கிளிநொச்சி நகரமே அதிர்ந்தது என்று வர்ணிக்கும் அளவுக்கு இன்று ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான ஊர்திகளும் பங்கேற்றிருந்தன.

வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கொடி அசைத்துத் தொடக்கி வைக்க கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்த மேதினப் பேரணியில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு கூட்டுறவு  அமைப்புகளைச் சேர்ந்த கூட்டுறவாளர்களும், பணியாளர்களும், தொழிற்சங்கத்தினரும் அலையெனத் திரண்டிருந்தார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள், வர்த்தகர்கள், தமிழ்தேசிய உணர்வாளர்கள் எனப்பல்வேறு தரப்பினரும் பங்கு கொண்டிருந்தார்கள்.

கூட்டுறவு அமைப்புகளின் சாதனைகள், கூட்டுறவு அமைப்புகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், வடக்கு மாகாணத்தின் வளங்கள் என்பனவற்றைப் பிரதிபலிக்கும் விதத்தில் ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான ஊர்திகளும் அணிவகுத்து வந்தன.

மேதினப்பேரணி கூட்டுறவுக்கலாசார மண்டபத்தைச் சென்றடைந்ததும் அங்கு கிளிநொச்சி மாவட்டக் கூட்டுறவுச் சபைத் தலைவர் அ. கேதீஸ்வரன் தலைமையில் மேதினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

வடக்கின் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் அனுப்பிவைத்த விசேட வாழ்த்துச் செய்தியை கல்வி அமைச்சர் த. குருகுலராஜா வாசித்திருந்தார்.

வடமாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், பசுபதி அரியரத்தினம், சு. பசுபதிப்பிள்ளை, த. சிவநேசன், வ. கமலேஸ்வரன், ம. தியாகராஜா, இ. இந்திரராஜா, எம். பி. நடராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

வடக்கில் இம்முறை இடம் பெற்ற மேதினப் பேரணிகளில் கூட்டுறவாளர்களின் மேதினப்பேரணி மிகப்பிரமாண்டமானதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

kudammmm

Share.
Leave A Reply

Exit mobile version