சிலவேளைகளில் வாசகர்கள் யோசிக்கலாம், எழுதுவதற்கு பல்வேறு விடயங்கள் இருக்கின்றபோது, இந்தப் பத்தியாளரோ தொடர்ந்தும் தமிழ் அரசியல் தரப்பினர் மீதே விமர்சனங்களை அடுக்கிக்கொண்டு செல்கின்றாரே! ஏன்? இப்படி எவரேனும் கேட்டால், அவர்களது கேள்வியிலேயே பதிலும் உண்டு.

நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து ஆட்சிமாற்றம் மேலும் ஒரு படி முன்நகர்ந்தது. இதனை மேலும் நிரூபிக்கும் வகையில் இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, அதனை அமுல்படுத்துவதற்கான வாக்குறுதியையும் வழங்கியிருந்தது. அந்த வாக்குறுதிகளுக்கு அமைவாகவே அரசாங்கம் தற்போது பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.

ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து இலங்கையின் மீதான சர்வதேச சக்திகளின் கவனமும் அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக இலங்கையின் மீதான அமெரிக்க கரிசனை முன்னர் எப்போதுமில்லாதவாறு அதிகரித்திருக்கிறது.

இது இலங்கையின் உள்ளக விவகாரங்கள் தொடர்பானதல்ல. அதேபோன்று ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சில நிகழ்வுகளை ஆழ்ந்து நோக்கினாலும் அதன் தார்ப்பரியத்தை புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக அண்மைய நாட்களில் இந்தியாவின் முன்னெடுப்புக்களை தொடர்ந்து, அதற்குப் போட்டியாக சீனாவும் தன்னுடைய நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியா தன்னுடைய போர்க்கப்பல்களை இலங்கைக்கு அனுப்பும் வேளையில் சீனாவும் அதற்குப் போட்டியாக சில நகர்வுகளை முன்னெடுக்கின்றது.

கடந்த வாரம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிந்த நிலையில் சீனாவும் தன்னுடைய வெளிவிவகார அமைச்சரை கொழும்பிற்கு அனுப்பியிருந்தது.

இவைகள் அனைத்தும், இலங்கையின் உள்ளக பிரச்சினைகள் தொடர்பானவை அல்ல. எனவே ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து இலங்கை முற்றிலுமாக ஒரு பூகோள அரசியல் போட்டிக்குள் இழுத்துவரப்பட்ட நாடாகிவிட்டது.

இனி இலங்கை விரும்பினால்கூட அதிலிருந்து வெளியேற முடியாது. இவ்வாறானதொரு சூழலில்தான், புதிய ஆட்சியை பாதுகாக்க வேண்டிய தேவைப்பாடு அமெரிக்க, இந்திய மற்றும் மேற்குலக நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இலங்கைக்கு வரும் அனைத்து மேற்குலக ராஜதந்திரிகளும் ஒரு விடயத்தில் ஒத்துப்போபவர்களாகவே இருக்கின்றனர். அதாவது, இது உரையாடக்கூடிய அரசாங்கம்.

எனவே இவ்வாறானதொரு சூழல் தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஹூசைனும் அவ்வாறானதொரு தொனியில்தான் பேசிச் சென்றிருக்கிறார்.

அவர் கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசுகின்ற போதும் அவ்வாறானதொரு தொனியில்தான் பேசியிருக்கிறார். இதற்கு முன்னர், பேரவையின் ஆணையாளர் நவிப்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்துவிட்டு வெளியேறுகின்ற போது கூறிய விடயங்கள் கடுமையாக இருந்தன.

அனால் ஹூசைனால் அவ்வாறு கடுந்தொனியில் கூறமுடியாது. ஏனெனில் இது ஐ.நாவுடன் உரையாடலில் இருக்கின்ற அரசாங்கம். மகிந்த ராஜபக்ச ஐ.நாவுடன் ஒத்துழைக்க மறுத்திருந்தார்.

அவ்வாறானதொரு சூழலில்தான் அவரது ஆட்சி, சர்வாதிகார வழிகாட்டல்களை நோக்கி பயணிப்பதாக நவிப்பிள்ளை குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த அரசாங்கம் முன்னேற்றங்களை காண்பிக்கின்றது.

