வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கின்ற நிலையில், வடக்கின் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
முதலாவது வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையிலும் கூட, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 6 மாகாண சபைகளுக்கும், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது நிச்சயமற்ற நிலையிலேயே இருக்கிறது.
தேர்தல் முறை தொடர்பாக கட்சிகளுக்கிடையில் இன்னமும் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில், தேர்தலை எப்படி – எப்போது நடத்துவது என்று இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இதனால் இழுபறி நிலை நீடிக்கும் சூழலே தென்படுகிறது.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் எப்போது என்று நிச்சயமற்ற நிலை காணப்பட்டாலும், தேர்தலை எதிர்கொள்வதற்கு கட்சிகள் இப்போதே தயாராகத் தொடங்கி விட்டன. அதற்கான கூட்டணிகளை அமைப்பதிலும் நாட்டம் காட்டத் தொடங்கியிருக்கின்றன.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் என்று வரும்போது, இப்போது முக்கியமான- தவிர்க்கப்பட முடியாத ஒருவராக மாறியிருக்கிறார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
இதனால், அவர் தொடர்பாகவும், அவரைச் சுற்றியும் முடிவுகளை எடுப்பது, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சிகளின் முக்கியமான பிரச்சினையாக மாறியிருக்கிறது.
முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் விக்னேஸ்வரனை நிறுத்துவது குறித்து முடிவெடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சிக்கல்கள் நீடிக்கின்றன.
அதேவேளை, அவரைத் தமது அணிக்குள் கொண்டு வந்து போட்டியிட வைப்பதில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் சிக்கல்கள் இருக்கின்றன.
முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை கூட்டமைப்பு மீண்டும் போட்டியில் நிறுத்தாது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீண்ட நாட்களாகவே கூறி வந்திருக்கிறார்.
எனினும், அது தமது தனிப்பட்டகருத்தே என்றும் கட்சியின் முடிவு அல்ல என்றும் கூட, அவர் அண்மையில் சில சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ ரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், அதன் தலைவர் மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற விருப்பம் கட்சிக்குள் பரவலாக உள்ளது.
தமிழரசுக் கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் அதனை விரும்புகிறார்கள். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட்டும் கூட மாவை சேனாதிராசாவை நிராகரிக்காது.
ஆனால், விக்னேஸ்வரனா- மாவை சேனாதிராசாவா என்று ஒரு தெரிவுப் போட்டியை முன்வைக்கும் போது தான் அந்தக் கட்சிகளுக்கு முடிவெடுப்பதில் சிக்கல்கள் உள்ளன.
மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்துவதா இல்லையா என்று முடிவெடுக்கும் விடயத்தில், தமிழரசுக் கட்சியோ, அதன் பங்காளிக் கட்சிகளோ எழுந்தமானமாக முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட போது, இருந்த நிலையில் விக்னேஸ்வரன் இருந்திருப்பாரேயானால், அவரை ஒதுக்கி விட்டு மாவை சேனாதிராசாவை நிறுத்துவது ஒன்றும் கடினமான காரியமில்லை.
ஆனால், முதலமைச்சரானதற்குப் பின்னர், விக்னேஸ்வரனைச் சுற்றி உருவாகியுள்ள விம்பம், அத்தகையதொரு முடிவை எடுக்க முடியாத சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்போது விக்னேஸ்வரனைப் பிடித்து வெளியே தள்ளி விட்டு, மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினால், தமக்குத் தாமே புதைகுழியைத் தோண்டிய நிலையாகி விடும் என்பது தான் கூட்டமைப்புக்கு இப்போது உள்ள சிக்கல்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தமிழரசுக் கட்சி கடுமையான அழுத்தங்களைக் கொடுத்த போதும், அவர் கூட்டமைப்பை விட்டு வெளியேறுவதாகச் சொல்லவில்லை.
ஏனென்றால், அவ்வாறு அவர் வெளியே சென்றால், தமிழரசுக் கட்சிக்குள் இருக்கின்ற முதலமைச்சருக்கு எதிரான தரப்பினருக்கு அது சாதகமாக அமைந்து விடும்.
அத்தகைய வாய்ப்பை வழங்காமல், தொடர்ந்தும், உள்ளுக்குள் இருந்து கொண்டே, அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் விக்னேஸ்வரன். முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்க முனைந்திருந்தார்.
அதற்கான அடிப்படை வேலைகளையும் கூட அவர் முன்னெடுத்திருந்தார்.
அதனையும் தாண்டி அவரை தமது கட்சிக்குள் உள்வாங்கியோ, அல்லது அவரது தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்தோ, கூட்டமைப்புக்குமாற்றான ஒரு அணியை உருவாக்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாராக இருக்கிறது.
அவ்வாறான அணியுடன் இணைவதற்கு, ஈபிஆர்எல்எவ் தயாராக இருக்கின்ற அதேவேளை, ரெலோவில் ஒரு பகுதியினரும், அத்தகைய அணியுடன் இணையும் வாய்ப்புகள் உள்ளன.
கூட்டமைப்பில் உள்ள தமிழ் அரசுக் கட்சியின் பங்காளிகளும் கூட வலுவான மாற்று அணி ஒன்று விக்னேஸ்வரனின் தலைமையில் உருவானால் அதில் இணைந்து கொள்ளக் கூடும்.
