1996 செப்டம்பர் 7ம் திகதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக்கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றால் மூடிய கண்களும், கூப்பிய கரங்களுமாக நின்ற அவள் அன்று இறைவழிபாட்டில் ஈடுபடுவதற்கு விசேட காரணங்கள் இருந்தன.

அந்த மாணவி அந்த வாரம் உயர்தரப்பரீட்சை எழுதுகின்றாள், இன்னும் சில மணிநேரங்களில் அவள் இரசாயன பாடபரீட்சையை எழுதவிருந்தால்.

அந்த மாணவியின் பெயர் கிருசாந்தி குமாரஸ்சுவாமி,யாழ்ப்பாணத்தின் பிரபல மகளிர் பாடசாலையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி –அன்று காலை தாயார் அவசரஅவசரமாக உணவு தயாரித்துக்கொடுத்தார்,

பாடசாலைக்கு செல்லும் அவசரத்தில் அவள் முழுமையாக அதனை உண்ணவில்லை. அதன் பின்னர் சிறிது நேரம் படித்துவிட்டு, காலை 7.15 மணிக்கு அவள் தனது சிவப்பு சைக்கிளில் பாடசாலைக்கு புறப்பட்டாள், தாயார் கிருசாந்தியை வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்.மகளின் சைக்கிள் மறையும் வரை தாயார் பார்த்துக்கொண்டிருந்தார்.

கிருசாந்தியின் தாயாரின் பெயர்,ராசம்மா குமாரஸ்சுவாமி- 59 வயது-இந்திய பல்கலைக்கழக பட்டதாரி,அவர்கள் வசிக்கும் கைதடியில் உள்ள பாடசாலையொன்றில் அவர் துணைஅதிபராக பணிபுரிந்தார்,மூத்த மகள் பிரசாந்தி கொழும்பில் கல்விகற்றுக்கொண்டிருந்தார்,மகன் பிரணவன் சாதாரண தரப்பரீட்சை முடிவுகளிற்காக காத்திருந்தார்.

ராசாம்மா 1984 இல் தனது கணவரை இழந்தவர், அவரது வாழ்க்கை என்பது பிள்ளைகளை மையப்படுத்தியதாக காணப்பட்டது.

மகள் பாடசாலை சென்ற பின்னர் ராசம்மா, கோவிலிற்கு சென்றார்,சனிக்கிழமை என்பதால் சக ஆசிரியையின் வீட்டிற்கு சென்று சிறிதுநேரம் உரையாடினார்.

அதன் பின்னர் அவர் வீட்டிற்கு சென்றார், சனிக்கிழமை விரதம் என்பதால் மதியம் பிள்ளைகளுடன் உணவு உண்பதற்காக அவர் காத்திருந்தார்.

தனது மகளின் பரீட்சை 9.30 க்கு ஆரம்பித்து 11.30 மணிக்கு முடியும் என்பது அவரிற்கு தெரிந்திருந்தது, மகள் எப்படியும் 12.30 மணிக்கு வீடு திரும்புவார் என அவர் உணவு தயாரித்து வைத்துவிட்டு காத்திருந்தார்.

எனினும் மகள் எதிர்பார்த்த நேரத்திற்கு வீடு திரும்பாததால் அவர் பதட்டமடையத்தொடங்கினார். அவர் தனது சகோதரி சிவபாக்கியத்திடம் விடயத்தை தெரிவிக்க, அவரும் கவலையடையதொடங்கினார்.

இருவரும் வீட்டு வாசலில் வந்துபார்த்துக்கொண்டுநின்றனர்.அவர்கள் மனதில் பல கவலைகள் சூழ்ந்துகொண்டன.

அந்தவேளையே அவர்களின் குடும்பநண்பரான கிருபாமூர்த்தி அவசரஅவசரமாக வந்து அவர்கள் கேள்விப்பட விரும்பதா அந்த செய்தியை தெரிவித்தார்.

கிருசாந்தி செம்மணி காவலரணில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதே அந்த செய்தி,நிலைமையின் விபரீதத்தை உணர்ந்ததும்,நேரத்தை வீணடிக்காமல் ராசம்மாதனது மகளை தேடிச்செல்ல தீர்மானித்தார்.

கிருபாமூர்த்தியும் அதனை ஏற்றுக்கொண்டார்,மகன் பிரணவனும் அவர்களை பின்தொடர்ந்தான்,அவர்கள் மயான பகுதியில் உள்ள அந்த காலரணிற்கு சென்றனர்.

ஆனால் அதன் பின்னர் கிருசாந்தியோ அல்லது அவர்களே வீடுதிரும்பவில்லை.

மறுநாள் காலை கிருசாந்தி குடு;ம்பத்தின் இரு உறவினர்கள்,யாழ்ப்பாண தலைமை தபாலதிபராக காணப்பட்ட கோடிஸ்வரனை நாடினர், நிலைமையை புரிந்துகொணட அவர் அருகிலுள்ள இராணுவமுகாமிற்கு செல்லவேண்டும் என தீர்மானித்தார்.

கோடீஸ்வரனும் வேறு இருவரும் புங்கங்குளம் இராணுவமுகாமிற்கு சென்றனர்,கிருசாந்தியும் குடும்பத்தினரும் காணமற்போயுள்ளதை அறிவித்தனர்,கிருசாந்தி தடுத்துவைக்கப்பட்டு 24 மணிநேரத்திற்கு ள் இது இடம்பெற்றது.

