குருணாகல், வாரியபொல பிரதேசத்தில் 2 கோடி ரூபா கப்பம் கோரி வெள்ளை நிற ஹைப்ரிட் ரக காரில் வந்தோரால் கடத்தப்பட்ட பிரபல கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகரின் மகன் முஹமட் ஆஷிக் (வயது 20) நேற்று அதிகாலை நிக்கவெரட்டிய நகரில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள் ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக அவரை நேற்று அதிகாலை 5.50 மணியளவில் நிக்கவரட்டிய நகரின் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் வைத்து மீட்டதாக குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.
குறித்த கடத்தல் மற்றும் கப்பக் குழுவைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளதையடுத்தே கடத்தப்பட்ட இளைஞர் நிக்கவரட்டியில் கைவிடப்பட்டுள்ளதாகவும் அதனையடுத்து அவரை மீட்டு நிக்கவரட்டி வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நிக்கவரட்டியில் இருந்து குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட குறித்த இளைஞன் அங்கு சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரிடம் பெற்றுக்கொண்ட விஷேட வாக்கு மூலத்துக்கு அமைவாக மேலும் நான்கு சந்தேக நபர்களையும் மற்றொரு வாகனத்தையும் தேடி விசாரணை தொடர்வதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.
கடந்த வியாழனன்று இரவு 8:15 மணியளவில் வாரியபொல நகரில் உள்ள தனது தந்தைக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் இருந்து இரவு உணவினை உட்கொள்ள மெல்வத்த 3 ஆம் குறுக்கு வீதியில் உள்ள தனது வீடு நோக்கி மொஹம்மட் ஆஷிக் என்ற 20 வயதான இளைஞன் தனது துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.
இதன்போது ஆசிக்கின் செருப்பு மற்றும் துவிச்சக்கர வண்டி ஆகியன வீட்டில் இருந்து 200 மீற்றர் தொலைவில் மூன்றாம் குறுக்கு வீதியில் மீட்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் அடுத்த 15 நிமிடங்களில் ஆஷிக்கின் சகோதரனை ஆஷிக்கின் தொலைபேசியூடாக அழைத்த கடத்தல் குழுவினர் அவரை விடுவிப்பதற்கு 2 கோடி ரூபாவை கப்பமாக கோரியுள்ளனர்.
இதனையடுத்தே விடயம் வாரியபொல பொலிஸாரின் கவனத்துக்கு சென்றுள்ளது.
அதனையடுத்து வட மத்திய, வட மேல் மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜே குணவர்தனவின் உத்தரவுக்கு அமைய குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மகேஷ் சேனாரத்ன ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சி.ஏ.பி. ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய வாரியபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த பண்டாரவின் கீழான சிறப்புக் குழு விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்த விசாரணைகளுக்காக குருணகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மகேஷ் சேனாரத்ன, உதவி பொலிஸ் அத்தியட்சர் சி.ஏ.பி. ஜயசுந்தர ஆகிய மூவரும் வியாழன் இரவு முதல் வாரியபொல பொலிஸ் நிலையத்தில் தங்கியிருந்து ஆலோசனைகளை வழங்கி சந்தேக நபர்களைக் கைது செய்யும் திட்டத்தை வகுத்து ஆலோசனை வழங்கி வந்தமை விஷேட அம்சமாகும்.
இவர் நீண்டகாலமாகவே வாரியபொல நகரில் வர்த்தகம் செய்யும் நிலையில் சில வருடங்களுக்கு முன்னரேயே இவரது வர்த்தக நிலையத்தை அண்டிய மெல்வத்த வீதியின் 3வது ஒழுங்கையில் இவர் வீட்டினை வாங்கியிருந்தார்.
நகரின் மையத்திலிருந்து சுமார் 350 மீற்றர் தொலைவில் இவரது வீடு உள்ளது. ஆஷிக் குடும்பத்தில் நான்காவது பிள்ளையாவார். . இவருக்கு இரு மூத்த சகோதரிகளும் ஒரு மூத்த சகோதரனும் இளைய சகோதரனும் உள்ளனர்.
க.பொ.த.( சா/த) வரை படித்து ஆஷிக் தந்தைக்கு உதவியாக இருக்கும் மூத்த சகோதரனின் வழியில் தானும் தந்தையின் வியாபார நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகிறார். இவர்களுடன் வர்த்தக நிலையத்தில் மேலும் ஆறு ஊழியர்கள் பணிபுரிந்துள்ளார்..
