ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா என்ற இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலும், ஐ.என்.எஸ். மைசூர் என்ற நாசகாரியும், கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்ற பின்னர், பாதுகாப்பு அமைச்சில் கடந்தவாரம் ஒரு செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.
பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சியும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவும் இணைந்து நடத்திய இந்தச் செய்தியாளர் மாநாட்டில், இலங்கையை நோக்கி அதிகளவில் போர்க்கப்பல்கள் வரத் தொடங்கியுள்ளமை ஏன் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
கடந்த ஜுலை மாதத்துக்குப் பிந்திய ஆறு மாதங்களில் ஒன்பது நாடுகளின் 25 போர்க்கப்பல்கள், இலங்கைக்கு வந்து சென்றதை ஒரு முக்கியமான நிகழ்வாக இவர்கள் எடுத்துக் கூறியிருந்தனர்.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மேலும் ஆறு வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் வரவுள்ளதாகவும் கடற்படைத் தளபதி தெரிவித்திருந்தார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்கு வருகை தருவது அதிகரித்ததாயினும், தற்போது திடீரென இவற்றின் வருகை அதிகரிப்புக்கு, இலங்கையின் பாதுகாப்புச் சூழலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே காரணம் என்று அவர்களால் எடுத்துக் கூறப்பட்டது.
வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் அதிகளவில் வருவது குறித்து இதற்கு முன்னர் ஒருபோதும் பாதுகாப்பு அமைச்சு இத்தகைய செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி விளக்கமளித்ததில்லை.
இப்போது இத்தகையதொரு செய்தியாளர் சந்திப்பின் ஊடாக, சீனப் போர்க்கப்பல்கள், அதையடுத்து இந்தியப் போர்க்கப்பல்களின் வருகை தொடர்பாக எழுந்திருக்கின்ற சந்தேகங்களுக்கு முடிவு கட்ட அரசாங்கம் முனைவதாகவே தெரிகிறது.
இத்தகைய பயணங்களினால், வெளிநாட்டுப் போர்க்கப்பல்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு கடற்படையினருக்குக் கிடைக்கிறது, பாதுகாப்பான நாடு என்று சர்வதேச மதிப்பு அதிகரிக்கிறது என்பன போன்ற நியாயங்களை பாதுகாப்புச் செயலரும் கடற்படைத் தளபதியும் அடுக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இதன் மூலம், பூகோள அரசியல் போட்டியில் இலங்கை சிக்கிக் கொள்ளவில்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவே அரசாங்கம் விரும்புகிறது போலுள்ளது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அண்மையில் முதல் முறையாக மூன்று சீனப் போர்க்கப்பல்கள் கொழும்பு வந்தன.
அவை புறப்பட்டுச் சென்று, ஓரிரு மணித்தியாலங்களுக்குள் இந்தியப் போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்குள் நுழைந்தன. இவை சர்வதேச பாதுகாப்பு நிபுணர்களை உற்று நோக்க வைத்திருந்தன.
அதுமட்டுமன்றி, கொழும்புத் துறைமுகத்துக்குள் இந்திய விமானந்தாங்கிக் கப்பல்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் சீனப் போர்க்கப்பல்களுடன் கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான சமுத்ர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
இது, இரண்டு நாடுகளையும் சமநிலையில் வைத்திருக்கிறோம் என்று காட்டுவதற்கான ஒரு முயற்சியாகவும் கூட பார்க்கப்படுகிறது.
இலங்கைத் துறைமுகத்தைப் பயன்படுத்தும் சீனப் போர்க்கப்பல்கள் விடயத்தில், உலகின் முக்கிய நாடுகளான அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகியவற்றுக்கு சந்தேகங்கள் இருக்கின்றன.
அதிலும், ஏடன் வளைகுடாவில், சோமாலிய கடற்பரப்பையொட்டியதாக கடற்கொள்ளைகளைத் தடுக்கும் நடவடிக்கை என்ற பெயரில், சீன தனது கப்பற்படை அணி ஒன்றை நிரந்தரமாகவே நிறுத்தி வருகிறது.
தற்போது, இந்தப் பணிக்கு சீனக் கடற்படையின் 22ஆவது கப்பற்படை செயலணி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
21ஆவது கப்பல்படை செயலணி ஏடன் வளைகுடாவில் பாதுகாப்பு பணியை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில்தான், அண்மையில் கொழும்புத் துறைமுகம் வந்திருந்தது.
அந்தப் போர்க்கப்பல்கள், இலங்கை வருவதற்கு முன்னர் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் தரித்து பயிற்சியில் ஈடுபட்டன.
கொழும்பிலும் தரித்து நின்றுவிட்டு பயிற்சிகளில் ஈடுபட்டன. அதையடுத்து, பங்களாதேஷ் சென்று விட்டுத்தான் அவை சீனா செல்கின்றன.
ஏடன் வளைகுடாவுக்கு அணியணியாக போர்க்கப்பல்களை சீனா அனுப்பி வருவதற்கு இன்னொரு காரணம், அவை செல்லும் போதும், திரும்பி வரும் போதும் சீனாவின் நலன்களுக்குத் தேவையான தளங்களில் தரித்துச் செல்கின்றன.