கூட்டமைப்புக்கு வெளியே இவ்வாறான மாற்று வாய்ப்புகளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொண்டிருப்பது தான், அவர் பற்றி முடிவுகளை எடுப்பதில் கூட்டமைப்புத் தலைமைக்கு உள்ள பிரதானமான சிக்கலாகும்.
அவரைத் தூக்கி வெளியே போட்டுவிட்டால், எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் விக்னேஸ்வரனால், மாற்று அணிக்குத் தலைமை தாங்க முடியும்.
கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு போய் விட்டார், விடுதலைப் புலிகளின் தலைவரால், உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை சிதைத்து விட்டார் என்ற அவப்பழி ஏற்படுவதை விக்னேஸ்வரன் விரும்பவில்லை.
அது தனது அரசியல் வாழ்வுக்கும், தனிப்பட்ட வாழ்வுக்கும் கறையை ஏற்படுத்தி விடும் என்பதை விக்னேஸ்வரன் உணர்ந்திருக்கிறார்.
அதனால் தான், நம்பிக்கையில்லாப் பிரேரணை போன்ற கடுமையான அழுத்தங்களையும் தாண்டி, அவர் இன்னமும் கூட்டமைப்புக்குள்ளேயே இருக்க முயற்சிக்கிறார்.
சம்பந்தனோ, விக்னேஸ்வரனோ அடுத்த மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக தமது முடிவுகளை அறிவிக்காமல் இழுத்தடித்து வருவதற்கு இது தான் காரணம்.
சில வேளைகளில் சில கட்சிகள் தமக்கு வேண்டாதவர்களை வெளியே தூக்கிப் போட்டு விடும். ஏனென்றால், அவர்களால் வேறு கட்சியில் தாக்குப் பிடிக்க முடியாது. அவர்களைத் தாங்கிப் பிடிக்கவும் வேறு கட்சிகள் முன்வராது என்ற துணிச்சல் தான் அதற்குக் காரணம்.
ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு முடிவெடுக்க முடியாது. விக்னேஸ்வரனும் வெளியே போகும் முடிவை இலகுவாக எடுக்க முடியாது.
இவர்களின் இந்த இழுபறி நிலையினால் சிக்கலுக்குள்ளாகியிருப்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற, கட்சிகள் தான்.
தேர்தல் என்றாலும் சரி, போர் என்றாலும் சரி முதலில் தெரிவு செய்ய வேண்டியது எதிரியைத் தான். எதிரியைத் தெரிவு செய்தால் தான், எதிரிக்குப் போட்டியான – சமதையான பலத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்சிகள் தரப்புகளுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை எந்த இடத்தில் வைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
அவரைத் தமது மாற்று அணிக்குத் தலைமை தாங்க வைக்கும் கனவில் இருந்து வந்த இந்தத் தரப்புகளுக்கு, அவர் காலை வாரி விட்டு விடுவாரா என்ற பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முதலமைச்சர் விக்னேஸ்வரனை தமது கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறும், அல்லது புதிய கட்சியை ஆரம்பித்தால் அவருடன் கூட்டு வைத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த விடயத்தில் முதலமைச்சர் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரனோ அவரது இந்தக் கோரிக்கைக்கு சாதகமாகப் பதிலளிக்கத் தயாராக இல்லை. தேர்தல் வரும் போது யாருடன் கூட்டு என்று முடிவு செய்யலாம். அதற்கு ஒன்றும் அவசரப்படத் தேவையில்லை என்று நழுவியிருக்கிறார்.
இந்தநிலையில் தான், கூட்டமைப்புக்கு மாற்றான தரப்பாக தம்மை அடையாளப்படுத்த முனையும் சக்திகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனை மீண்டும் கூட்டமைப்பு தமது வேட்பாளராக நிறுத்தினால், அவர்களின் எல்லா வியூகங்களும் உடைந்து போய் விடும்.
அதாவது விக்னேஸ்வரனின் தலைமைத்துவம், அவரது கொள்கைகளை முற்றுமுழுதாக ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற தரப்புகள், அவரை எதிர்த்து எவ்வாறு தமது பிரசாரத்தை முன்னெடுக்கப் போகின்றன என்பது சிக்கல்.
அதனால் தான் எப்படியாவது அவரை வெளியே கொண்டு வந்து விட்டால், அவருக்கு இருக்கின்ற ஆதரவு அலையையும், தமது வாக்கு வங்கியையும் வைத்து வடக்கு மாகாணசபையையும் கைப்பற்றி மாற்று அணியாகவும் உருவெடுத்து விடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.
ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற தரப்புகள் தமது எதிரியாக யாரை முன்னிறுத்தப் போகின்றன- எவ்வாறான பிரசார வியூகத்தை வகுக்கப் போகின்றன என்பதை இப்போது முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
கூட்டமைப்பும், விக்னேஸ்வரனும் எடுக்கப்போகும் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
எதிரியை இவ்வாறு காத்திருக்க வைப்பதும் கூட அவர்களைப் பலமிழக்கச் செய்வதற்கான ஒரு உத்தி தான்.
இதனைக் கூட்டமைப்பு சரியாக கையாளுமானால், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமக்குப் போட்டியாக இருக்கக் கூடிய தரப்புகளை இலகுவாகத் தோற்கடித்து விட முடியும் என்பதில் சந்தேகமில்லை.
– சத்திரியன்