துறைமுக மோதல்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அப்போது இயங்கிக்கொண்டிருந்தது.

சீமெந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காங்கேசன்துறை துறைமுகத்துக்குச் செல்லும் லொறிகள் காங்கேசன்துறை கீரிமலை வீதியில் கியூ வரிசையில் காத்திருக்கவேண்டும்.

ஒவ்வொரு லொறியாக இராணுவத்தினர் உள்ளே அனுமதிப்பார்கள். உள்ளே சென்ற லொறி பொதிகளை இறக்கிவிட்டு திரும்பிவரும்வரை அடுத்தலொறி உள்ளே செல்லக் காத்திருக்கவேண்டும்.

பாதுகாப்புக்கருதியே அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதிலும் ஒரு ஓட்டையைக் கண்டுபிடித்து தமது தாக்குதலுக்கு திட்டம் வகுத்தனர் புலிகள்.

ஏப்ரல் 22ம் திகதி 1987.

Kankesanthurai-cement-factory
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை

காங்கேசன்துறை துறைதுகத்தில் வழக்கம்போல லொறிகள் கியூ வரிசையில் காத்திருந்தன. அவ்வாறு நின்ற லொறி ஒன்றுக்குள் சீமெந்து மூட்டைகளுக்குள் புலிகள் இயக்கத்தினர் பதுங்கி இருந்தனர்.

குறிப்பிட்ட லொறி உள்ளே செல்ல வேண்டிய முறை வந்தது.

லொறிக்குள் குண்டு இருக்கலாம் என்று கருதித்தான் சோதனை நடைபெறும்.  லொறிக்குள் தாக்குதல் பிரிவொன்றே பதுங்கியிருக்கும் என்று இராணுவத்தினர் நினைத்திருக்கவில்லை.

லொறியை உள்ளே விடும் முன்னர் பரிசோதனைக்காக நிறுத்தினார்கள்.

லொறி நிறுத்தப்பட்டதும் லொறிக்குள் இருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் கீழே குதித்து இராணுவத்தினரை நோக்கிச் சுடத் தொடங்கினார்கள்.

எதிர்பாராத திடீர் தாக்குதல். வாயிலில் நின்ற இராணுத்தினர் சூடுபட்டு வீழ்ந்தனர். புலிகளின் அணி உள்ளே ஊடுருவிச் சென்றன.

உள்ளேயிருந்த இராணுவத்தினரும் உஷாராகி பதில் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர்.

காபர் வியூ ஹோட்டலில் இராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர்.

காபர் வியூ முகாம் நோக்கி  புலிகள் முன்னேற முடியாதளவுக்கு இராணுவத்தினர் சரமாரியாக சுட்டுக்கொண்டிருந்தனர்.

இராணுவத்தினர் உஷராகிவிட்டதால் தொடர்ந்து மோதலில் ஈடுபடாமல் புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டு திரும்பினார்கள்.

புலிகள் நடத்திய தாக்குதலில் 18 இராணுவத்தினர் பலியானார்கள். யாழப்பாண மாவட்ட புலிகளின் தளபதி ராதா தலைமையில் தாக்குதல் நடைபெற்றது.


ஊழியர்கள் மீது கோபம்

புலிகள் திரும்பிச் சென்றதும் ஆத்திரம் கொண்ட இராணுவத்தினர் சீமெந்து தொழிற்சாலையில் பாதுகாப்புக் உத்தியோகத்தர்களாக கடமையாற்றிய தமிழர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சார்ஜன்ட் மயில்வாகனம். அவருக்கு 55 வயது.

சீமெந்து கூட்டுத்தாபனத்தில் வேலை செய்த தமிழர்களை  இராணுவத்தினர்  தேடிப்பிடித்து சுட்டுத்தள்ளிக்கொண்டிருந்த போது:

துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பலில் பொதிகள் ஏற்றிக்கொண்டிருந்தனர் 70 தொழிலாளர்கள். அதில் பெரும்பாலானோர் தமிழர்கள்.

