அதாவது, ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில், இன்று (ஜூன் 29, 2016) மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார். அத்தோடு, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்.
கோயில் திருவிழாக்கள் வருடத்துக்கு ஒருமுறை மாத்திரமே நடைபெறுவது வழக்கம்.
ஆனால், ஜெனீவாத் திருவிழா வருடத்துக்கு இரண்டு, மூன்று முறை நடைபெறுகின்றது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது இந்த வருடத்தின் இரண்டாவது திருவிழா.
கோயில் திருவிழாக்களில் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் காவடிகளைச் சுமந்து செல்வது போல, ஜெனீவாத் திருவிழாவுக்கு நீதி கோரிக்கைகளோடு, தமிழ்த் தரப்புக்கள் காவடி தூக்க ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
நீதியைப் பெற்றுக் கொள்ளும் வரை, தாம் தூக்கிய காவடிகளை தமிழ்த் தரப்பு இறக்கி வைக்கக் கூடாது என்கிற உறுதிப்பாடு உரத்துச் செல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் உள்ளது.
ஆனால், அந்த உறுதிப்பாட்டின் அளவு இன்றைக்கு மெல்ல மெல்லக் கலைந்து காணாமற்போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு, வலுவான அக-புறக் காரணிகள் உண்டு.
குறிப்பாக, அபரிமிதமான அர்ப்பணிப்பையும் இராஜதந்திர சுழியோட்டங்களையும் செய்யக் கோரும் செயற்றிட்டமொன்றுக்கான வலுவையும் புலமையையும், தமிழ் இராஜதந்திர-புலமைத் தரப்பு வளர்த்துக் கொள்ளாமல், தம்முள் முட்டி மோதிக்கொண்டிருப்பதுவும் காரணமாகும். இப்படியான நிலையிலிருந்தே ஜெனீவாத் திருவிழா நிகழ்வுகளை தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.
இலங்கையில் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட கடந்த காலக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறுதல் மற்றும் நீதியை உறுதி செய்தல் தொடர்பில், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடரில், இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு அமெரிக்கா முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
குறித்த தீர்மானத்தினை அடியொற்றியதாகவும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் திட்டமிட்ட கால எல்லைக்குள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றனவா என்பது பற்றியுமே இன்றைய வாய்மூல அறிக்கையில் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது, இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறுதலுக்கான கடப்பாட்டிலிருந்து நழுவிச் செல்லும் போக்கினை பாரிய அழுத்தங்களினூடு கடிந்து கொள்ளும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பது, தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆனால், அந்த எதிர்பார்ப்புக்களின் அளவினை வாய்மூல அறிக்கையில், ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் பிரதிபலிக்கும் வாய்ப்புக்கள் இல்லை என்கிற விடயம் மேல் நோக்கி வருகின்றது.
மாறாக, கால நீடிப்பொன்றை இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் பெற்றுக் கொடுப்பதினூடு, பொறுப்புக் கூறுதலுக்கான கடப்பாட்டினை எந்தவித கட்டுப்பாடும், ஒழுங்குமின்றி அலைபாய வைத்து நீக்கம் செய்வதற்கான முனைப்புக்களின் போக்கில் அமையப் போகின்றது. அந்த அச்சமே இப்போதுள்ளது.
இலங்கை தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலியுறுத்தும் விடயங்களில் முக்கியமானது, பொறுப்புக் கூறுதலுக்கான கலப்பு பொறிமுறையொன்றை உறுதி செய்ய வேண்டும் என்பதாகும்.
அதாவது, வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் பங்களிப்பு பொறுப்புக் கூறுதலுக்கான கலப்பு பொறிமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது.
அப்படியான நிலையிலேயே அது, உள்ளக- சர்வதேச பங்களிப்போடு கலப்புப் பொறிமுறையொன்றாக உறுதி செய்யப்படும்.
ஆனால், இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு வந்து உள்ளக பொறிமுறையொன்றுக்கான விடயங்களில் மாத்திரமே கவனம் செலுத்தியது.
அத்தோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு மற்றும் வழக்கு தொடுநர்களின் பங்குபற்றுதலை முற்றாக மறுதலித்திருந்தனர்.
அத்தோடு, இலங்கை இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுக்களைக் களைந்து, அவர்களை சுதந்திரமாக்க வேண்டும் என்கிற விடயத்தினை முன்னிறுத்தியே விடயங்களை கையாண்டு வருகிறார்கள். மாறாக, மனப்பூர்வமான பொறுப்புக் கூறுதலோ, அதனூடான நீதியோ, நல்லிணக்கமோ இறுதி நோக்கம் என்று கொள்ள முடியாது.
குறிப்பாக, இலங்கை மீதான தீர்மானத்தினை கொண்டு வந்த அமெரிக்காவுக்கும் அமெரிக்காவின் பின்னால் செல்லும் நாடுகளுக்கும் தெரியும்.
ஆனால், அந்த வாக்குறுதிகளின் மீதான உறுதிப்பாட்டினை உறுதி செய்வதிலும் பார்க்க, இலங்கையின் புதிய அரசாங்கத்தினை தன்னுடைய கைகளுக்குள் வைத்துக் கொண்டிருப்பதிலும் காப்பாற்றுவதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதனூடு,
தங்களுடைய இலக்குகளை அடைய அந்த நாடுகள் நினைக்கின்றன. அண்மைய நாட்களில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகப் பாராட்டுவதில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்த போது அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கடிந்து கொள்ளும் மனநிலையோடு அணுகிக் கொண்டிருந்த சர்வதே நாடுகள், தற்போது இலங்கை போதிக்கும் நியாயங்களுக்கு, தம்முடைய பங்களிப்பை வழங்குவதில் அக்கறை கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு சர்வதேச அளவில் மைத்திரிபால சிறிசேன முக்கியமான தலைவர். அவர், அனைத்து வல்லரசுகளினதும் அபிமானத்துக்குரிய தலைவர்.