கிருசாந்திக்கும் அவரது குடும்பத்தினரிற்கும் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கு கோடீஸ்வரனும், ஏனையவர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்,

முகாம்கள், முகாம்களாக அலைந்தனர், ஆனால் படையினரோ தங்களிற்கு தெரியாது என கைவிரித்துவிட்டனர்,தபாலதிபரின் உறவினர் ஓருவர் கிருசாந்தியின் சகோதரனின் பாகமொன்றை செம்மணி இராணுவசோதனைச்சாவடிக்கு அருகிலுள்ள கடையொன்றில் கண்டிருந்தார்,இது குறித்தும் அவர்கள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இவர்கள் காணமற்போனவேளை யாழ்ப்பாணம் இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது.யாழ்குடாநாடு முழுவதும் மிகநெருக்கமான சோதனைச்சாவடிகளையும்,காவலரண்களையும் கொண்டிருந்தது.

ஓரு மாதத்திற்கு மேல் படையினர் இந்த விடயத்தை இரகசியமாக வைத்திருந்தனர் என்பது மர்மமாக காணப்பட்டது.

இலங்கையின் தேசிய பத்திரிகைகள் இந்த சம்பவம் குறித்து மூச்சு விடவில்லை,தேசிய ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்களை பொறுத்தவரை படையினரிற்கு எதிராக எழுதுவது என்பது தேசப்பற்றற்ற செயல் என்ற நிலைப்பாடு காணப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில் ,கொழும்பை சேர்ந்த மனித உரிமை சட்டத்தரணி பூபாலன் இந்த சம்பவம் குறித்து தேசிய அளவில் கவனத்தைஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அவ்வேளை நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய ஜோசப்பரராஜசிங்கம் மூலம் பாராளுமன்றத்தின் கவனத்தை இந்த சம்பவம் தொடர்பில் ஈர்த்தார்.பூபாலன் ஜனாதிபதி சந்திரிகாவிடம் இது குறித்து தெரிவித்தார்,இது குறித்து அறிந்ததும் சந்திரிகா அதிர்ச்சியடைந்தார்,உடனடியாக அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவை தொடர்ந்து மேலதிக விசாரணைகளிற்காக லெப் கேர்ணல்குணரட்ண தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றது.கிருசாந்தி காணமற்போன தினத்தன்று செம்மணி காவலரணில் பணியாற்றியவர்கள் வேறு இடங்களிற்கு மாற்றப்பட்டடிருந்தனர் , எனினும் அவர்கள் அனைவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.

அவர்கள் தாங்கள் கிருசாந்தியை பாலியல்வன்முறைக்கு உட்படுத்தியதை ஏற்றுக்கொண்டனர்,கிருசாந்தியையும் ஏனையவர்களையும் கொலைசெய்ததையும் ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கிருசாந்தி காணமற்போய் 45 நாட்களிற்கு பின்னர் உள்ளுர் நீதவான் ஓருவர் முன்னிலையில் செம்மணி புதைகுழியிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டன,கிருசாந்தி தடுத்துவைக்கப்பட்ட காவலரணிலிருந்து சிறிய தூரத்திலேயே இந்த உடல்கள் காணப்பட்டன,

இதனை தொடர்ந்து அவ்வேளை அங்கு பணியாற்றிய அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.
திரட்டப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகவைத்து சட்டமா அதிபர் மூவர் அடங்கிய உயர்நீதிமன்றநீதிபதிகள் முன்னிலையில் இவர்களிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் நிமால் திசநாயக்க,அன்றூசோமவன்ச,காமினி அபயரட்ண ஆகியவர்கள் அடங்கிய டிரையல் அட்பார் விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் ஆதாரங்கள் வெளியாவதை தடுப்பதற்காக அவர்கள் ஏனைய மூவரையும் கொலைசெய்ததும் தெரியவந்தது,இலங்கை படையினர் தங்கள் குற்றங்களை மறைப்பதற்காக இந்த தந்திரோபாயத்தை பின்பற்றி வந்துள்ளனர்.

ஏழு மாதங்கள் நீடித்த குழப்பம் மிகுந்த விசாரணைகளின் பின்னர் நீதிபதிகள் ஐந்து படையினர் மற்றும் ஓரு பொலிஸ் உத்தியோகத்தர் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடித்தனர்.

அவ்வேளை சில அரசியல்வாதிகள் இது அரசாங்கத்தின் மனித உரிமை கொள்கைக்கு கிடைத்த வெற்றி என கருத்து தெரிவித்திருந்தனர், எனினும் ஜனாதிபதி பதவிவகித்த சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் தலையிட்டிருக்காவிட்டால் இது சாத்தியமாகியிராது என்பதே உண்மை.

இதேவேளை கிருசாந்தி படுகொலைக்கு ஆறு மாதங்களிற்கு முன்னர் இடம்பெற்ற குமாரபுரம் படுகொலைகள் உரிய முக்கியத்துவத்தை பெற்றிருக்கவில்லை.

செம்மணி படுகொலை இரண்டு வருடங்களில் முடிவடைந்த அதேவேளை குமாரபுரம் படுகொலைகள் விசாரிக்கப்படுவதற்கு 20 வருடங்கள் பிடித்தது, இது தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை நினைவுபடுத்துகின்றது.

-பகவதாஸ் சிறீஸ்கந்தன்-

Share.
Leave A Reply

Exit mobile version