தம்மைத்தேடியும் இராணுவத்தினர் வந்து கொண்டிருக்கிறார்கள். தப்பவே முடியாது என்று நடுங்கத் தொடங்கி விட்டனர் தொழிலாளர்கள்.

கப்பல் கப்டனுக்கு நிலமை ஆபத்தானது என்று விளங்கிவிட்டது.

தொழிலாளர்கள் பாவம். ஏதுமறியாதவர்கள். ஆத்திரம் கொண்ட இராணுவத்தினர் அவர்களையும் விட்டுவைக்கப் போவதில்லை என்று விளங்கிவிட்டது.

70 தொழிலாளர்களையும் கப்பலில் ஏறுமாறு கட்டளையிட்டார் கப்டன்.

தொழிலாளர்கள் ஏறியதும்  கப்பல்துறைமுகத்தை விட்டும் புறப்பட்டுச் சென்று விட்டது. அதன் பின்னர்தான் துறைமுகத்துக்குள் இராணுவத்தினர் வந்து தேடிச் சென்றனர்.

இராணுவத்தினரின் ஆத்திரம் எல்லாம் தீர்ந்து, பதட்டம் நீங்கிய பின்னர் கப்பலை மீண்டும் துறைமுகத்துக்கு கொண்டுவந்து தொழிலாளர்களை இறக்கிவிட்டார் கப்டன்.

அந்தக் கப்பல் கப்டன் மட்டும் இல்லையென்றால் தொழிலாளர்கள் பலர் உயிர்பிழைத்திருக்கவே முடியாது.

கண்ணீரோடு அந்த கப்டனுக்கு நன்றி சொன்னார்கள் தொழிலாளர்கள். அந்த கப்பல் கப்டன் ஒரு சிங்களவர்.

பயங்கரவாதிகள்

சீமெந்து நிறுவன பாதுகாப்பு ஊழியர்களின் குண்டுகள் துளைத்த சடலங்கள் ரூபவாகினித் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டன.

அந்தச் சடலங்களைப் பற்றி பின்வருமாறு சொன்னது செய்தி, “பயங்கரவாதிகளை எதிர்த்து இராணுவத்தினர் நடத்திய துணிகர தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் சடலங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.”

இராணுவத்தினர் தமது கோபத்தை சீமெந்து நிறுவன ஊழியர்களோடு மட்டும் மட்டும் நிறுத்திக்கொள்ளளவில்லை.

காங்கேசன்துறைப்பகுதியில் குண்டுவீச்சுக்கள் குடியிருப்புக்களை நோக்கி நடத்தப்பட்டன.

ஷெல் மழை குடியிருப்புக்களை நோக்கி சரமாரியாகப் பொழிந்தது.

மயிலிட்டி, மாவிட்டபுரம்  போன்ற  ஊர்களில் இருந்து ஷெல் வீச்சுக்கள் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்தனர்.

ஏப்ரல் 22ம் திகதியே சீமெந்து தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டது.

ஏப்ரல் 25ம் திகதி யாழ்ப்பாணம் மருத்துவ மனையில் தனது கடமையை முடித்துவிட்டு வீடு திரும்பினார் டாக்டர் விஸ்வரஞ்சன். ஆனால் அவர் வீடு போய் சேரவில்லை.

அவரது வீடு காங்கேசன்துறையில்தான் இருந்தது. அவரை மறித்த இராணுவத்தினர் தீர விசாரித்துவிட்டு அவர் ஒரு டாக்டர் என்று உறுதி செய்த பின்னர் சுட்டுக்கொன்று விட்டனர்.

கண்காட்சி

இதற்கு முன்னர் மார்ச் 87 ல் நடைபெற்ற் ஒரு சம்பவம்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினரில் ஒருவர் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி காலை இழந்துவிட்டார்.

