நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட வேண்டுமாயின் விரைவில் அரசியல் தீர்வை முன்வைப்பதைத் தவிர மாற்று வழியில்லை.
இன்றைய அரசு இதனை உணர்ந்து செயல்படுவதாகவே நாம் உணருகின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அரசியல் தீர்வொன்றை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நல்ல தொரு சூழ்நிலையில் புலம்பெயர்ந்தவர்கள் வருகை தந்து பாரிய முதலீடுகளைச் செய்து எமது இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நியாயமான அதிகாரப் பகிர்வு கொண்டு வரப்பட்டால் அதுவும் நாங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் ஏற்பட்டால் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு, கல்வி, விவசாயம் என பல விடயங்கள் எமது கைகளுக்கு வந்து சேரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா திருகோணமலைச்சங்கம் மற்றும் அவுஸ்திரேலியா மருத்துவர் உதவி அமைப்பு, சிட்னி சைவ மன்றம் (முருகன் ஆலயம்) ஆகியவற்றின் 4.5 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் பாதிக்கப்பட்ட கிராமமான தென்ன மரவடி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட சமூக நிலைய கையளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்டும் ஆண்டாக இவ்வருடத்தை நாம் எதிர்பார்க்கின்றோம்.
எங்கள் மக்களின் வாழ்வாதாரத்தில் மறுமலர்ச்சி காணப்பட வேண்டுமாயின் புலம்பெயர் சமூகம் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள தாய் நாடு திரும்ப வேண்டும் அவர்களுக்கு பகிரங்க அழைப்பொன்றை யான் விடுக்கின்றேன்.
இந்த வாய்ப்பான சந்தர்ப்பத்தை புலம்பெயர் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது எம் எதிர்பார்ப்பாகும்.
நாட்டில் காணப்படும் பிரச்சினைகளான பொருளாதாரப் பிரச்சினை, மீள் குடியேற்றம் காணிப் பிரச்சினை, வீட்டு வசதி, தொழில்வாய்ப்பு என்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் அதிகாரம் என்பது மத்தியில் குவிந்திருந்துப்பதுதான்.
அரசியல் தீர்வொன்று வழங்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அவ்வதிகாரங்கள், பிராந்தியங்களுக்கு மாகாணங்களுக்கு கையளிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு பகிர்ந்தளிக்கும் பட்சத்தில் தான் மக்கள் இறைமையின் அடிப்படையில் தாங்கள் தெரிவு செய்யும் பிரதிநிதி ஊடாக இறைமையினைப் பயன்படுத்தி தமது பிரச்சினைகளுக்கு பரிகாரம் காண முடியும்.
இதற்காகவே தற்பொழுது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு சில ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு பாராளுமன்றம் ஓர் அரசியல் சாசனப் பேரவையாக மாறியிருக்கிறது.
அது தற்பொழுது செயற்பட்டு வருகின்றது. நாட்டுக்காகவும் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் தமிழ்ப் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவும் ஒரு அரசியல் தீர்வு அவசியம் என்பதை நாம் அத்தியாவசியமாகக் கருதுகிறோம்.
இக்கருத்தானது நாட்டில் உண்டு. சர்வதேசத்தில் காணப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மத்தியில் அவசியமென உணரப்பட்டிக்கிறது.
அரசியல் தீர்வென்பது அவசியமானது. அதைக் குழப்ப யாரும் முயற்சி செய்யக்கூடாது. அரசியல் தீர்வு விடயத்தில் முன்னேற்றம் இல்லையென்று கருத முடியாது முன்னேற்றம் காணப்படுகிறது.
நாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை குழப்புவதன் ஊடாக அரசியல் தீர்வுக்காண வாய்ப்பை இல்லாமல் ஆக்கக்கூடாது.
இவ்வருடத்துக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம். . இவ்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
இதை எமது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். நிதானமாகவும், பக்குவமாகவும் நடந்து கொள்ள வேண்டும். மக்களை குழப்பிவிடுவதற்கு பல்வேறு முயற்சிகளை, பல்வேறு கொள்கைவாதிகள் பல்வேறு கைங்கரியங்களில் ஈடுபடுவார்கள். மக்களைக் குழப்பி வரவிருக்கும் அரசியல் தீர்வை தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.
உண்மையும். யதார்த்ததைத்தையும் எம்மவர் கூட புரிந்து கொள்ளாமல் தங்கள் சுயலாபத்துக்காக தேவைகளுக்காக அரசியல் லாபங்களுக்காக சில கருமங்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இவ்வகையான போக்குகள் அரசியல் தீர்வு விடயத்தில் குழப்பமான நிலைமைகளைக் கொண்டு வரலாம். ஆகையால் எமது மக்கள் பொறுமையாக இருந்து எல்லாக் காரியங்களிலும் வெற்றிபெற வேண்டும். எதையும் விட்டுக்கொடுங்கள் என்று யான் கூறவில்லை.
எதையும் இழக்க வேண்டுமென்று நான் சொல்ல விரும்பவில்லை. எமது இலட்சியங்களை வலியுறுத்துகின்ற அதேவேளையில் அரசியல் தீர்வை நோக்கிய பயணத்துக்காக நாம் எல்லோரும் பாடுபட வேண்டும்.
அரசியல் தீர்வை வழங்குவதற்கான அடிப்படையில்தான் அரசு தற்பொழுது செயற்பட்டு வருகின்றது.
ஏனெனில் அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரம் தேவையானதல்ல. இந்நாட்டுக்குத் தேவையானது. இலங்கை இன்றைய நெருக்கடியிலிருந்து மீட்கப்பட வேண்டுமாயின் கடன் சுமையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின் இந்த நாட்டுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வர வேண்டுமாயின் விரைவில் அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் உள்ளது.
