அரியலூர், ஜன. 30–

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மனைவி சாவித்திரி (வயது 50). இவர்களது மகள் சுகந்தி (23). இவரது அக்காவின் கணவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (வயது 35). இவர் அரியலூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

ariyalur-accidentசுகந்திக்கு நாளை 31–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்காக சுகந்தி, சாவித்திரி ஆகியோரை மோட்டார்சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஸ்டாலின் அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார்.

அரியலூர் அருகே தாமரைக்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் செல்லும் போது, அந்த வழியாக வந்த டாரஸ் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் லாரியின் அடிப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கி கொண்டதால் சுமார் 10 அடி தூரத்திற்கு ஸ்டாலின் உள்பட 3பேரும் இழுத்து செல்லப்பட்டனர்.

பின்னர் லாரி சாலையோரம் இருந்த டீக்கடையின் முன் பகுதியில் மோதி நின்றது. இந்த கோர விபத்தில் ஸ்டாலின், சாவித்திரி, சுகந்தி உள்பட 3பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 3பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் லாரி டிரைவர் கீழகுளத்தூரை சேர்ந்த வேதமணியை போலீசார் கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனிடையே டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் தாமரைக்குளம் பஸ் நிறுத்த சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகாரிகள்–போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கை விட்டனர்.

விபத்தில் பலியான சுகந்திக்கும் பொன்குடிக்காடு பகுதியை சேர்ந்த வேலுமணி என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

நாளை 31–ந்தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளை இருவரது வீட்டினரும் செய்து வந்தனர். திருமண அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர்.

இந்நிலையில் விபத்தில் சுகந்தி பலியானது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகந்தியின் சொந்த ஊரான பொன்பரப்பி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மாப்பிள்ளை வீட்டார் குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கினர்.

Share.
Leave A Reply

Exit mobile version