இது நடந்தது மார்ச் மாதம் 25ம் திகதி.

பாதணியுடன் ஒட்டியிருந்த துண்டிக்கப்பட்ட காலை புலிகள் எடுத்து வந்துவிட்டனர்.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலிலும் அந்தக் காலை காட்சிப்பொருளாக வைத்திருந்தனர்.

கோவில் முன்பாக அவ்வாறு வைத்திருந்ததை மக்கள் விரும்பவில்லை. எனினும் புலிகளிடம் நேரில் சொல்லப் பயந்து பேசாமல் இருந்துவிட்டனர்.

தெல்லிப்பளையிலும் அந்தக் காலை வைத்து கண்காட்சி நடத்தினார்கள் புலிகள்.

அப்போது கிட்டுதான் யாழ் மாவட்ட தளபதியாக இருந்தார்.

எப்படியோ தகவல் அறிந்த இராணுவத்தினர் மாவிட்டபுரம் கோயில் நோக்கியும் ஷெல்கள் ஏவினார்கள். வேணுகோபால் எனும் பொதுமகன் ஒருவர் ஷெல் வீச்சால் பலியானார்.

மார்ச் 31 இல்தான் கிட்டு கிரனேட் தாக்குதலால் தனது ஒரு காலை இழந்தார். இது தொடர்பாக முன்னரே விபரித்திருந்தேன்.

வான் தாக்குதல்

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற பகுதிகளிலுள்ள புலிகளின் முகாம்கள் குறித்த தகவல்களை இராணுவத்தினர் திரட்டினார்கள்.

இராணுவத்தினருக்கு தகவல் கொடுக்கவும் ஆட்கள் இருந்தார்கள். புலிகளின் முகாம் எங்கே இருக்கிறது என்பதை துல்லியமாக படம் வரைந்தே கொடுத்துவிடுவார்கள்.

கொழும்புக்கு வேறு வேலைகளுக்குச் செல்வது போலச் சென்று, உளவுப்பிரிவுக்கு தகவல் கொடுப்பதுதான் அவர்களது வேலை.

கணிசமான பணம் கிடைப்பதால் அவர்கள் தகவல்களை திரட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

என்னதான் துல்லியமாக தகவல் கிடைத்தாலும்கூட விமானத்தாக்குதல்களின் போது புலிகளின் முகாமை குடியிருப்புக்கள் மத்தியில் அடையாளம் காண்பது கடினம்.

வானிலிருந்து தம்மிடமுள்ள வரைபடத்தைப் பார்த்து குண்டைப்போட்டுவிட்டு விமானப்படையினர் திரும்பிவிடுவார்கள்.
இலக்கு வீசப்பட்டுவிட்டது என்றும் அறிவித்துவிடுவார்கள்.

தரையில் நிலவரம் வேறுவிதமாக இருக்கும். புலிகளின் முகாம் அப்படியே இருக்கும். அதன் அருகில் உள்ள வீடுகள் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டிருக்கும்.

வானொலியும், தொலைக்காட்சியும் பின்வருமாறு செய்தி தெரிவிக்கும். “இன்று பயங்கரவாதிகளின் முகாம் ஒன்று குண்டுவீச்சால் தகர்க்கப்பட்டது. பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.”

இவ்வாறான நடவடிக்கைகளால் வீடுகளில் இருப்பதைவிட புலிகளின் முகாமுக்குள் சென்று இருப்பதுதான் பாதுகாப்பு என்று கேலி கலந்த விமர்சனங்களும் யாழில் பரவலாகியிருந்தன.

புலிகளும் சரி, ஏனைய இயக்கங்களும் சரி தமது முகாம்களையும், அலுவலகங்களையும் குடியிருப்புக்கள் உள்ள பகுதிகளுக்குள்தான் வைத்திருந்தனர்.

