உலக வரலாற்றில் முதல் தடவையாக, அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டு போட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஜப்பானை சரணடைய வைப்பதற்காகவே அணுகுண்டு போட்டதாக, அமெரிக்கா ஒரு நியாயத்தை சொல்லிக் கொண்டது.

ஆயினும் அந்த “நியாயம்” அப்போதே சந்தேகிக்கப் பட்டது.

atom bomb

அமெரிக்கா அணுகுண்டு போடுவதற்கு முன்னரே, ஜப்பான் சரணடையத் தயாராக இருந்தது. உண்மையில், அப்போது வளர்ந்து வரும் உலக வல்லரசாக கருதப்பட்ட, சோவியத் யூனியனை மிரட்டும் நோக்கில் ஜப்பானில் அணுகுண்டு போடப் பட்டது.

ஏனெனில், சோவியத் செம்படைகள் ஜப்பானை பிடிப்பதற்கு தயாராக இருந்தன. அதற்கு முதல் அமெரிக்கா முந்திக் கொண்டது.

1945 ம் ஆண்டு, ஹிரோஷிமா, நாகசாகி மீது, எந்தத் தேவையுமில்லாமல் அணுகுண்டு போடப் பட்டது. இதனை அமெரிக்க மரைன் உளவுத்துறை அதிகாரி அட்மிரல் Ellis Zacharias, மற்றும் அமெரிக்க ஜனாதிபதி Dwight D. Eisenhower ஆகியோர் தமது நினைவுக்குறிப்புகளில் எழுதி உள்ளனர்.

“அணுகுண்டு போட்டிருக்காமலே 15 செப்டம்பர் 1945 அன்று ஜப்பான் சரணடைந்து இருக்கும்” என்று எல்லிஸ் சகாரியாஸ் எழுதி உள்ளார்.

“ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதல் முற்றுமுழுதாக தேவையற்ற விடயம். ஏனெனில் நாங்கள் ஏற்கனவே ஜப்பானை வென்று விட்டோம்.” என்று ஐசன்ஹோவர் எழுதினார்.

“100 வருட கால உலக சரித்திரம் 1870-1970” (100 jaar Wereldgeschiedenis 1870-1970) என்ற நூலில் பேராசிரியர் A. Stam பின்வருமாறு எழுதி இருக்கிறார்:

“ஜூலை 1945 ஜப்பான் அரசு சரணடைவதற்கு தயாராக இருந்தது. ஏற்கனவே ஜப்பானிய ரகசியத் தகவல்களை உளவறிந்த அமெரிக்கர்கள் அதைத் தெரிந்து கொண்டனர். இருப்பினும், அணு குண்டு போடுவதற்கு தீர்மானிக்கப் பட்டது.

அதன் மூலம், சோவியத் யூனியன் உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்காவுடன் போட்டியிட முடியாத நிலை உருவாகும்.”

( படத்தில் சோவியத் ஸ்டாலின், அமெரிக்க ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் சர்ச்சில்)

பிப்ரவரி மாதம் நடந்த யால்ட்டா உச்சி மகாநாட்டில், ஐரோப்பாவில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முரண்பாடுகள் தோன்றின.

ஸ்டாலின் ஒரு பக்கம், ரூஸ்வெல்ட், சர்ச்சில் ஆகியோர் மறுபக்கம் முரண்பட்டனர்.

ஸ்டாலின் யால்ட்டா ஒப்பந்தத்தை தனக்கு விரும்பியவாறு மொழிபெயர்க்கப் பார்க்கிறார் என்று ரூஸ்வெல்ட் குற்றம் சுமத்தினார்.

ரூஸ்வெல்ட்டை அடுத்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்த ட்ரூமன் அணுகுண்டு போடும் முடிவை எடுத்தார். அமெரிக்காவிடம் பேரழிவு தரும் நாசகார ஆயுதங்கள் இருக்கின்றன என்பதை ஸ்டாலினுக்கு காட்ட வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

ஆகவே, ஜப்பான் சரணடைய தயாராக இருந்த போதிலும், 5 – 9 ஆகஸ்ட் 1945, ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப் பட்டன.

அதன் விளைவாக, ஆண்கள், பெண்கள், குழந்தைகளாக, 250.000 ஜப்பானியர்கள் கொல்லப் பட்டனர். அடுத்து வந்த வருடங்களில், மேலும் இலட்சக் கணக்கானோர் கதிர்வீச்சு காரணமாக ஏற்பட்ட புற்றுநோயால் இறந்தனர்.

அமெரிக்கா, இங்கிலாந்தின் மேலாதிக்க வெறிக்காக, ஸ்டாலினை தமக்கு கீழே அடிபணிய வைப்பதற்காக அந்த உயிர்கள் பலி கொடுக்கப் பட்டன.

அணுகுண்டு வீச்சாளர் ட்ரூமன் அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன்னரே தனது சுயரூபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

ஜூன் 1941 ஜெர்மனி ரஷ்யா மீது படையெடுத்தது. அப்போது The New York Times பத்திரிகை பேட்டியில் பின்வருமாறு கூறினார்:

“ஜெர்மனி வெல்லப் போகிறது என்று தெரிந்தால், நாங்கள் ரஷ்யாவுக்கு உதவ வேண்டும். ரஷ்யா வெல்லப் போகிறது என்று தெரிந்தால், நாங்கள் ஜெர்மனிக்கு உதவ வேண்டும். இந்த வகையில் அவர்கள் முடிந்த அளவு மக்களை கொன்று குவிக்கட்டும் என்று விட்டு விடுவோம்.”

இலங்கையில் முப்பதாண்டு காலமாக நடந்த ஈழப்போரிலும், அமெரிக்கா இதே மாதிரியான அணுகுமுறையை தான் கடைப்பிடித்தது.

சிறிலங்கா இராணுவம் வெல்லப் போகிறது என்று தெரிந்தால் புலிகளுக்கு உதவினார்கள். புலிகள் வெல்லப் போகிறார்கள் என்று தெரிந்தால், சிறிலங்கா இராணுவத்திற்கு உதவினார்கள்.

அந்த வகையில் முடிந்த அளவு அதிக எண்ணிக்கையிலான தமிழர்களும், சிங்களவர்களும் செத்து மடியட்டும் என்று வேடிக்கை பார்த்தார்கள்.

அப்படியான அமெரிக்கா தமிழர்களுக்கு ஆதரவாக நீதியாக நடந்து கொள்ளும் என்று நம்பும் அப்பாவிகள் இன்றைக்கும் உள்ளனர்.

-கலையரசன்-

Share.
Leave A Reply

Exit mobile version