நாம் ஒற்றுமையாக பயணித்தால் அடுத்த மேதினத்தை வேறு ஓர் சூழலில் அனுஸ்டிக்க முடியும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்து உள்ளார்.
யாழ்.மருதனார் மடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
தொழிலாளர்கள் பொறுத்த வரையில் முக்கியமான புனிதமான தினம். தங்களுடைய அந்தஸ்து உரிமைகளை பெறுவதற்காக சர்வதேச ரீதியில் பல போராட்டங்களை நடாத்தி உள்ளார்கள்.
இந்த நாட்டில் புதிய அரசியல்சாசனத்தை உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன அவ்விதமான அரசியல் சாசனத்தை உருவாக்கும் போது அடிப்படை உரிமைகள் மனித உரிமைகள் சம்பந்தமாக தனிப்பட்ட கோவை அந்த அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படும்
அவ்விதமான தனிப்பட்ட கோவை மூலம் மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் உள்ளடக்கப்படும் போது தொழிலாளர்களின் உரிமைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் அது சாதாரண அரசியல் சிவில் உரிமைகளாக இருக்க முடியாது அது சமூக கலாச்சார பொருளாதார உரிமைகளையும் உள்ளடக்க கூடியவாறு அமைய வேண்டும்.
அந்த அரசியல் சாசனம் உருவாக்கப்படும் போது அந்த கருமத்திற்கு நாங்கள் நிச்சயமாக எமது கூடிய கவனத்தை செலுத்துவோம் அதை உள்ளடக்க நாங்கள் முயற்சிப்போம்.
விசேடமாக இந்த நாட்டில் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் தமிழ் தொழிலாளர்கள் பல விதமான இன்னல்களை நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளார்கள். பல விதமான அழிவுகளையும் எதிர்நோக்கி உள்ளார்கள் அவை ஈடுசெய்யப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் யுத்தத்தால் அழிவடைந்த பிரதேசத்திற்கு ஒரு விசேடமான அபிவிருத்தி திட்டம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் சிந்திப்பதாகவும் அதற்கு உதவி செய்ய சர்வதேச சமூகம் முன் வந்து உள்ளதாகவும் நாங்கள் அறிகின்றோம்.
ஒரு சர்வதேச மாநாடு இந்த வருடத்தில் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக நடைபெற உள்ளதாக அறிகின்றோம்.
அவ்விதமான ஒரு மாநாடு நடைபெறும் போது வடக்கு கிழக்கின் அபிவிருத்தி வளங்கள் எல்லாவற்றையும் நாம் உருவாக்க வேண்டும்.
அந்த கருமத்தில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த விடயங்கள் தொடர்பில் அறிந்தவர்கள் ஒன்றிணைந்து அதனை முன்னெடுக்க வேண்டும்.
இந்த நாட்டில் இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு இருந்து ஒரு ஆட்சி முறை இருந்து இருந்தால் இங்கு பலர் குறையாக கூறிய விடயங்கள் பலவற்றை கூறி இருக்க மாட்டீர்கள்.
சட்டத்தை ஆக்கும் அதிகாரம், நிர்வாக அதிகாரம், நீதி அதிகாரம் இவை மூன்றும் தான் ஆட்சி அதிகாரம் இறைமையின் ஓர் அம்சம். தேர்தல் ஜனநாயகம் இது இரண்டாவது அம்சம் மூன்றாவது அம்சம் மனித உரிமைகள்
இறைமையின் அடிப்டையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு இருந்தால் எமது கைகளில் சட்டத்தை ஆக்கும் அதிகாரம் , நிர்வாக அதிகாரம் என்பன இருந்தால் எமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி எமது வாக்குரிமையை பயன்படுத்தி நாங்கள் விரும்பிய ஆட்சியாளர்கள் ஊடக எமது தேவைகளை நிறைவேற்றும் தகுதி உள்ளவர்களாக நாங்கள் இருந்து இருப்போம்.
எங்களை பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் காணாமல் போனோரின் விடயத்தில், மனித உரிமை மீறல்கள், இவை இன்று சர்வதேச மயமாக்கப்பட்டு உள்ளது.
2012 , 2013, 2014, 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் உடந்தையாக இருந்துள்ளது. அந்ததீர்மானத்தில் அவர்களும் பங்காளிகள்.
அந்த தீர்மானத்தின் அடிப்படையில் உண்மை அறியப்படவேண்டும். உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும், நடைபெற்ற சம்பவங்கள் இனி மேல் நடைபெறாமல் இருக்க வேண்டிய ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டும் , நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட்டு மக்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்த கூடிய நிலைமை இருக்க வேண்டும் என்ற பொறுப்பு இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு உள்ளது.
அவ்விதமான ஓர் தீவு ஏற்படும் பட்சத்தில் கடற்தொழில் , விவசாயம், மீள் குடியேற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இல்லாமல் போகும்.
