‘நெருப்பில்லாமல் புகை வருமா?’ இதுதான், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இரகசியச் சந்திப்பு நடந்ததாக வெளியாகிய தகவல்கள் மறுக்கப்பட்ட போது, பலராலும் முணுமுணுக்கப்பட்ட பழமொழியாகும்.

முன்னாள் அமைச்சரும், நல்லாட்சி அரசாங்கத்தை விட்டு விலகி, திரிசங்கு நிலையில் இருக்கும், ​​ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான எஸ்.பி. திஸாநாயக்கவின் இல்லத்தில், கடந்த மூன்றாம் திகதி, ஓர் இராப்போசன விருந்து இடம்பெற்றிருந்தது.

அதில், மஹிந்த ராஜபக்‌ஷவும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதை எஸ்.பி.திஸாநாயக்க, அறிக்கை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இந்த இராப்போசன விருந்தின் போதே, மஹிந்த ராஜபக்‌ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் சந்தித்துப் பேச்சு நடத்தினர் என்றும், மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராகக் கொண்ட, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்துப் பேசப்பட்டதாகவும், ஜனாதிபதி படுகொலைச் சதித் திட்டம் தொடர்பாக, ஜனாதிபதிக்கே தெரியாத அதிர்ச்சி தரக் கூடிய தகவல்களை, மஹிந்த ராஜபக்‌ஷ வெளிப்படுத்தியதாகவும் செய்தி வெளியாகியது.

இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல்கள் வெளியானவுடன், எந்தத் தரப்பும் அதை மறுக்கவில்லை. முதலில் எஸ்.பி. திஸாநாயக்க தான், அவ்வாறான சந்திப்பு ஏதும், தனது வீட்டில் நடக்கவில்லை என்றார்.

அதுபோலவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் உள்ள மஹிந்த அமரவீரவும், அத்தகைய சந்திப்பு நடக்கவில்லை என்று கூறியிருந்தார்.

அதற்குப் பின்னர், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் போன்றவர்கள், மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தவில்லை என்றனர்.

ஆனாலும், இந்தப் ‘புகை’ அடங்காத நிலையில் தான், எஸ்.பி.திஸாநாயக்க, தனது வீட்டில் இராப்போசன விருந்து நடந்தது. அதில் மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்றார்.

அப்போது நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார நிலைமைகள் குறித்து, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசப்பட்டது உண்மை என்றும், ஆனால் அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எந்தப் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்பட்ட காலப்பகுதியில் தான், எஸ்.பி. திஸாநாயக்க ஒரு புதிய திட்டத்தைப் பகிரங்கப்படுத்தி இருந்தார். தற்போதைய அரசாங்கத்தை நீக்கி விட்டு, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து, தேர்தலை நடத்துவதே அந்தத் திட்டம்.

சுருங்கச் சொல்வதானால், அரசாங்கத்தில் இருந்து ஐ.தே.கவை வெளியேற்றி விட்டு, ஒன்றிணைந்த எதிரணியுடன் சேர்ந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கும்.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு, இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு, மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்படுவார்.

ஆனால், ஒன்றிணைந்த எதிரணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்த்துக் கொண்டால் கூட, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்காது.

எனவே, சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றோ, அவற்றை உடைத்தோ, ஐ.தே.கவின் பக்கத்தில் இருந்து சிலரை இழுத்தோ தான், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

எனினும், ஒன்றிணைந்த எதிரணிக்கு இன்னொரு வாய்ப்பு வசதியாக வந்திருக்கிறது. அது, வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் வாய்ப்பு. டிசெம்பர் மாதம் வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பின்போது, அதைத் தோற்கடித்தால், அரசாங்கம் பதவி விலக வேண்டும்; அது மரபு.

தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதால், யாருக்கு என்ன இலாபம் கிட்டும் என்பது, இங்கு முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம்.

எஸ்.பி. திஸாநாயக்க உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் திரிசங்கு நிலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரும், இப்போது, நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்களால் ​ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒட்டவும் முடியவில்லை. அவர்களுக்கு அரசாங்கத்தின் சலுகைகளும் இல்லை.

அதேவேளை, பொதுஜன பெரமுனவும் அவர்களைச் சேர்த்துக் கொள்ளத் தயாராக இல்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி மைத்திரிபால சிறிசேனவிடம் இருக்கும் வரை, அவர்களைத் தமது பக்கம் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதில் பொதுஜன பெரமுன உறுதியாக இருக்கிறது, இவர்களை வைத்தே, மைத்திரிபால சிறிசேனவுடன் ஒட்டிக் கொள்ளவோ, அல்லது அவரை வெட்டியாடவோ முடியும் என்பது, மஹிந்த தரப்புக்கு நன்றாகத் தெரியும். எனவே தான், அவர்களை திரிசங்கு நிலையில் வைத்திருக்கிறது.