எனவே இதனுடன் உரையாடும்படியே அனைத்து தரப்பினரும் கோருகின்றனர். ஒருவேளை எதிர்பார்த்த விடயங்கள் உடனடியாக இடம்பெறாது போனாலும் கூட, தொடர்ந்தும் ஈடுபாட்டோடு இருங்கள் என்பதே தமிழர் தரப்பிற்கான மேற்குலகு மற்றும் இந்தியாவின் பரிந்துரையாக இருக்கிறது.

இப்படியான விடயங்களுக்கும் நான் குறிப்பிட்டிருக்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் யோசிக்கலாம். தொடர்பு இருக்கிறது!

இலங்கையை மையப்படுத்தி இவ்வாறான பல்வேறு விடயங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற போது, தமிழர் தரப்போ வெறும் பதவி நலனிலும், கட்சிவாதங்களிலும் மூழ்கிக்கிடக்கிறது.

பதவி நலன், கட்சி நலன் என்பவற்றுக்கு முன்னால் தங்களுக்கு வேறொன்றும் முக்கியமல்ல என்னும் வகையில் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கையே இப்பத்தி அசிங்க அரசியலின் உச்சம் என்றுரைக்கின்றது.

Dr.sevamikn1

சிவமோகன்,

சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், மருத்துவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், இலங்கை தமிழரசு கட்சியில் இணைவதற்கான விண்ணப்பத்தை, அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் ஒப்படைத்திருந்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட மாவை சேனாதிராஜா, சிவமோகனுக்கு தமிழரசு கட்சியில் அபயம் அளித்திருக்கின்றார். உண்மையில் இது இப்படியான விடயங்களை கையாளுவதற்கான காலமா?

இவ்வாறானதொரு விடயம் தொடர்பில் இன்றைய சூழலில் சிந்திக்கலாமா? ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் கூட, எந்தக் கட்சியில் சேரலாம் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் யோசிக்கின்றார் என்றால், அவர் எந்தளவு தூரம் தமிழ் மக்களின் நலன்சார்ந்து சிந்திக்கின்ற ஒருவராக இருந்திருக்கின்றார்?

நாடாளுமன்ற உறுப்பினர்தான் அப்படி சிந்திக்கின்றார் என்றால், அவரது செயலை வழிமொழிந்து ஆசீர்வதிக்கும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எந்தளவிற்கு தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கின்றார்.

இத்தனைக்கும் மாவை ஒரு அர்ப்பணிப்புமிக்க அரசியல் மரபிலிருந்து வந்தவர். அந்த அர்ப்பணிப்பெல்லாம் இன்று எங்கு போனது?

எவ்வாறு, விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை காலத்தில்கூட தங்களால் எதிரி என்று இனம்காணப்பட்டவர்களை வேட்டையாடினார்களோ, அதே போன்றதொரு காரியத்தையே இன்று மாவை சேனாதிராஜா முன்னெடுக்கின்றார்.

இது ஒரு மிக மோசமான அரசியல் கலாசாரம். தமிழ் சமூகத்தில் சிந்திக்கும் தரப்பினர் இப்போதும் உயிர்ப்போடு இருப்பது உண்மை எனின், இதுபோன்ற விடயங்கள் கண்டிக்கப்பட வேண்டும்.

உண்மையிலேயே மாவை தமிழ் மக்கள் நலன்சார்ந்து சிந்திப்பவராக இருந்திருந்தால், இன்றைய சூழலில் இது போன்றதொரு காரியத்தை அனுமதித்திருக்கக் கூடாது. ஆனால் பதவி மற்றும் கட்சி வெறிக்கு முன்னால் தமிழ் மக்களின் நலன் காணாமற் போய்விட்டது.

இன்று மாவை சோனாதிராஜா முன்னெடுத்திருக்கும் இதுபோன்ற காரியத்தைத்தான் முன்னர் தெற்கில் மகிந்த ராஜபக்சவும் முன்னெடுத்திருந்தார்.