இந்தியப் பெருங்கடல் வழியாக ஆபிரிக்கா வரையில் சீனா தனது தளங்களை அமைப்பதற்கு சுமார் 18 துறைமுகங்களைத் தெரிவு செய்து வைத்திருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. அதில் அம்பாந்தோட்டையும் ஒன்று.
அவ்வாறான தளங்களின் மீதான ஆதிக்கத்தை இந்த பாதுகாப்பு அணியை அனுப்புவதன் மூலம், சீனா உறுதிப்படுத்தி வந்திருக்கிறது.
ஏடன் வளைகுடாவிலிருந்து திரும்பிய சீனப் போர்க்கப்பல்கள், விநியோகத் தேவைகளுக்காக கொழும்புத் துறைமுகம் வரவில்லை.
கராச்சியில் தரித்து நின்ற சீனப் போர்க்கப்பல்கள், இலங்கையில் தரிக்காமலேயே பங்களாதேஷுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் கொழும்புத் துறைமுகம் வந்து சென்றன.
கொழும்புத் துறைமுகத்தை விநியோகத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாதிருந்த கடந்த ஒரு ஆண்டிலும் இந்தியப் பெருங்கடல் வழியாக சீனப் போர்க்கப்பல்கள், பயணம் செய்தன.
எனவே, விநியோகத் தேவைக்காக கொழும்புத் துறைமுகத்தை நாடுவது என்பது முற்றிலும் சரியான காரணமாகக் கருத முடியாது.
சீனா தனது கப்பல்களின் அணியை தொடர்ச்சியாக ஏடன் வளைகுடாவுக்கு அனுப்பி வைப்பதன் மூலம், தனது வர்த்தக நலன்களை மட்டுமன்றி, இராணுவ நலன்களையும் உறுதி செய்து கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்கிறது.
ஏடன் வளைகுடாவில் பாதுகாப்பில் ஈடுபடும் கப்பல்படை அணிகளின் விநியோகத் தேவையைக் காரணம் காட்டித் தான், ஆபிரிக்க நாடான டிஜிபோட்டியில் தளம் அமைக்க சீனா முடிவும் செய்திருக்கிறது.
இதனால்தான் ஏடன் வளைகுடாவில் சீனா மேற்கொண்டு வரும், கடற்பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்கா போன்ற நாடுகள் சந்தேகம் கொண்டிருக்கின்றன.
இம்மாதம் முதல் வாரத்தில் புதுடில்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின் பசுபிக் கப்பற்படைகளின் தளபதி அட்மிரல் ஸ்கொட் ஸ்விப்ட், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே. டோவனுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இந்த விவகாரம் குறித்தே அதிகமாக ஆராய்ந்திருந்தார்.
அதாவது, இந்தியப் பெருங்கடலில் சீனா தனது கடற்படையை முன்னகர்த்தி வருவதன் நோக்கம், இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்காமை குறித்து அமெரிக்கத் தளபதி சந்தேகங்களை எழுப்பியிருந்தார்.
கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையில் சீனா, நீர்மூழ்கிகளை பயன்படுத்தி வருவது குறித்தும் அவர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சீனா தனது வர்த்தக நலன்களை பாதுகாப்பது என்ற பெயரில் பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தி வருவது தான், இந்தியா, சீனா, ஜப்பானிய கூட்டணிக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சீனாவின் இந்த வியூகத்துக்குள் எப்போதும், இலங்கையும் ஒரு மையமாகவே இருந்து வந்திருக்கிறது.
சீனாவின் பொருளாதார பலம், அதனை விட்டு விலக முடியாத நிலையை இலங்கைக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையின் அபிவிருத்திக்கு சீனாவின் தயவு தேவைப்படுவதால் தான், இந்திய, அமெரிக்க நலன்களைக் கருத்தில் கொண்டு இடைநிறுத்தப்பட்ட திட்டங்களுக்குக் கூட பச்சைக்கொடி காட்டும் நிலைக்கு இலங்கை அரசாங்கம் வந்திருக்கிறது.
அதேவேளை, சீனாவின் பாதுகாப்பு நலன்கள் விடயத்தில் இந்தியாவையோ, அமெரிக்காவையோ பகைத்துக் கொள்ளவும் இலங்கை தயாராக இல்லை.
இந்தப் பின்னணியில் தான், சீன-, இந்தியக் கடற்படைக் கப்பல்களின் வருகையை, மூலோபாய நோக்கங்களாக வெளிப்படுத்தாமல், அவற்றை முக்கியத்துவமற்றதாக வெளிப்படுத்த முனைந்திருக்கிறது பாதுகாப்பு அமைச்சு.
ஆனால், சீனக் கப்பல்களின் கொழும்பு வருகைதான், ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யாவை கொழும்புக்கு அனுப்பும் முடிவை எடுக்க வைத்தது என்பதை இந்திய கடற்படையின் பேச்சாளர் கப்டன் டி.கே.சர்மா உறுதி செய்திருக்கிறார்.
இதற்குப் பின்னரும், மூலோபாய நலன்களுக்கான போட்டிக்குள் இலங்கை இல்லை என்று, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க கொழும்பு முயல்வதையிட்டு ஆச்சரியப்படத்தான் முடிகிறது.
-ஹரிகரன்