தற்போது முன்னெடுக்கப் பட்டுவரும் அரசியல் சீர்திருத்தங்களின் அடிப்படையில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கு உட்பட்டதாகவே இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் எனவும், இதில் வடக்கு கிழக்கு இணைப்போ சமஷ்டியோ இடம்பெறப்போவதில்லை எனவும் தகவலறிந்த அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

அதனைவிட மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரமும் வழங்கப்படாது எனத் தெரிகின்றது.

இவ்வாறான ஒரு தீர்வுக்கு இந்திய அரசாங்கமும் முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் தெரியவந்திருக்கின்றது. அத்துடன், இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனும் இந்திய அரசின் உயர் மட்ட அதிகாரிகள் ஏற்கனவே பேச்சுக்களை நடத்தி அவர்களுடைய சம்மதத்தைப் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை – இந்திய உடன்படிக்கை மூலம் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தமே தீர்வுக்கான அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையாகவுள்ளது.

இருந்தபோதிலும், அந்த உடன்படிக்கையிலுள்ள வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்காலத்தில் இந்தியா வலியுறுத்தாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை வலியுறுத்துவது தென்னிலங்கையில் எதிர்ப்பை உருவாக்கும் என்பதால் இதனைக் கைவிட புதுடில்லி தயாராகவிருப்பதாகத் தெரிகின்றது.

அதேவேளையில், இணைப்புக் கோரிக்கையை தொடர்ந்தும் வலியுறுத்திக்கொண்டிருக்க வேண்டாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு புதுடில்லி தெளிவாகத் தெரிவித்துவிட்டது.

அதனை வலியுறுத்திக்கொண்டிருப்பது இலங்கை அரசாங்கத்துடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருக்கும் எனவும் கூட்டமைப்பின் தலைமைக்கு புதுடில்லி சுட்டிக்காட்டியிருக்கின்றது.

modi-sirisena
அதேவேளையில், மாகாண சபைகளுக்கான காணி அதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தும், அது தொடர்பில் இலங்கை அரச தரப்புடனான பேச்சுக்களின் போது, சம்மதம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவதில் விட்டுக்கொடுக்கும் நிலையில் கொழும்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அதனால், காணி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு, பொலிஸ் அதிகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுக்களை நடத்தலாம் என கூட்டமைப்பின் தலைமைக்கு இந்தியா எடுத்துக்கூறியிருக்கின்றது.

சம்பந்தன் இதற்கு இணக்கம் தெீவித்திருப்பதாகவும் கூட்டமைப்புத் தலைமைக்கு நெருக்கமான ஒரு தரப்பு தெரிவித்தது.

அதேபோல, சுயநிர்ணய உரிமை, சமஷ்டி போன்ற கோரிக்கைகளை முன்வைக்காமல், 13 க்கு உட்பட்ட தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு புதுடில்லி தெரியப்படுத்தியிருப்பதாகவும் இந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சம்மதத்தை புதுடில்லி ஏற்கனவே பெற்றிருப்பதாகத் தெரிகின்றது.

கும்பமேளாவுக்கு அண்மையில் அழைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனும் இது தொடர்பில் இந்தியத் தரப்பு உயர் மட்டப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.

இரு தரப்பினரதும் சம்மதத்தை புதுடில்லி இதற்காகப் பெற்றிருக்கின்றது.

இந்த நிகழ்வின்போது ஒரே மேடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தனும் அமர்ந்திருந்தார்கள்.

இதன்மூலம், இலங்கை ஜனாதிபதியுடனான நெருக்கத்தை மோடி வெளிப்படுத்தியிருந்ததாக இராஜதந்திரிகள் தெரிவித்தனர். அதேபோல சம்பந்தனின் முக்கியத்துவமும் இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டது.


இரு தரப்பையும் இணக்கம் ஒன்றுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர நகர்வாகவே கும்பமேளாவுக்காக அழைப்பு அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தாகவும் இந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.

இதனை இந்தியாவின் ‘கும்மமேளா இராஜதந்திரம்’ என இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அரசியல் சார்ந்த முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுப்பதற்காக இவ்வாறான கலாசார நிகழ்வுகளைப் பயன்படுத்தும் இராஜதந்திரத்தை புதுடில்லி பயன்படுத்திவருவது புதிதல்ல.

இந்த நகர்வுகளின் அடுத்த கட்டமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை விரைவில் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கான அழைப்பு இந்தியத் தரப்பால் ஏற்கனவே விடுக்கப்பட்டிருக்கின்றது. அதன்போது அரசியலமைப்பு மாற்றம், இனநெருக்கடிக்கான இறுதித்த தீர்வு என்பன தொடர்பில் மேலதிக கலந்தாலோசனைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்தியத் தரப்பு மூன்று தரப்பினருடனும் (மைத்திரி, ரணில், சம்பந்தன்) தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்திவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இணைப்பு, சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, பொலிஸ் அதிகாரம் என்பவற்றுக்கான கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிடும் பட்சத்தில், காணி அதிகாரத்துடன் அதிகளவு அதிகாரப்பரவலாக்கலை வழங்க தாம் தயாராகவிருப்பதாக டில்லிக்கு கொழும்பு தெரியப்படுத்தியதையடுத்தே கூட்டமைப்பின் தலைமையுடன் இந்தியா பேச்சுக்களை நடத்தியது.

இவற்றுக்கு சம்பந்தன் இணக்கம் தெரிவித்திருக்கும் நிலையிலேயே அடுத்த கட்ட நகர்வாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியத் தலைமை பேச்சுக்களை நடத்தி அவரது சம்மதத்தையும் பெற்றுக்கொள்ள முற்பட்டிருக்கின்றது.

இந்த இணக்கப்பாடு அரியலமைப்பு சீர்திருத்தங்களில் பிரதிபலக்கும். அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் இவ்வருட இறுதிக்குள் ‘இறுதித் தீர்வு’ (?) ஒன்றைக் கொண்டுவருவதில் புதுடில்லியும் மிகவும் அக்கறையாகச் செயற்படுவதாகத் தெரிகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version