பழமையான வரலாற்று தலங்களை உள்ளடக்கி, அதை சுற்றி நவீன வளர்ச்சிகளும் வியாபித்து, சேர்ந்து களைகட்டும் ஒரு புதுமையான சுற்றுலா தலம்தான் சியாங் மாய்(Chiang Mai).

சியாங் மாய் நகரம் தாய்லாந்தின் மலைப்பாங்கான வடக்கு பகுதியில் கி.பி.1200 ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பழமையான வரலாற்று பாரம்பரிய சிறப்புடைய நகரம்.

இது 42.216 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. வட தாய்லாந்தில், சியாங் மாய் மாகாணத்தில், முயீங் சியாங் மாய் மாவட்டத்தில், அமைந்துள்ளது.

அந்த பழைய நகரத்தின் மதில் சுவர்கள், கோயில்கள், மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த மையங்கள் பாம்புகள் உட்பட்ட பலவிதமான சிற்பங்கள் இன்னும் சுவடுகளாக அங்கு காணப்படுகின்றன.

14 ம் நூற்றாண்டின் வாட் ப்ரா சிங், 15 ம் நூற்றாண்டின் வாட் சேடி லூங் உட்பட 100 கோவில்களின் தாயகமாகவும் இந்த மலை நகரம் விளங்குகிறது.

தங்கமாய் தகதகவென ஜொலிக்கும் புத்தர் சிலைகள் பல உள்ளன. தாய்லாந்தின் முதன்மையான புத்தர் ஆலயமும் இந்த நகரத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பழமையும் குலையாமல் பராமரித்து, புதுமையையும் அதனோடு பொருத்தமாக சேர்த்து அலங்கரித்து காண்பவர்களை கவர்ச்சியில் கலங்கடித்துள்ளது. திட்டமிட்டு செயலாக்கியுள்ளது தாய் அரசு.

Tiger Kingdom

வாங்க பழகலாம் என்கிற அளவில், நம்மை பழக வரவேற்பது இங்கு வேறுயாருமல்ல. அச்சுறுத்தும் முகமும் அஜபாகுவான கொழுகொழு உடலும் கொண்ட தோழர்கள் புலிகள்தான்.

சற்றும் தயக்கம் இல்லாமல் புதியவர்களாக வரும் பயணிகளே அதனோடு செல்பி எடுப்பதும் புலியின் உடலை வருடுவதும் அணைத்துக்கொண்டு படுப்பதும் இந்த புலிகளின் ராஜ்யத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது, கிலி பிடித்து ஒதுங்குபவர்களும் உண்டு. சவாலான Adventure-களுக்கு சந்தேகமில்லா த்ரில் அனுபவமே.

chiang_mai_002

Bike Tours and Cycling

விசாலமான மலைப்பகுதி என்பதால் நடந்து சென்றால் நான்கு நாட்கள் ஆனாலும் சுற்றி தீராது. மாறாக, கால் வலிதான் வரும்.

நம் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வது போல பைக்கில் சென்று சுற்றிப்பார்க்கும் வசதி உண்டு. அதனால், நகரத்தை முழுதாக பார்வையிடலாம்.

Buddha Temples

இந்த மலை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் உண்டு. அனைத்தும் புத்தமத கோயில்கள் மற்றும் மத மடங்களும்தான். புத்தமதம் இங்கு பரவிய காலத்தில் புத்துணர்ச்சியுடனும் புதுவேகத்துடனும் சமகாலத்தில் உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

ஆனாலும், ஆலயங்களில் ஒன்றுக்கு ஒன்று வேறுபாடு உள்ளது. புத்த மதம் சாராதவர்களும் கலை கண்களுடன் ரசிக்கும்படியாக கைவண்ணமும் செய்நேர்த்தியும் சிறப்பாகவே வெளிப்பட்டுள்ளது.

Mae Sa Waterfalls

இங்குள்ள மலைப்பகுதிகளில் சிறிய நீர்வீழ்ச்சிகளும் உண்டு. பயணிகள் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கும் அதை ரசிப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Thai Kitchen Cookery Centre

தாய்லாந்தின் சகல உணவு வகைகளும் இங்கு கண்முன்னே சமைத்து விற்கப்படுகிறது. பெரிய உணவு சந்தையாக காட்சியளிக்கும் இது ஒரு விசாலமான பகுதி.

மற்ற இடங்களைவிட மக்கள் இங்குதான் அதிகமாக காணப்படுகின்றனர். அதற்கு சுவையான உணவு வகைகளே காரணம். சைவ உணவுகளும் அசைவ உணவுகளும் இங்கு தனித்தனியாக தயாரிக்கப்படுகிறது. சமைக்கும் முறைகளை பார்த்தே சிறந்த உணவுகளை தேர்வு செய்யலாம்.

அவர்கள் குச்சிகளால் உணவு சாப்பிடும் வழக்கமே ஒரு கலைதான். அதனால்தான், தாய்லாந்தில் உணவு சாப்பிடும் காட்சியை முக்கியத்துவம் கொடுத்து ’உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆர். சேர்த்துள்ளார்.

Night Market

சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தின் தனிச் சிறப்புக்குரிய பொருள்களை இங்கு வாங்கலாம். ஒரு பொருட்காட்சி போலவே பிரம்மாண்டமாக உள்ளது.

Night Market

சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தின் தனிச் சிறப்புக்குரிய பொருள்களை இங்கு வாங்கலாம். ஒரு பொருட்காட்சி போலவே பிரம்மாண்டமாக உள்ளது.

பாதங்களை தழுவும் மீன்கள்

இந்த பகுதி ஒரு பெரிய கூடமாக உள்ளது. பலவிதமான பெரிய மீன் தொட்டிகளும் அதில் வகைவகையான சிறிய மீன்களும் உள்ளன. தொட்டிகளின் மேற்பகுதியில் அமர்ந்துகொண்டு கால்களை மீன் தொட்டிக்குள் தொங்கவிட்டு அமர்ந்து கொள்கின்றனர்.

கால்களை சுற்றி அந்த மீன்கள் அணைவதும் செல்லமாக பாதங்களின் தோல்களை கடிப்பதும் ஒரு இதமான பரவசம்தான்.

இதன் இகபர சுகத்தை இயல்பாகவே அனுபவித்த தாய் மக்கள், தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கில் பயணிகளை மகிழ்விக்கிறார்கள்.

சிறுவயதில் ஆறு, குளங்களில் குளிக்கும்போது சிரங்குகளை மீன்கள் கடிப்பதை கிராமவாசிகள் அனுபவித்திருப்போம். அந்த ரகம்தான். ஆனாலும், அதற்கு தோதான மீன்வகை தேர்வு ஒருவகை மேலானது.

-மருசரவணன்.

Share.
Leave A Reply

Exit mobile version