வல்லையில் தாக்குதல்

பருத்திதுறையில் சனநடமாட்டம் அதிகமாகவுள்ள சந்தைப்பகுதியில்தான் புலிகளின் முகாம் ஒன்று இருந்தது. அந்த முகாம் தொடர்பான தகவல் அறிந்த விமானப்படையினர் நான்கு தடவைகள் தாக்குதல் நடத்திப்பார்த்தார்கள்.

நான்கு தடவைகளும் குறி தப்பியது.

வல்வெட்டித்துறையில் புலிகளின் முகாம் ஒன்றின்மீது நடைபெற்ற தாக்குதலில் புலிகள் தரப்பில் ஐந்துபேர் பலியானார்கள். தாக்குதலை முறியடித்து தமது முகாமை புலிகள் பாதுகாத்தனர்.

கடும் ஷெல்வீச்சு காரணமாக ஐந்து பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த ஐந்துபேரும் ஆம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்தனர்.

வல்லை வெளியூடாக அம்புலன்ஸ் செல்லும்போது ஹெலிகொப்டரிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆம்புலன்சில் இருந்த ஐந்துபேரும் கொல்லப்பட்டனர். ஆம்புலன்ஸ் சாரதியும் பலியானார்.

1987 ஏப்ரல்-மே மாதங்களில் யாழ்ப்பாணம் குண்டுவீச்சுக்களாலும், ஷெல் வீச்சுக்களாலும் அதிர்ந்து கொண்டிருந்தது.

கடும் நடவடிக்கை ஒன்று அவசியம் என்று கருதிய ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும், தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியும் படையினருக்கு சர்வ சுதந்திரம் வழங்கியிருந்தனர்.

1987 மே மாதம் முதலாம் திகதி மேதினத்தைப் பெரியளவில் நடத்துவதற்கு திட்டமிட்டனர் புலிகள் இயக்கத்தினர்.

அதுவரை புலிகள் இயக்கத்தினர் மேதினக் கூட்டங்கள் எதனையும் நடத்தவில்லை.

மாபெரும் ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விமானக் குண்டுவீச்சுக்கள் மத்தியில் ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடத்துவது சாத்தியம்தானா என்று சந்தேகிக்கப்பட்டது.

(தொடர்ந்து வரும்)
-எழுதுவது அற்புதன்-

கொழும்பில் புலிகளின் மறைவிடங்கள்

கொழும்பில் தமது நடவடிக்கைகளை புலிகள் சிலகாலம் தள்ளிப்போட்டிருந்தனர்.

மின்சார சபை வேலை நிறுத்தத்தின்போது புலிகள் கொழும்பில் ஏதாவது செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்படி எதுவும் நடக்கவில்லை. அரச தரப்புக்கும், பாதுகாப்புத் தரப்புக்கும் அதனால் ஆச்சர்யம்தான்.

அந்த ஆச்சர்யம் காரணமாகத்தான் வேலை நிறுத்தக்காரருக்கும், புலிகளுக்கும் இரகசிய உடன்பாடு என்று ஒரு பிரசாரமும் தெற்கில் பரவியிருந்தது.

யானையும், புலியும் சேர்ந்து செய்த சதி. யானையின் முதுகுக்குப் பின்னால் புலி நிற்கிறது என்றெல்லாம் சுவரொட்டிகள் தோன்றியிருந்தன.

மறுபுறம், கொழும்பில் புலிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இருக்கிறதோ என்று பாதுகாப்புத்தரப்பு நினைத்திருக்கலாம்.

கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளால் புலிகள் தமது நகர்வுகளை மேற்கொள்ளமுடியவில்லை என்று தப்புக் கணக்கும் போட்டிருக்கலாம். ஆனால் புலிகளின் திட்டம் வேறாக இருந்தது. கொழும்பு மத்திய வங்கி கட்டிடத்தாக்குதல் மிகப் பாரியதாக இருந்தது.

எனவே- அடுத்த தாக்குதலும் மிகப் பாரியதாக இருக்க வேண்டும் என்று புலிகள் திட்டமிட்டனர்.