இந் நிலையிலேயே சம்பவ தினமன்று இரவு உணவு எடுத்து வருவதற்காக துவிச்சக்கர வண்டியில் வீட்டுக்கு போகும் வழியில் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலேயே சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந் நிலையிலேயே ஆஷிக்கின் மூத்த சகோதரனான இஜாஸுடைய தொலைபேசிக்கு தம்பி ஆஷிக்கின் தொலைபேசியிலிருந்து அழைப்பொன்று வந்துள்ளது.
சிங்கள மொழியில் கதைத்துள்ள நபர் ஒருவர் நாம் உமது தம்பியை எமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். இவரை விடுவிக்க வேண்டுமாயின் எமக்கு இரண்டு கோடி ரூபாய் தரவேண்டும் இல்லையெனில் உங்கள் தம்பியை எதிர்பார்க்க வேண்டாம். என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது “எம்மிடம் தருவதற்கு அவ்வளவு பணமில்லை அவ்வளவு பெரிய தொகையை அச்சடித்துத்தான் தரவேண்டும்.” என இஜாஸ் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் அழைத்துள்ள கடத்தல்காரர்கள் “புதிதாக வீடு கட்டியுள்ளீர்கள் புதிதாக கடை கட்டியுள்ளீர்கள்” என்றும் அவர்களது வாகனங்களின் விபரங்கள் அசையாச் சொத்துக்களின் விபரங்கள் அனைத்தையும் சொல்லி கப்பத்தை கேட்டுள்ளனர்.
அவைகள் வங்கிக் கடன் மற்றும் உறவினர்களின் மூலம் பெற்றவை. அந்த கடன்களை மீள செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்என கடத்தல் காரர்களுக்கு பதிலளித்துள்ளார்.
அப்படியாயின் உங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது?
என கேட்டுள்ளனர். அதற்கு இஜாஸ் இப்போதைக்கு 1 ½ இலட்சம் ரூபாய் தரலாம் என குறிப்பிட்டுள்ளார்.
கடத்தல் காரர்கள் தொடர்ந்து தங்க நகைகள் தாராளமாக உங்களிடம் இருக்குமே இருக்கும் பணத்தையும் நகைகளையும் எடுத்துக் கொண்டு நாம் சொல்லும் நேரத்தில் சொல்லும் இடத்துக்கு தனியாக வரவேண்டும். என கூறி தொலைபேசியை செயழிழக்கச் செய்துள்ளார்.
இந் நிலையிலேயெ கடந்த வியாழனன்று இரவு 12 மணியளவில் கடத்தல் கடத்தல்காரர்கள் வாரியபொல நகரிலிருந்து குருநாகல் நோக்கிய புத்தளம் வீதியின் சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள மஹகெலிய எனும் இடத்துக்கு வரும்படி கூறியுள்ளனர்.
அங்கு சென்ற இஜாஸுக்கு மீண்டும் ஹத்அமுன எனும் குளத்தருகில் வரும்படி கூறப்பட்டுள்ளது. . அங்கு காரை திருப்பிச் சென்ற இஜாஸுக்கு மீண்டும் காரைத்திருப்பிக் கொண்டு மஹகெலிய எனும் இடத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் பணத்தையும் நகைகளையும் வைத்து விட்டு போகும் படி தொலைபேசியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஜாஸ் மீண்டும் காரை திருப்பிக் கொண்டு சென்று குறிப்பிட்ட இடத்தில் பணத்தையும் நகைகளையும் வைத்து விட்டு சென்றுள்ளார்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அழைப்பை ஏற்படுத்தியுள்ள கடத்தல் காரர்கள் :– திரும்பி வந்து நீங்கள் வைத்துவிட்டுச் சென்றவற்றை எடுத்துக் கொண்டு போகவும். எங்கு எப்போது அதனை வைக்க வேண்டுமென்று பின்பு கூறுகின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த உரையாடல்கள் அனைத்துக்கும் ஆஷிக் உடைய தொலைபேசியையே பயன்படுத்தியதுடன் ஆஷிக் தாம் கடத்தப்படும் செய்தியை சகோதரனுக்கு சொல்வதற்கும் பிறகொரு சந்தர்ப்பத்தில் தம்பியுடன் கதைக்க வேண்டுமென சொன்ன போது குடும்பத்தினரோடு கதைப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே கடத்தல் காரர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள் பல கிடைத்ததை அடுத்து பொலிஸாரின் ஆலோசனைக்கு அமைவாக கடத்தப்பட்ட இளைஞனின் உறவினர் கப்பத் தொகையை 2 கோடியில் இருந்து படிப்படியாக குறைத்துள்ளனர்.