கடந்த 2009ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரையில் ஒன்றும் நடைபெறவில்லை தற்போது சில கருமங்கள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.
அவை துரிதமாக இடம்பெற வேண்டும். அவற்றை துரிதமாக நிறைவேற்ற எங்களால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
இந்த விடயங்கள் சம்பந்தமாக தேவை ஏற்படின் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை கூடாக கேள்விகளை எழுப்புவோம் விசேடமாக காணி விடுவிப்பு தொடர்பில் பல கேள்விகளை எழுப்ப வேண்டிய தேவை உள்ளது. அதை நாங்கள் செய்வோம் .
பழைய அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவை இப்பவும் தொடர்கின்றது. அதற்கு சில அதிகாரிகள் உடந்தை என்பது எமக்கு தெரியும். அதனை நாங்கள் கவனத்தில் எடுத்து உள்ளோம்.
இவற்றை எல்லாம் நாங்கள் அடைவதற்கு அனைவரும் ஒருமித்து நிற்க வேண்டும்.
நாங்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும் எங்கள் மத்தியில் எவ்விதமான பிரிவினைகளும் இல்லை பொறுப்பு கூறல் கடமையை நிறைவேறுவதாக இருந்தால் மக்களுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றி அதற்கு தீர்வு காண வேண்டி இருந்தால் , எமக்கு நியாமான அரசியல் தீர்வு வேண்டுமாயின், நாங்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.
இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு நல்லிணக்கம் இல்லாமல் இந்த அரசாங்கமோ அல்லது வேறு எந்த அரசாங்கமோ தமது இலக்குகளை அடைய முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எங்களை பொறுத்தவரையில் ஒருமித்த ஒரு நாட்டுக்குள் நாடு பிளவு படாமல் எமது மக்களின் சுய மரியாதை கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு எங்களுக்கு ஒப்படைக்கும் கருமங்கள் சமபந்தமாக அதிகாரங்களை பெற்று ஒரு தீர்வை காண்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த வடக்கு கிழக்கில் , சுயமரியாதை கௌரவத்துடன் வாழ வேண்டும்.
இதனை நாங்கள் எல்லோரும் உணர வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும். கூட்டமைப்பு ஒருமித்து செயற்பட வேண்டும். எமக்கு ஓர் சந்தர்ப்பம் வந்து உள்ளது.
எமது பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அதனை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
நாங்கள் இந்த சந்தர்ப்பத்தை அடைய பாரிய விலை கொடுத்துள்ளோம். எமது மக்கள் பாரிய துன்பங்களை , சேதங்களை , உயிரிழப்புக்களை சந்தித்து உள்ளார்கள்.
இந்த சந்தர்ப்பம் கை நழுவி போக அனுமதிக்க முடியாது. இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
இதில் வேற்றுமைக்கு இடம்கொடாது அனைவரும் ஒன்றாக ஒற்றுமையாக ஓர் அணியில் திரண்டு முடிவை காண வேண்டும். அவ்விதமாக நிற்போமாக இருந்தால் சர்வதேச சமூகத்தின் மதிப்பை நாங்கள் பெறுவோம்.
சர்வதேச சமூகம் தமிழ் பேசும் மக்கள் நியாமான அரசியல் தீர்வை பெற வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாக இருக்கின்றார்கள்.
இதனை நாங்கள் உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்படுவோமாக இருந்தால் நிதானமாக பக்குவமாக செயற்படுவோமாக இருந்தால் அடுத்த மேதினத்தை நாங்கள் அனுஸ்டிக்கும் போது வேறு ஓர் சூழலில் அனுஸ்டிக்க முடியும்.
நாங்கள் புதிதாக எதனையும் கேட்கவில்லை பல்வேறு இனங்களை சார்ந்த மக்கள் பல்வேறு மதங்களை சார்ந்த மக்கள் , பல்வேறு கலாச்சரங்களை பின்பற்றும் மக்கள் உலகின் பல்வேறு நாடுகளில் என்ன விதமான ஆட்சி முறையை அமைத்து அந்த ஆட்சி முறை ஊடாக ஒற்றுமையாக வாழ்கின்றார்களோ அதனையே நாமும் கேட்கின்றோம்
நாட்டை பிரிக்க கோரவில்லை, நாட்டை பிளவு படுத்த கேட்கவில்லை. அரசியல் தீர்வினை பெறுவது எமது பிறப்பு உரிமை அதனை எவரும் மறுக்க முடியாது.
ஆனால் இதில் நாம் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் எம்மிடம் எவ்விதமான வேற்றுமைக்கும் இடம் இருக்க கூடாது. விசேடமாக எமது பங்காளி கட்சிகளிடம் நான் மிகவும் வினயமாக கேட்பது என்ன என்றால் நாங்கள் இந்த பயணத்தில் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என தெரிவித்தார்.