அதுதவிர, தாக்குதல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் தருணங்களில் தாக்குவது புத்திசாலித்தனமல்ல என்பதும் புலிகள் தமது நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாமல் இருந்ததுக்கு ஒரு காரணம்.

தாக்குதல் ஒன்றில் புலிகள் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்த்து, தாக்குதல் எதுவும் நடக்கவில்லையென்றதும் இயல்பாகவே பாதுகாப்புத் தரப்பிடம் ஒரு அலட்சியம் தோன்றும்.

பெரும் தாக்குதலை எதிர்பார்க்கும் உஷார் நிலை மெல்ல மெல்ல தளர்ந்து, கொழும்பில் புலிகளே இல்லையோ என்று நினைக்கக்கூடிய ஒரு கட்டத்தில், பாரிய இலக்கொன்றை தாக்குவதுதான் புலிகளின் திட்டமாக இருந்தது.

அதனால்தான் சூழலைக் குழப்பாமல் இலக்குகள் தொடர்பான தகவல்களை மட்டும் திரட்டுவதோடு புலிகளின் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

அவ்வாறு தகவல்களை திரட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த ஒரு புலி உறுப்பினர்தான் ஓட்டோவில் செல்லும்போது சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.

நெல்சன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்த உறுப்பினர் நீண்டகாலமாக கொழும்பில் தங்கியிருந்து உளவு வேளைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

தெகிவளைப் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த போது, பொலிஸ் நிலையத்திற்கு நேரில் செல்லாமலேயே தனது பெயரை பதிவு செய்து கொண்டிக்கிறார். ஒரு நண்பர் மூலமாகவே கொடுக்க வேண்டியதைக் கொடுத்து காரியம் சாதித்திருக்கிறார்.

எப்போதும் செல்டல் போன் ஒன்று வைத்திருப்பார். பிஸியான தொழிலில் ஈடுபடுபவர் போலவே நடந்துகொள்வார் நெல்சன்.

தெகிவளையிலும், வெள்ளவத்தையிலும் மாறிமாறித் தங்கியிருந்தார். ஆரம்பத்தில் விழிப்பாகத்தான் செயற்பட்டார்.

கொடுக்கவேண்டியதைக் கொடுத்தால் கொழும்பில் காரியம் சாதிக்கலாம் என்று தெரிந்தபின்னர்தான் விழிப்புத் தளரத் தொடங்கியது.

வழக்கமாக தம்மை தனியாக அடையாளப்படுத்தக்கூடிய வகையில் உளவுப்பிரிவினர் நடமாடுவதில்லை. ஓட்டோக்கள் போன்றவற்றில் பயணம் செய்வதையும் தவிர்த்துவிடுவார்கள்.

நெல்சனுக்கு ஒரு நம்பிக்கை. செக் பொயின்ரில் மறிக்கப்பட்டால் பணம் கொடுத்துவிட்டு சென்றுகொண்டே இருக்கலாம். அந்தக் கணிப்புத்தான் அவரை மாட்டவைத்துவிட்டது.

ஓட்டோ தடுக்கப்பட்டு, இறக்கி சாதாரணமாக விசாரித்தபோதே வழக்கம்போல நோட்டுக்களை எடுத்து நீட்டியிருக்கிறார். விசாரித்தவர் புத்திசாலி. நோட்டை நீட்டுவதால் அவரது நோக்கம் என்ன என்று யோசித்து, மடக்கிப் பிடித்துவிட்டார்.

பின்னர் பொலிஸ் நிலையத்தில் விசாரணையில் தனக்கு தெரிந்த அனைத்தையும் நெல்சன் சொல்லி முடித்துவிட்டார்.

உளவுப்பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சயனைட் கொண்டு திரிவதில்லை. சாதாரண நபராக நடமாடி, தடயம் எதுவும் இல்லாமல் சிக்கினால் மீண்டுவந்துவிடலாம் என்பதால் சயனைட் எதுவும் கொண்டு திரிவதில்லை.

