பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம், நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகம் அல்லோல கல்லோலப்பட்டது.
நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிடிக்கப்பட்டிருந்த நிலையில், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்ததையடுத்து, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
காணாமல் போனதாகக் கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை ஞானசார தேரர், திறந்த நீதிமன்றத்தில் வைத்து திங்கட்கிழமை (25), ஏசியதாக நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே, அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஞானசார தேரர், விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக உத்தரவிடப்பட்டதை அறிந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தேரர்கள் உள்ளடங்கலாக 200 பேர், தங்களையும் கைதுசெய்து, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற வளாகத்தில் வைத்து கோஷமிட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வாகனத்துக்கு அண்மையில் வந்த தேரர்கள், வாகனத்துக்கு முன்பாகவும் டயர்களுக்கு கீழேயும் படுத்துக் கொண்டனர், இன்னும் சில தேரர்கள், புரண்டு, புரண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இன்னும் சில தேரர்கள், நீதிமன்றத்துக்குள் நுழைவதற்கு முயன்றபோதும், அங்கு கடமையிலிருந்த பொலிஸார், நீதிமன்றத்தின் பிரதான வாயில் மற்றும் ஏனைய வாயில்கள், கதவுகளை மூடிவிட்டனர்.
அதன்பின்னர், மதில் மீதேறி குதித்த தேரர்கள், நீதிமன்ற வளாகத்துக்குள் சென்றுவிட்டனர்.
நீதிமன்ற வளாகத்துக்குள் தேரர்கள் குழப்பம் விளைவித்தமையால், கடமைகளுக்காக மேலும் 300 பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், கலகம் அடக்கும் பொலிஸாரும், தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனத்துடன் விரைந்தனர்.
இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தேரர்களில் சிலர், மயங்கிவிழுந்துவிட்டனர். அவர்களை, ஏனைய தேரர்கள் சிலர், தூக்கிச்சென்று முதலுதவியளித்தனர்.
இன்னும் சிலர், நீதிமன்றத்தின் வாயிலுக்கு முன்பாக அமர்ந்து பிரித் ஓதினர்.
நீதிமன்ற வளாகத்தில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டமையால், நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவிருந்த சகல வழக்குகளையும், பெப்ரவரி மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் ரங்க திஸாநாயக்க, நீதிமன்ற நடவடிக்கைகளை 11.30 முதல் 12.20வரை தற்காலிகமாக இடைநிறுத்திவிட்டார்.
அந்த எதிர்ப்பு நடவடிக்கை, உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் சகல நடவடிக்கைகளையும், பிற்பகல் 2.20க்கு, முற்றுமுழுதாக நிறுத்தி விட்டார்.
இதேவேளை, 6 மணித்தியாலங்களுக்குப் பின்னர், மாலை 5.30 மணியளவில், விசேட அதிரடிப்படையினரின், விசேட கப் ரக வாகனத்தில் ஏற்றப்பட்ட ஞானசார தேரர், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அடைக்கப்பட்டுள்ளார்.