பதவி, வசதிகளை காண்பித்து பலரையும் தன்வசப்படுத்தி தன்னுடைய பாராளுமன்றத்தை பலப்படுத்தியிருந்தார். அதே உக்தியை பயன்படுத்தித்தான் ஏனைய கட்சிகளின் வழியாகச் சென்று வெற்றிபெற்றவர்களை, அவர்கள் வெற்றிபெற்றதும் அவர்களது தனிப்பட்ட பலவீனங்களைப் பயன்படுத்தி தமிழரசு கட்சிக்குள் இழுத்துக்கொள்ளும் அசிங்கமான அரசியல் விளையாட்டில் மாவை ஈடுபட்டு வருகின்றார்.

இப்போது மாவைக்கும், மகிந்த ராஜபக்சவிற்கும் என்ன வித்தியாசம்? இதே சிவமோகன் ஏற்கனவே ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியில் உறுப்புரிமையை பெற்றிருந்த ஒருவர்.

வடக்கு மாகாண சபை தேர்தலின் போதுதான் முதன்முதலாக தமிழ் அரசியலுக்குள் பிரவேசித்தவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பிலேயே அந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழுவில் இணைந்து கொண்டார். இதன் பின்னர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். இவ்வாறான ஒருவரையே தற்போது தமிழரசு கட்சி தங்களுக்குள் உள்வாங்கியிருக்கிறது.

இவர் இவ்வாறு உள்வாங்கப்படுவதற்கு முன்னர், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே தற்போது இவர் தமிழரசு கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார். அரசியல் ரீதியான செயற்பாடுகளில், ஒருவர் எந்த அமைப்பு சார்ந்தும் இயங்கலாம். அது ஒருவரது தெரிவுச் சுதந்திரம்.

ஆனால் ஒரு கட்சியின் வழியாக மக்கள் மத்தியில் சென்று வெற்றிபெறும் ஒருவர், வெற்றி பெற்றதும் அக்கட்சியிலிருந்து வெளியேறி பிறிதொன்றுடன் இணைந்து கொள்கின்றார் என்றால், அதன் பொருள் பதவி நலன் என்பதாக அல்லாமல் வேறென்ன?

இதுபோன்ற தனிமனித பலவீனங்களைக் கையாண்டு, தங்களின் கட்சிகளை பலப்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுபவர்களை, மக்கள் மீது கரிசனை கொண்டவர்கள் என்று கூறலாமா? அசிங்க அரசியலின் உச்சம்?

ஒருவேளை வெற்றிபெறாத நிலையில் பிறிதொரு கட்சியில் ஒருவர் இணைந்து கொண்டாற்கூட, அது ஒரு பிரச்சினைக்குரிய விடயமல்ல, அது அவரது ஜனாநாயக ரீதியான தெரிவு எனலாம்.

ஆனால், ஒரு கட்சியின் வழியாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர், பிறிதொரு கட்சியில் இணைந்து கொள்வதென்பது, அதிலும் உரிமைக்காக இயங்குவதாக கூறும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு செய்வதானது, அவரை நம்பி வாக்களித்த மக்கள் அனைவரையும் மடையர்களாக கருதும் ஒரு செயலாகும்.

தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் ஓர் ஆழமான நம்பிக்கை நிலவுகிறது. அதாவது, தமிழ் மக்களை எவ்வளவும் ஏமாற்றலாம் ஆனால் அவர்கள் ஒரு போதும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள்.

அந்தளவிற்கு அவர்கள் ஓர் ஏமாளிக் கூட்டம். சிந்திக்கத் தெரியாத மடையர்கள். இந்த எண்ணப்பாடு மாவை போன்றவர்களுக்கு இருக்கின்ற வரையில் அவர்கள் ஒருபோதும் மாறப் போவதில்லை.

உயிர்களை கொடுத்து உருவாக்கிய ஒரு பெரும் அரசியல் போக்கு, இன்று வெறும் பதவி ஆசைகளுக்கும், துதிபாடல்களுக்கும் ஆட்பட்டு, மெது மெதுவாக வலுவிழந்து போய்க்கொண்டிருக்கிறது.

இனி வரும் காலத்தில் பணம் ஒன்றே தமிழ் அரசியலை தீர்மானிக்கப் போகிறது? இதனை மாற்ற ஏதாவது வழி இருக்கிறதா? மக்கள் மத்தியில் இது தொடர்பில் விழப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே விமோசனம்

– யதீந்திரா

Share.
Leave A Reply

Exit mobile version