அரசியல் தீர்வு ஏற்படாமல் இவ்விதமான அபிவிருத்திகளுக்கு இடமில்லை.
ஆகையால் அரசியல் தீர்வென்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, தமிழ்ப் பேசும் மக்களுக்கு மட்டுமல்ல. இந்நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் நாட்டுக்கும் அவசியமானதாகும்.
இதை உணர்ந்து நாட்டுக்காகவும் நாட்டில் வாழும் சகல இனங்களுக்காகவும் குறிப்பாக தமிழ் மக்களுக்காகவும் தமிழ்ப் பேசும் மக்களுக்காகவும் அரசியல் தீர்வைக்காண முயற்சிக்க வேண்டும்.
வட கிழக்கில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
யுத்தத்தால் அழிந்த வட கிழக்கை கட்டியெழுப்ப வேண்டுமென்று பாரிய பொருளாதார திட்டங்களை வகுப்பதற்கு சர்வதேச சமூகமும் உலக நாடுகளும் விரும்புகின்றன.
இன்றைய இலங்கை அரசாங்கமும் அதற்கு அனுசரணை வழங்க தயாராக இருக்கின்றது. . திருகோணமலையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கின் அடிப்படையில் சிங்கப்பூர் நாட்டின் நிபுணர்கள் திட்டங்களை வகுத்து வருகின்றார்கள். இவ்வருடம் முடிவதற்கு முன் மேற்படி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தென்ன மரவடிக் கிராமத்தைச் சேர்ந்தவர்களால் உதவப்பட்டு இந்த மக்கள் மண்டபம் அமைக்கப்பட்டிக்கின்றது.
இதேபோன்று கனடாவிலுள்ள அன்பர்களின் உதவியும் எமக்கு கிடைக்கப் பெற்றுக் கொண்டிருக்கிறது. சம்பூரில் பல வீடுகளை நிர்மாணித்து தந்துள்ளார்கள். தொடர்ந்தும் உதவி வருகின்றார்கள்.
இதேபோன்றே எமது புலம்பெயர்ந்த மக்கள் இவ்வகை அபிவிருத்திகளுக்கு உதவ வேண்டும். பங்காளிகளாக மாற வேண்டும். புலம்பெயர்ந்த எம்மவர்களுக்கு பகிரங்கமான அழைப்பொன்றை விடுக்க விரும்புகின்றேன்.
அரசியல் தீர்வொன்றை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நல்ல தொரு சூழ்நிலையில் புலம்பெயர்ந்தவர்கள் வருகை தந்து பாரிய முதலீடுகளைச் செய்து எமது இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இது அவர்களது தார்மீகமான கடமையெனக் கருதுகிறேன். புலம்பெயர்ந்த சமூகம் அனைத்தும் இவ்விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
நியாயமான அதிகாரப் பகிர்வு கொண்டு வரப்பட்டால் அதுவும் நாங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் ஏற்பட்டால் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு, கல்வி, விவசாயம் என பல விடயங்கள் எமது கைகளுக்கு வந்து சேரும்.
ஆனால் மத்தியில் இருக்க வேண்டியவை மத்தியிலிருந்த பிராந்திய, மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய அதிகாரங்கள் உரிய முறையில் ஒதுக்கப்பட வேண்டும்.
அவ்விதமான ஒரு தீர்வைத் தான் நாம் எதிர்பார்க்கின்றோம். அவ்விதமான ஓர் தீர்வு வருகின்றபோது மாகாண, பிராந்திய ஆட்சிக்கு வலு உண்டாகும். அவை எம்கையில் இருக்கும். அதை நாம் அடைய வேண்டும்.
தற்பொழுதுள்ள அரசாங்கம் நியாயமாக செயற்பட்டு வருகின்ற காரணத்தினால் எமது குறிகோள்களை அடையக்கூடிய வாய்ப்பு எமக்கு வந்திருக்கிறது.
இச்சந்தர்ப்பம் தொடர்ந்தும் இருக்குமென நாம் கருதிவிடக்கூடாது. சந்தர்ப்பம் இருக்கும்வரையில் அதை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எவருக்கு மாறாகவும் நாம் செயற்ட விரும்பவில்லை. பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். முஸ்லிம் மக்களுக்கு மாறானவர்கள் அல்லர்.
முஸ்லிம் மக்களுக்கோ சிங்கள மக்களுக்கோ எவ்வித தீங்கையும் இழைக்க நாம் விரும்பவில்லை. முயற்சிக்கவுமில்லை.
ஆனால் பல நூற்றாண்டு காலமாக பரம்பரை பரம்பரையாக இந்நாட்டில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் சுதந்திரமாக சுயமரியாதையுடன் இந்நாட்டில் வாழ்வதற்கு எமக்கு உரிமையுண்டு. என்பதைத்தான் நாங்கள் தெரிவிக்க விரும்புகின்றோம். அந்த உரிமையை நாம் பெற வேண்டும்.
எங்கள் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உண்டு என்பதையும் நான் அறிவேன், தென்ன மரவடியில் காணப்படும் காணிப் பிரச்சினை போல் கங்குவேலி படுகாட்டில் காணப்படுகிறது.
படுகாட்டுப் பிரச்சினை அண்மையில் தீர்க்கப்பட்டுள்ளது. தென்னமரவடி மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும். இதுவும் விரைவில் தீர்க்கப்படுமென்று நினைக்கின்றேன். எல்லாப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலா முக்கியமாக இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு எங்கள் கையில் அதிகாரங்கள் வந்து சேர வேண்டும். அரசியல் சாசன மாற்றங்களின் ஊடாக அதுவர வேண்டும்.