கல்முனையில் 11 வருடங்களுக்கு முன் சுனாமியின்போது காணாமல்போனதாகக் கூறப்படும் 16வயது சிறுமி அம்பாறை சிறுவர் புகலிடத்தில் இருப்பதாக அறிந்து பெற்றோர் உரிமைகோரியுள்ளனர்.
ஆனால் இரு பெற்றோர் உரிமை கோருவதால் பிரச்சினை எழுந்துள்ளது. கல்முனை 02 வட்டைவிதானை வீதியைச் சேர்ந்த எஸ்.ஜெயராஜா என்பவர் தன்பிள்ளை என உரிமை கோரியுள்ளார்.
இதேவேளை, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒரு குடும்பமும் உரிமை கோரியுள்ளது. இப்பிள்ளை கேசானியா ? முகமட் அப்றாவா? என்பதை நீதிமன்றமே முடிவு செய்யவேண்டும் என கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு. அப்துல் கபார் தெரிவித்தார்.
கல்முனையைச் சேர்ந்த எஸ். ஜெயராஜா குறிப்பிடுகையில்,
எனக்கு 10 வருடங்களுக்கு பிறகு பிறந்த பிள்ளைதான் கேசானி. சுனாமியன்றுகாலை கல்முனை மாமாங்க அறநெறிப் பாடசாலைக்கு சென்றசமயம் சுனாமி அடித்தது.
அப்போது அவருக்கு வயது 5. நாமும் சுனாமியால் பாதிக்கப்பட்டு பிள்ளையைத் தேடினோம். யாரோ தூக்கிக்கொண்டு போனதாக அறிந்தோம். அதன்பின் தேடாத இடமில்லை. அலைந்தோம்,கதறினோம் கிடைக்கவில்லை.
ஒலுவிலுக்குச்சென்று புகாரி என்பவரிடம் மைபோட்டுப்பார்த்தோம். அவர் சொன்னார். தற்போது பறந்தாலும் பிள்ளை கிடைக்காது.
ஆனால் பத்து வருடங்களுக்குப்பிறகு கிடைக்கும் என்று. இந்நிலையில் கடந்த 11 வருடங்களாக காத்துக் கிடந்தோம். கடந்த வாரம் கல்முனை பொலிஸில் ஒரு 16 வயது மதிக்கத்தக்க ஒரு பிள்ளை மீட்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அங்கு சென்றபோது பிள்ளை உயிரோடு இருப்பது தெரிந்தது.
ஆனால் கல்முனைப் பொலிஸார் அப்பிள்ளையை சிறுவர் நன்னடத்தைப் பிரிவினூடாக கல்முனை நீதிமன்றத்தில் பாரப்படுத்தி அம்பாறை சிறுவர் புகலிடத்திற்கு அனுப்பியுள்ளனர்.
நானும் மனைவியும் சிறுவர் நன் நடத்தைப் பிரிவினர் மற்றும் காரைதீவிலுள்ள மனித அபிவிருத்தி தாபனத்தினரின் உதவியோடு அம்பாறை சென்று பிள்ளையைப் பார்த்தபோது அவர் தாயைப்பார்த்து கதறி அழுதார்.
அவரது அங்க அடையாளங்களை வைத்து எமது பிள்ளைதான் என்பதை உறுதிப்படுத்தினோம். எம்மிடம் பிறப்பத்தாட்சிப் பத்திரமுமுண்டு. 5 வயதில் எடுத்த படமும் உண்டு.
ஆனால் பின்னர் சிங்களத்திலும் தமிழிலும் தனது கடந்தகாலம் பற்றி எதுவுமே தெரியாது என்று கூறியுள்ளார். இதனிடையே மற்றுமொரு குடும்பம் உரிமை கோருவதாக அங்கு சொல்லப்பட்டது.
எனவே, நாம் எதிர்வரும் திங்களன்று கல்முனை நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளோம். அதனூடாக டி.என்.ஏ. பரிசோதனை மூலம் சட்டப்படி பிள்ளையை மீட்டெடுக்கலாம் என்று கருதுகின்றேன் என்றார்.
கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எ.டபிள்யூ. அப்துல் கபாரிடம் கேட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
இப்பிள்ளை தெருவில் அலைந்ததாகக்கூறிக்கிடைத்த தகவலையடுத்து நாம் பொலிஸ் நிலையத்திற்குக்கொணர்ந்து கல்முனை சிறுவர் நன்னடத்தைப் பிரிவினரூடாக நீதிமன்றிற்குப் பாரப்படுத்தி மாத்தறை சிறுவர் புகலிடத்திற்கு அனுப்புவதற்காக தற்காலிகமாக அம்பாறை சிறுவர் புகலிடத்தில் ஒப்படைத்துள்ளோம்.
இவர் தான் ஒரு அனாதையென்றும் முன்னர் கல்முனைக்குடியில் தனது பெரியம்மா, பெரியப்பா குடும்பத்தோடு வாழ்ந்ததாகவும் அங்கு அவர்கள் தன்னை வதைசெய்வதால் தப்பி ஓடியதாகவும் சொன்னார் என்றார்.
மேலும் அவர் கூறுகையில்; இவர் கடந்த வருட இறுதிப்பகுதியில் இப்படியாக மீட்கப்பட்டபோது அவரை திருமலை, கந்தளாய் சிறுவர் புகலிடத்திற்கு அனுப்பியிருந்தோம்.
அவர் அங்கிருந்து இம்மாதம் தப்பியோடிவந்து கல்முனையில் அலைந்தபோது இரண்டாவது தடவை யாக மீட்கப்பட்டுள்ளார்.
இப்போது அம்பாறையில் உள்ளார். யார் பெற்றோர் என்பதை நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்றார்.