மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் கோட்டக் கல்விப் பிரிவில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் பலர் பாடசாலைக்குச் செல்லாமல் அலைந்து திரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே, அவர்களைக் கண்டுபிடிக்க இன்று செவ்வாய்க்கிழமை வீடுகளிலும் சுற்றுப்புறக் காடுகளிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தெரிவித்தார்.
பாடசாலைகளுக்குச் செல்லாமல் மறைந்து திரியும் இடைவிலகியுள்ள மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நேரடியாக சந்தித்து எச்சரிக்கை செய்து மீண்டும் அவர்களைப் பாடசாலை வகுப்புக்களில் சேர்ப்பித்து கல்வியைத் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக தாம் இந்த முயற்சியைத் தொடங்கியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் ஏறாவூர் நகர உதவிப் பிரதேசசெயலாளர் எம்.ஏ.சி. றமீஷா, கிராம சேவகர்கள். மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அதிகாரிகள், பொலிஸார், மற்றும் சமூகநல செயற்பாட்டாளர்களும் இணைந்திருந்தனர்.
மீராகேணி, அல் அமான் வித்தியாலயத்தை அண்மித்த மீராகேணி, முஹாஜிரீன் கிராமம், றூபி முஹைதீன் கிராமம், ஸக்காத் கிராமம், சிட்னி கிராமம் ஆகிய கிராமங்களிலுள்ள வீடுகளிலும் சுற்றாடலிலும் இடைவிலகிய மாணவர்களைத் தேடி வேட்டை இடம்பெற்றது.
இக்குழுவினர் வருவதை அவதானித்த இடைவிலகிய மாணவர்களுடன், அவர் தம் பெற்றோரும் வீடுகளுக்குள் மறைந்து கொண்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நடவடிக்கையில் பாடசாலையை விட்டு இடைவிலகி மறைந்து, அலைக்கழிந்து திரியும் சுமார் 16 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டன.
இவர்களில் சுமார் 10 பேர் உடனடியாகவே பாடசாலை வகுப்புக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தெரிவித்தார்.