அதன்படி இறுதியாக கப்பத் தொகையானது 85 இலட்சம் ரூபாவில் முடிவாகியுள்ளது. இதனையடுத்து பொலிஸாரின் ஆலோசனைக்கு அமைவாக 85 இலட்சம் ரூபாவை கப்பமாக செலுத்துவதைப் போன்று பாசாங்கு செய்யப்பட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே கப்பக் காரர்கள் கடத்தப்பட்ட இளைஞரின் உறவினர்களை தொடர்புகொள்ளும் போது அந்த தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்திய அறிவியல் ரீதியிலான விசாரணைகளையும் சிறப்பு பொலிஸ் குழுவை ஈடுபடுத்தி முன்னெடுத்திருந்தனர்.
பலதொலைபேசி உரையாடல்கள் சந்தேக நபர்களுக்கும் கடத்தப்பட்ட இளைஞரின் உறவினர்களுக்கும் இடையே இடம்பெற்றுள்ளன.
இறுதியாக நேற்று முன்தினம் (14) மாலை ஐந்து மணிக்கு குருநாகல் குளத்து வீதிக்கு வறுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன் பின்பும் பல இடங்களுக்கு மாற்றி அழைக்கப்பட்டு இறுதியாக இருள் சூழ்ந்து விட்டது. மீண்டும் நாளை பார்ப்போம் என குடும்பத்தார் பல காரணங்களை தெரிவித்து கப்பக் காரர்களால் அலைக்கழிக்கப்ப்ட்டுள்ளனர்.
இந் நிலையிலேயே நேற்று முன் தினம் மாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வெள்ளை நிற ஹைபிரிட் கார் கைப்பற்றப்பட்டதுடன் அதன் உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர்.
ஊருபொக்க பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் மொரட்டுவ பல்கலைக் கழக பொறியியல் பட்டதாரி என்பதுடன் கண்டியில் குயின்ஸ் எகடமி என்ற பெயரில் பிரத்தியோக வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர் என பொலிஸார் கண்டறிந்தனர்.
2013 ஆம் ஆண்டு மொறட்டுவை பல்கலையில் பட்டம் பெற்றிருந்த குறித்த சந்தேக நபர், பிரமிட் முறை மூலமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தினை திரட்டிக் கொள்ளவே இந்த கப்பம் கோரும் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரிடம் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு விசாரணையில் வாரியபொல பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரையும் பொலிஸார் கைது செய்தனர். அவர் முன்னணி ஆடை தொழிற்சாலையொன்றில் மேற்பார்வையாளராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் மேலும் நால்வருடன் இணைந்து இந்த கடத்தலை முன்னெடுத்துள்ளதுடன் அதற்காக கைப்பற்றப்பட்ட வெள்ளை நிற ப்ராடோவுக்கு மேலதிகமாக மற்றொரு வாகனமும் உளவு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படமையும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
அத்துடன் கடத்தப்பட்ட ஆஷிக், மஹோ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரந்தகல்ல எனும் ஊரின் பாழடைந்த வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் அந்த வீடாது கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவருக்கு சொந்தமானது எனவும் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த வீட்டை சுற்றிவளைத்து அதிரடி நடவடிக்கை ஒன்றினை ஆரம்பிக்க பொலிஸார் தயாரான போது, தமது உறுப்பினர்கள் இருவரின் கைதை அறிந்துகொண்டுள்ள கடத்தல்காரர்கள், கடத்தப்பட்ட இளைஞர் ஆஷிக்கை நிகவெரடிய நகரை தாண்டியிருக்கும் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் கொட்டும் மழைக்கு மத்தியில் கைவிட்டுவிட்டு உறவினர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி விடுவித்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்தே நேற்று அதிகாலை ஆஷிக் பொலிஸாரால் மீட்கப்பட்டார்.
ஆஷிக் பொலிஸாரால் மீட்கப்படும் போது மிகவம் சோர்வடைந்த நிலையிலேயே இருந்துள்ளார். இவர் உடனடியாக அவர் நிக்கவரட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படார்.
பின்னர் வாரியபொல பொலிஸ் நிலையத்துக்கு ஆஷிக் அழைத்து வரப்பட்டு அவரினால் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்டு மருத்துவ அறிக்கையும் பெறப்பட்டது.
கடத்தல் காரர்களால் ஆஷிக் தக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிஸார், தனது வாய்க்குள் கடத்தல் காரர்கள் கைகளை விட்டு கன்னங்களை இரு பக்கமும் இழுத்து வதை கொடுத்ததாக வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இக்கடத்தலுடன் ஆறு சந்தேக நபர்கள் தொடர்புபட்டுள்ள நிலையில் அவர்களில் இருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏனையோரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவர்களை கைது செய்ய சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளனர்.