இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டு நடவடிக்கைள் ஏமாற்றத்தை தரும் வகையில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்மைப்பு தெரிவித்துள்ளது. இலவு காத்த கிளியின் கதைபோல சிங்களத் தலைவர்களை நம்பியிருப்பது என்பது வரலாறு முழுவதும் நடத்திருக்கிறது.

மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கையிலும் இதை உணரும் காலம் வெளிப்படையாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும் மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளவும் தமிழ் மக்கள் பெரும் பங்களிப்பை ஆற்றினர். ஆனால் இவ்விரு ஆட்சிகளும் இனப்பிரச்சினை விடயத்தில் எந்த வேறுபாடுகளும் அற்றவை என்பதையே ஜனாதிபதியின் வெளிநாட்டு உரைகள் எடுத்துரைக்கின்றன.

2009 முள்ளிவாய்க்காலில் நடந்தது மாத்திரமல்ல, இலங்கையில் வரலாறு முழுவதும் நடந்தது இனப்புடுகொலை என்றும் அதற்கான நீதியை கோரும் சர்வதேச விசாரணை வேண்டும் என்று வடக்கு மாகாண சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானம் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பு.

இலங்கையில் புரையோடிப்போன இனச் சிக்கலுக்கான நீதியையும் இனப்படுகொலைக்கான தீர்வே வழங்க முடியும். இந்த நிலையில் ஐநாவில் இலங்கை ஜனாதிபதி ஆற்றியுள்ள உரையில் தென்னிலங்கை மக்களுக்கு மாத்திரமல்ல, வடக்கு மக்களுக்கும், இலங்கை அரசின் தெளிவான நிலைப்பாடுகளை சொல்லியுள்ளார்.

இலங்கை இறைமையுள்ள நாடு என்றும் எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்கிறோம் என்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நாவில் கூறியுள்ளார்.

இலங்கை யுத்த விடயத்தில் வித்தியாசமான தீர்மானம் ஒன்றை ஐ.நாவில் அறிவிக்கப் போவதாக கொழும்பில் வைத்து கூறிய மைத்திரி, காலம் காலமாக இலங்கை அரசுகள் வெளிப்படுத்தும் அணுகுமுறைகளையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐ.நாவில் அடிக்கடி கூறி வந்த வாசகங்களையே அங்கு ஒப்புவித்துள்ளார்.

இதன்மூலம் தமிழ் மக்களின் கோரிக்கையை மைத்திரிபால உசாதீனம் செய்துள்ளார். அத்துடன் மகிந்த ராஜபக்சக்களையும் இராணுவத்தையும் காப்பாற்றும் அவரது சிரத்தையை மாத்திரம் வெளிப்படுதியுள்ளார்.

நியூயோர்க்கில் புலம்பெயர்ந்த சிங்கள மக்களிடையே பேசிய ஜனாதிபதி மைத்திரி, இறுதி யுத்தத்த்தின் கடைசி இரண்டு வாரங்களில், பதில் பாதுகாப்பு அமைச்சராக யுத்தத்தை தானே வழி நடத்தியதாக கூறியுள்ளார்.

அத்துடன் அக் காலத்தில் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டவர்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி வெளிநாடுகளில் பதுங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் இக் கருத்தை கூற வந்தது, இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெறவில்லை என்பதை தெரிவிப்பதற்கே. இலங்கையின் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பது உலகம் அறிந்தது. அத்தனை ஆதாரங்களும் உலக அரங்கில் வெளியாகியுள்ளது.

இதைப்போலவே அமைச்சர் மகிந்த சமரசிங்க கடந்த சில நாட்களின் முன்னர் கூறுகையில், சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இனப்படுகொலை ஆதாரங்கள் நடித்து வெளியிடப்பட்ட காட்சிகள் என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ராஜபக்சக்கள் வெளியிட்டு வந்த கருத்துக்களையும்விட மிக அற்புதமாக நடித்துள்ளார் மகிந்த சமரசிங்க. இதுதான் இன்றைய அரசின் நிலைப்பாடா? இசைப்பிரியா படுகொலை, பாலச்சந்திரன் படுகொலை, போராளிகள், பொதுமக்கள் படுகொலை என பல இனப்படுகொலை ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இவைகளை எல்லாம் நடித்து வெளியிடப்பட்ட காட்சிகள் என்று இன்றைய அரசு கூறுவது எவ்வளவு குரூரமானது?

சர்வதேசம் இனப்படுகொலை விடயத்திலோ, இனப்பிரச்சினை விடயத்திலோ தலையிடத் தேவையில்லை என்று கூறுகின்ற அரசாங்கம் சர்வதேசம் தலையிடுவதாக இருந்தால், உதவிகளை மாத்திரம் வழங்கலாம் என்று கூறியுள்ளது.

மைத்திரிபால சிறிசேன இராணுவத்தை காட்டிக்கொடுக்கவில்லை, காப்பாற்றியுள்ளார் என்பது இப்போவதாவது புரிகிறதா என்று மகிந்த அணியை பார்த்து கூறியுள்ளார் அமைச்சர் மகிந்த சமரசிங்க. ஐ.நாவில் இருந்தும் தெற்கு வாக்கு வங்கியை தக்க வைக்கும் அரசியலே இடம்பெற்றுள்ளது.

ஐ.நா சபையை உண்மையை நீதியை உரைக்கும் இடமாக அவர்கள் கருதவில்லை. அங்கு மகிந்தவை சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றி தமது ஆட்சிக்குள் விழுத்தும் முயற்சியே இடம்பெற்றுள்ளது.