நெல்சன் ஒரு கரும்புலி என்கிறது பொலிஸ்தரப்பு.

ஆனால் கரும்புலிகளுக்கு உளவு பார்க்கும் வேலை கிடையாது. குறித்த இலக்கு தீர்மானிக்கப்பட்டு, திட்டம் தயாரானதும் இலக்கு எதுவென்று காட்டப்படும்.

அதுவரை வேறு பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். காட்டப்படும் இலக்கை தாக்குவதோடு அவர்களது வேலை முடிந்துவிடும்.

கரும்புலியைவிட உளவுப்பிரிவு புலி ஒருவருக்கு அதிக தகவல் தெரியும். எந்தெந்த இலக்குகள் தாக்கப்பட தகவல்கள் திரட்டப்படுகின்றன என்று தெரியும்.

ஒரு கரும்புலி மாட்டிக்கொண்டால் குறிப்பிட்ட தாக்குதலை மட்டும் தடுக்கலாம். ஒரு உளவுப்பிரிவுப் புலி கைது செய்யப்பட்டால் பல தாக்குதல்கள் தொடர்பான திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.

அது தவிர கொழும்பில் புலிகளுக்குள்ள மறைவிடங்கள், தொடர்புகள் பற்றியும் விபரங்கள் கிடைத்துவிடும்.

நெல்சனிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் அவர் ஒரு உளவுப்பிரிவு ஆள் என்பதையே உறுதி செய்கின்றன. அந்த வகையில் பொலிசாருக்கு கிடைத்த ஒரு புதையல்தான் நெல்சன்.

புலிகளின் உளவுப்பிரிவைப் பொறுத்தவரை நெல்சனை கொழும்பு வேலைக்கு அனுப்பி வைத்தது ஒரு தவறான தெரிவுதான்.

கொழும்பில் கைது செய்யப்பட்ட வேறு புலி உறுப்பினர்கள் எவருமே கொடுக்காத தகவல்களை நெல்சன் மளமளவென்று ஒப்புவித்துவிட்டார்.

கொழும்பில் புலிகள் திட்டமிட்டிருந்த பாரிய தாக்குதல் ஒன்று அம்பலமாகியிருக்கிறது. ஆயினும் சகல தயாரிப்புக்களையும் ஒரு குறிப்பிட்ட வீட்டில் வைத்து மட்டுமே புலிகள் செய்திருக்கமுடியாது.

கொழும்பில் புலிகளுக்குள்ள் பல இரகசிய தளங்களில் ஒன்றுதான் வெள்ளவத்தையில் மாட்டியிருக்கிறது.

வேறு இரகசிய தளங்களும் கொழும்பில் இருக்கலாம். ஒன்று மாட்டுப்பட்டால் மாற்று ஏற்பாடாக வேறு மறைவிடங்களும் இல்லாமல் போகாது.

ஒரே கூடைக்குள் சகல முட்டைகளையும் போடுவது என்பது இரகசிய நடவடிக்கைகளின் விதியல்ல. அதனால் வேறுபல கூடைகளும் கொழும்பில் இருக்கின்றன என்று நம்பலாம்.

ஆனால் ஒன்று, வீதிச் சோதனைகள், வவுனியாவில் கடும் தடை போட்டு பயணிகளை அலசி எடுத்து உள்ளே வரவிடுதல் போன்ற நடவடிக்கைகளால் கொழும்பிற்குள் புலிகள் தமக்கு தேவையானதை கொண்டுவரும் செயற்பாட்டில் பெரிய தடங்கல் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழகத்திலிருந்து ஈரோஸ் இயக்கத்தினரால் கடத்திக் கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் நடுக்கடலில் வைத்து புலிகளினால் அபகரிப்பு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 84 )

Share.
Leave A Reply

Exit mobile version