அதுபோல, இன்னொரு விடயம் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது. அதாவது, இலங்கை வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்தவர்களில் மறைந்த லக்ஷ்மன் கதிர்காமர் அளவுக்கு இராஜதந்திர வல்லமையோடும்-திமிரோடும் இருந்தவர்கள் யாரும் இல்லை.
அவருக்கு சர்வதேச ரீதியில் பாரிய முக்கியத்துவம் இருந்தது. அவரினை கையாள்வது என்பது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை.
ஆனால், அவரினாலேயே, இலங்கை சர்வதேச ரீதியில் பாரிய வெற்றிகளைப் பெற்றது. அவரின் காலத்துக்குப் பின்னர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஒருவர் அதிக முக்கியத்துவத்துடன், அன்போடு அணுகப்படும் தருணம் இது.
அதாவது, மங்கள சமரவீரவுக்கு உள்நாட்டில் எதிர்ப்புக்கள் இருந்தாலும், குறிப்பாக அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்பாளர்கள் அதிகமிருந்தாலும், சர்வதேச ரீதியில் அவர் பெற்றிருக்கும் அபிமானம் என்பது பாரியது.
மாறாக, வெளித்தெரியாத உள்நுழைவுகளினூடும் உரையாடல்களினூடும் விடயங்களை வெற்றி கொள்பவர். அவரின் பல விடயங்கள் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கே குழப்பமாக இருப்பதுண்டு.
அப்படிப்பட்ட நிலையில், அவரைக் கண்காணிப்பதற்கான குழுக்கள் நியமிக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் அரங்கேறியிருக்கின்றன. ஆனாலும், இலங்கை சர்வதேச ரீதியில் தொடர்ச்சியாகப் பெற்று வரும் வெற்றிகளில் அவரின் பங்களிப்பு பாரியளவிலானது.
அப்படிப்பட்ட நபரொருவரை சர்வதேச ரீதியில் இராஜதந்திரக் களத்தில் எதிர்கொள்வதற்கான நபர்களை தமிழ்த் தரப்பு வைத்துக் கொண்டிருக்கவில்லை என்பதுவும், வெளித்தெரியாமல் உள்நுழைந்து காரியங்களை கையாளும் வல்லமையை தமிழ்த் தரப்பு இழந்துவிட்டது என்பதுவும் உணர்ந்து கொள்ளப்படக் கூடியது.
குறிப்பாக, அதிகமாக வாய் வல்லமைகள் சார்ந்தும் அறிக்கை அரசியலூடாகவுமே தமிழ்த் தரப்பு காலத்தினை கடத்தி வந்திருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில், ஜெனீவாத் திருவிழாவிலோ, சர்வதேச சதிராட்டத்திலோ தமிழ்த் தரப்பு வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பது அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல. அது, பொய்மைகளின் மீதான நம்பிக்கைகள் போன்றது.
இந்த இடத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை எப்படிப்பட்டது என்கிற விடயமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது.
தமிழ்த் தேசிய அரசியலின் நீள் ஓய்வுக் காலத்தில் தேர்தல் அரசியல் மாத்திரமே ஆர்ப்பரிப்புக்களை காட்டி வந்திருக்கிறது.
அந்த ஆர்ப்பரிப்புக்களின் வெற்றியாளர்கள் என்கிற கிரீடத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக பெற்று வந்திருக்கின்றது.
அப்படிப்பட்ட நிலையில், அவர்களின் வகிபாகமும், பங்களிப்பும் வெற்றிகரமானதாக இல்லை. மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்கட்சி, தனிநகர் அதிகாரப் பிரச்சினைகளின் போக்கில் அல்லாடிக் கொண்டிருப்பதற்கே அதிக காலத்தினை செலவிடுகின்றது.
மக்களின் எதிர்பார்ப்புக்கள் சார்ந்து நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான முனைப்புக்களில் சர்வதேச ரீதியில் இராஜதந்திர வெற்றிகளை அவ்வளவாக பதிவு செய்யவில்லை.
நிலைமாற்று நீதிப் பொறிமுறைகளை உறுதி செய்ய மறுதலிக்கும் இலங்கை அரசாங்கத்தினை எதிர்கொள்ளும் திறனிலும் பாரிய இடர்பாடுகளை எதிர்க்கட்சியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து நிற்கிறது.
எந்தவொரு பக்கத்தினாலும் வெற்றிகரமான காட்சிகளைக் காட்டாத அல்லது முனைப்புக் பெறாத தமிழ்த் தரப்பின் ஜெனீவாத் திருவிழாவுக்கான காவடிகள் இடைநடுவில் இறக்கி வைக்கப்படலாம்.
அது, அநீதிகளுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளும் முனைப்பில் நாம் தோற்றுப்போனோம் என்கிற குற்றவுணர்ச்சியை எம்மீது விதைத்துவிட்டுச் செல்லலாம்.
-புருஜோத்தமன் தங்கமயில்-