போர் வெற்றி நாட்களிலும் இலங்கையின் சுதந்திர தினத்திலும் இராணுவத்தை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்பதை மைத்திரிபால அடித்து சத்தியம் செய்திருந்தார். அத்துடன் மகிந்தவையும் காப்பாற்றியே தீருவேன் என்றும் அவர் சொன்னதை செய்கிறார்.

தமிழ் மக்கள் தான் இந்த விடயத்தில் ஏமாந்துள்ளனர். இனப்படுகொலை அரசு தீர்வு தரும், இனப்பிரச்சினைக்கு தீர்வு தரும் என்று ஏமாந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தவிர்க்கும் செயற்பாடுகளில் இலங்கை ஈடுபட்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவே இனி இல்லை என்ற நிலையில் அதன் தீர்மானமும் நீங்கிப் போகும் என்று சொல்கிறது. அத் தீர்மானத்திற்கானள கால நீடிப்பை பெற்று பெற்று, அதனை அர்த்தமற்ற தீர்மானமாக ஆக்கியதன் மூலம் இலங்கை வெற்றி பெற்றுவிட்டது.

இலங்கையில் உள்ளக விசாரணை நடாத்தி தீர்வு வழங்கப்படும் என்று கூறியது மைத்திரி அரசாங்கம். அத்துடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைப்பதாகவும் கூறியது.

ஆனால் கடந்த 2015இல் ஆட்சியை கைப்பற்றி மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதற்கான எந்த நடவடிக்கைகளும் சித்தி பெறவில்லை. காலத்தை இழுத்தடித்த, தமிழர்களை ஏமாற்றிய, காலம் காலமான அணுகுமுறையே இடம்பெற்றுள்ளது.

இலங்கை அரசு தொடர்ந்தும் தனது பேரினவாத கடும்போக்கையே வெளிப்படுத்துகிறது. இனப்படுகொலையை நிகழ்த்தியமைக்கு ஒப்பானது அதனை மறைக்க எடுக்கும் நடவடிக்கைகளும் ஆகும்.

ராஜபக்சக்களையும் மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றி விட்டேன் என்றும் யுத்தத்தின் இறுதி வாரங்களை வழி நடத்தியவன் நான் என்றும் கூறுவதன் மூலமே, மைத்திரிபால சிறிசேன யுத்த குற்றத்தில் பதில் அளிக்கும் பொறுப்பு கொண்டவர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

மைத்திரிபாால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த நாட்களிலேயே முள்ளிவாய்க்காலில் பல ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன் முக்கிய இனப்படுகொலைகள் பலவும் அக்காலத்திலேயே இடம்பெற்றுள்ளன.

பாலச்சந்திரன் படுகொலை, இசைப்பிரியா படுகொலை உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்களின் கொலைகளும் இந் நாட்களிலேயே நடந்துள்ளன. எனவே இவை யாவற்றுக்கும் பொறுப்பு சொல்ல வேண்டிய நபர் மைத்திரிபாலவே.

அது மாத்திரமின்றி போரில் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதும் இக்காலத்திலேயே. மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றியதன் மூலம் இனப்படுகொலையாளிகளை தண்டிக்கும் வாய்ப்பு பறிபோய்விட்டதாக தமிழ் மக்களிடையே ஒரு பேச்சும் உண்டு.

ஆனால் இனப்படுகொலை யுத்தத்தில் தனக்கும் பெரும் பகுதி உண்டு என்பதை இலங்கை ஜனாதிபதி மைத்திரி கூறுகின்றார். அக் காலப் பகுதியை உரிமை கோரும் மைத்திரிபால தானும் ஒரு போர்க்குற்றவாளி என்பதை ஒப்புக்கொள்ளுகிறார் என்றே கருத வேண்டும்.

தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு பொறுப்புச் சொல்லும் வித்தில் இலங்கை வரலாற்று ஆட்சியாளர்கள் வரிசையில் மைத்திரிபாலவும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

நெல்சன் மண்டேலாவின் வழிமுறைகளைப் பின் பற்றுவதாக மைத்திரிபால கூறியிருப்பதைப்போல வேடிக்கை வேறெதுவும் இல்லை. நெல்சன் மண்டேலா ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர்.

அவர் ஒடுக்கப்பட்ட சனங்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்தவர். தமிழ் மக்களுக்கு எதிராக காலம் காலமாக மிகவும் குரூரமாக ஒடுக்கி அழித்து, அவர்களை இனப்படுகொலை செய்துவரும் ஒரு அரசை, இராணுவத்தை, கட்மைப்பை பாதுகாத்துக் கொண்டு, அதனை திருப்திப்படுத்திக் கொண்டு, நெல்சன் மண்டேலாவின் வழியை பின் பற்றுகிறோம் என்பது, அந்த உயர்ந்த மனிதரை உலகில் எவரும் அவமானப்படுத்தியிராத செயல்.

தன்னுடைய நிலைப்பாடுகளை அறிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன, இன்னுமொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை இறையுள்ள நாடு என்றும் எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்கிறோம் என்றும் கூறுகின்ற வேளையில், தமிழ் மக்கள் இறைமையுள்ள மக்கள், அவர்களின் தலைவிதியை அவர்களே தீர்மானிக்க உரித்துடையவர்கள் என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும். $

இனப்படுகொலை விடயத்தில் நீதி வழங்கப்படாமல், இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாமல் ஏமாற்றப்படும் நிலை தொடர்ந்தால் தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவதும் தவிர்க்க முடியாதது. தமிழ் மக்களின் இன்றைய வெளிப்பாடுகளும் அணுகுமுறைகளும் மாற்றம்பெற வேண்டிய காலம் வந்துவிட்டது

-தீபச்செல்வன்-

Share.
Leave A Reply

Exit mobile version