சமாதானம் மற்றும் சௌபாக்கியத்திற்கான பாதையை திறந்து, புதிய அபிவிருத்தியை நோக்கி இலங்கையை இட்டுச்செல்வதே தமது அரசாங்கத்தின் இலக்கு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
G7 மாநாட்டில் பங்கேற்ற அரச தலைவர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
G7 எனப்படும் பிரதான 7 கைத்தொழில் நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் முன்னோடி மாநாடு ஜப்பானின் இஷே – ஷிமா நகரில் இன்று முற்பகல் ஆரம்பமானது.
இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு விடுக்கப்பட்ட முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பு இதுவென்பது சிறப்பம்சமாகும்.
ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவினால் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கையின் எதிர்காலப் பயணத்திற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக அரச தலைவர்கள் இதன்போது ஜனாதிபதியிடம் வாக்குறுதி வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பி்ட்டது.
G7 மாநாட்டின் முன்னோடி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
இந்த மாநாட்டில் ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சட்ட ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
நாட்டின் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையிலான அபிவிருத்தித் திட்டமொன்றையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டினார்.