விட்டே, கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன.

pla-warships

அதேவேளை, கொழும்பு வந்துள்ள போர்க்கப்பல்களின் அணியின் தளபதியும், மக்கள் விடுதலை இராணுவத்தின் தென்சீனக் கப்பற்படையின் பிரதித் தலைமை அதிகாரியுமான ரியர் அட்மிரல் யு மன்ஜியாங் மற்றும், இந்தப் போர்க்கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் இன்று சிறிலங்கா கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

வரும் வியாழக்கிழமை வரை கொழும்பில் தரித்து நிற்கவுள்ள சீனப் போர்க்கப்பலில் உள்ள சீன கடற்படையினர், சிறிலங்கா கடற்படையினருடன் பல்வேறு பயிற்சிகள், ஒத்திகைகள், மற்றும் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா துறைமுகங்களுக்கு சீனப் போர்க்கப்பல்கள் அடிக்கடி வருவது குறித்து, இந்தியா கரிசனைகளை வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், சீனப் போர்க்கப்பல்களை அனுமதிப்பதை புதிய அரசாங்கம் தற்காலிகமாக தவிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியக் கடற்படையின் பாய்க்கப்பல்களும் கொழும்பு வந்தன – சீனாவுடன் போட்டி?

18-01-2015

சீனக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருக்கும் நிலையில், இந்தியக் கடற்படையின் இரண்டு கடற்பயணப் பயிற்சிப் பாய்க்கப்பல்கள் இரண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

இந்தியக் கடற்படையின் கடற்பயணப் பயிற்சிக் கப்பல்களான, தரங்கினி மற்றும் சுதர்சினி ஆகியன, பயிற்சிப் பயணமாகவே நேற்று கொழும்புத துறைமுகம் வந்தன.

இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கு சிறிலங்கா கடற்படை மரபுப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று வரை கொழும்புத் துறைமுகத்தில் இந்தக் கப்பல்கள் தரித்து நிற்கும். இதன்போது, இந்தியக் கப்பல்களில், சிறிலங்கா கடற்படையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.

கொழும்புத் துறைமுகத்துக்கு சீனப் போர்க்கப்பல்கள் அடிக்கடி வருகை தருவதை இந்தியா விரும்பாத நிலையில், சீனப் போர்க்கப்பல்களும், இந்தியக் கடற்படையின் பயிற்சிக்கப்பல்களும் ஒரே நேரத்தில் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version