தற்போதைய அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தரவு தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், தனியான பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

ஜப்பான் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், தென்கொரியா சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நாடு திரும்பியதும், இந்தப் பேச்சு நடத்தப்படவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் முகமட் பங்கேற்கும் நிகழ்வுகளில் முப்படையினரையும் பங்கேற்கக் கூடாது என்றும், முப்படையினரின் முகாம்களுக்குள் அவரை அனுமதிக்கக் கூடாது என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர், முதல் தடவையாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்புச் செயலரால் வழங்கப்பட்ட இந்த உத்தரவு, பகிரங்கப்பட்டதும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும், அமைச்சர்களும், தொலைபேசி மூலம் இந்த உத்தரவு அதிகாரபூர்வமானதா என்று சிறிலங்கா பிரதமரிடம் விசாரித்துள்ளனர்.

இந்த உத்தரவை அடுத்து பொறுப்புக்கூறல் விவகாரங்களில் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று இராஜதந்திரிகள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பவுள்ளதாக,அமைச்சர் ஒருவர் தெரிவிததுள்ளார்.

அதேவேளை ஜப்பான் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்த விவகாரம் தொடர்பாக தொலைபேசி மூலம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

அதற்குப் பின்னரே, ஆயுதப்படைத் தளபதிகள் தற்போதைய நிலை தொடர்பாக எந்த அரசியல் கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

தென்கொரியா சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நாளையும், ஜப்பான் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்றும் நாடு திரும்பிய பின்னர், இந்த விவகாரம் குறித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

அதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவின் கோரிக்கைக்கு அமையவே, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, கிழக்கு முதல்வருக்குத் தடைவிதிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version