இந்தத் திரிசங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரும், ஏதாவது ஒரு பக்கத்தைச் சென்றடைய வேண்டுமாயின், தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்பட வேண்டும். எனவேதான், இந்தத் திட்டத்தை முன்னெடுக்கிறார் எஸ்.பி. திஸாநாயக்க.

ஒன்றிணைந்த எதிரணியைப் பொறுத்தவரையில், அரசாங்கத்தைக் கவிழ்ப்பதால், மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக்க முடியும்.

இடைக்கால அரசாங்கத்தைப் பொறுப்பேற்று, தேர்தலை நடத்தினால், ஆட்சியைப் பிடிப்பதும் சுலபம். முடிந்தால், 19ஆவது திருத்தத்தில், திருத்தம் செய்து, ஜனாதிபதிக்கான அதிகாரத்தை மீண்டும் கொண்டு வர முடியும். இல்லாவிட்டால், மஹிந்தவை பிரதமர் பதவியில் வைத்திருக்க முடியும்.

எனவே, ஐ.தே.கவை நீக்கி விட்டு, இடைக்கால அரசாங்கத்தைக் கைப்பற்றும் இந்தத் திட்டம் ஒன்றிணைந்த எதிரணிக்குச் சாதகமானது தான். சரி, இந்தத் திட்டத்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ, அவரது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ என்ன இலாபம் கிடைக்கும்?

மஹிந்த ராஜபக்‌ஷ, பொதுஜன பெரமுனவின் தலைமையை ஏற்கப் போகிறார். அவரது குடும்ப அரசியல் விருத்திக்கு அதுவே சிறந்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறு பண்டா குடும்பத்தின் சொத்தாக இருந்ததோ, அதுபோல, பொதுஜன பெரமுனவை அவரால் மாற்ற முடியும். குமார வெல்கம போன்ற சில குரல்கள் எதிர்த்தாலும், பெரும்பாலானவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இப்போது பலமிழந்து போய் நிற்கிறது. மைத்திரிபால சிறிசேனவுடன் இருந்தவர்களில் பலரும், ஓடிப் போய் விட்டனர்.

இந்தச் சூழலில், பொதுஜன முன்னணியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்து போட்டியிட்டால், கட்சியை ஓரளவுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருக்கிறது,

மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில், அவர் மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட விரும்பினால், அவரிடம் உள்ள ஒரே தெரிவு பொதுஜன பெரமுனவிடம் தஞ்சமடைவது தான். ஏனென்றால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க சொந்த வேட்பாளரையே நிறுத்தும் என்றும், பொது வேட்பாளரை ஆதரிக்காது என்றும், கூறி வருகிறது.

இந்தநிலையில், பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து வேண்டுமானால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியும்.

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்குமானால், அவ்வாறான ஒரு பேரம் பேசும் முயற்சிகள் விரைவாகவே தொடங்கப்படுவதற்கும், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

ஆனால், மைத்திரிபால சிறிசேன தனது மக்களாணையை மதிப்பார் என்று ஐ.தே.க உறுதியாக நம்புகிறது. அந்த நம்பிக்கையை அவர் எந்தளவுக்கு காப்பாற்றுவார் என்பதைப் போகப்போகத் தான் தெரிந்து கொள்ள முடியும்.

இன்னொரு பக்கத்தில், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் விடயத்தில் ஒன்றிணைந்த எதிரணிக்குள்ளேயும் குழப்பங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

அதாவது, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு, குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதை விட, இன்னும் ஒரு வருடம் பொறுத்திருந்து, அடுத்த தேர்தலின் மூலம் மக்களின் ஆணையைப் பெற்று, ஆட்சியைப் பிடிப்பது தான் நல்லது என்று பஷில் ராஜபக்‌ஷ வலியுறுத்துவதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

ஆனால், விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல போன்றவர்கள் அவசரப்படுகிறார்கள். எப்படியாவது ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, அதிகாரத்தைப் பிடிக்க முனைகிறார்கள். இது, ஒன்றிணைந்த எதிரணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கட்டத்தில் முடிவெடுக்க வேண்டியவர்கள் இரண்டு பேர்; ஒருவர் மஹிந்த ராஜபக்‌ஷ. இன்னொருவர் மைத்திரிபால சிறிசேன. இவர்கள் இரண்டு பேருமே, சொந்தமாக முடிவெடுக்க முடியாமல் இருக்கின்றனர் போலவே தெரிகிறது.

இரண்டு பேருக்கும் பின்னால், முடிவுகளை எடுக்க நிர்ப்பந்திக்கும் பலர் இருக்கிறார்கள். இதில் யாருடைய கை ஓங்குகிறதோ அந்த முடிவு தான் எடுக்கப்படும்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு, இடைக்கால அரசாங்கத்தின் கனவு என்பன நிறைவேற வேண்டுமாயின், இரண்டு பக்கமும் பச்சைக்கொடி காண்பிக்க வேண்டும். ஒரு கைதட்டி ஓசை வராது.

கே. சஞ்சயன் (கட்டுரை)

Share.
Leave A Reply

Exit mobile version