வன்னிப் போரின் முக்கியமான சாட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் மருத்துவர் வரதராஜாவுக்கு அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்னிப்போரின் இறுதிக்கட்டத்தில் மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்குண்டிருந்த பொது மக்கள் பல்முனைத் தாக்குதல்களினால் காயமடைந்திருந்தனர்.
இவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதில் மருத்துவர் வரதராஜா உள்ளிட்ட ஓரிரு மருத்துவர்களே முன்னின்று செயற்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இறுதிப் போரின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த மருத்துவர் வரதராஜா, இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் விடுதலைப் புலிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் காயமடைந்த பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைக் கொன்றொழித்திருந்தாகவும் மருத்துவர் வரதராஜா அப்போது தெரிவித்திருந்தார்.
எனினும் இலங்கையில் இருந்து வெளியேறி அமெரிக்கா சென்றவுடன் அவர் தனது முன்னைய கூற்றை மறுத்து, இராணுவத்தினர் பொதுமக்கள் மீது விஷவாயுத் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார். தற்போது அவருக்கு அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் வன்னிப் போரின் போர்க்குற்றங்கள் தொடர்பில் தயாரிக்கும் அறிக்கையில் இவரது சாட்சியமும் உள்ளடக்கப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது.