“நாங்கள் ஏன் எங்களுடைய வீடுகளுக்குச் செல்ல முடியாது?” – இது, இடம்பெயர்ந்து இன்னும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் இருக்கின்ற குடும்பங்களின் நீண்டகால கேள்வி.
அரசாங்கத்தை நோக்கி எழுப்பப்பட்டுள்ள இந்தக் கேள்விக்கு அரசாங்கத்திடம் இருந்து சரியான பதில் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை. இந்தக் கேள்வியின் மூலம் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியேற வேண்டும்; – சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற அடிப்படை உரிமை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவது புலனாகியிருக்கின்றது.
எமது காணிகளுக்குத் திரும்பிச் செல்வதற்கு ஏன் எங்களுக்கு அனுமதி இல்லை?; எமது நிலமே எமக்கு வேண்டும்; எமது காணிகள் எமக்கே சொந்தம்; எங்களை எமது காணிகளிலேயே குடியேற்று போன்ற கோஷங்களுடன் எண்ணற்ற தடவைகள் வடக்கு,கிழக்கு பிரதேசங்கள் மட்டுமல்லாமல் வெளிப்பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள்.
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகப் போகின்ற நிலையிலும், இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களை, அவர்களுடைய சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் விருப்பமில்லாத ஒரு போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.
விருப்பமில்லாத போக்கு என்பதிலும் பார்க்க, தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுடைய காணிகளை அபகரிப்பதிலேயே அதிக நாட்டம் கொண்டிருக்கின்றது என்றே கருத வேண்டியிருக்கின்றது.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற போது வடக்கிலும் கிழக்கிலும் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில், இராணுவ மூலோபாயச் செயற்பாடுகளுக்கு ஏதுவான இடங்களிலும் அரசாங்கம் தனது படைகளை நிலைகொள்ளச் செய்திருந்தது.
இராணுவம் தனக்குத் தேவையான இடங்களைத் தெரிவு செய்து தன்னிச்சையாக அங்கு நிலைகொள்வதற்கு அரசாங்கம் உரிய அதிகாரத்துடன் கூடிய அனுமதியையும் தேவையான வசதிகளையும் வழங்கி யிருந்தது.
உண்மையில் யுத்தம் முடிவடைந்ததும் அந்த இடங்களில் இருந்து இராணுவம் வெளியேறியிருக்க வேண்டும். அந்த நடவடிக்கை அரசாங்கத்தினால், உரிய முறையில் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்படவில்லை.
இதனால், பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி, அங்கு அந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கு இதய சுத்தியுடன் அரசு செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்திருந்த மூன்று லட்சம் மக்களுக்கு வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் அரசாங்கம் அபயமளித்திருந்தது. அங்கு தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மிகவும் இறுக்கமான இராணுவ கண்காணிப்பில் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருந்தார்கள்.
யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவடைந்ததையடுத்து, ஒக்டோபர் மாதம் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனாலும், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்ட போதிலும், அர்த்தமுள்ள வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான அளவில் மறுவாழ்வுக்கான வாய்ப்பு கிடைக்கத்தக்க வகையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடு க்கப்படவில்லை.
ஆனால், நிலைமைகளைச் சமாளி ப்பதற்காக,அரசாங்கம் அவ்வப்போது சாக்குப்போக்குகளைக் கூறியதுடன், உறுதிமொழிகளையும் வழங்கியிருந்தது. ஆனால் அந்த உறுதிமொழிகள் உரிய காலத்தில் நிறைவேற்றப்படவில்லை.
இந்தப் பின்னணியில்தான், இலங்கை அரசு இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகளை மீளளிப்பதில் தாமதமாகவே செயற்படுகின்றது என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு கலந்தாலோசனையுடன் கூடிய முன்னேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அந்த சர்வதேச அமைப்பு வலியுறுத்தியிருக்கின்றது.
சிவிலியன்களின் காணி உரித்து நிலைநிறுத்தப்பட வேண்டும்
யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு தசாப்தகாலம் நிறைவடைகின்ற நிலையிலும் சிவிலியன்களுக்குரிய காணி உரிமம் அரசாங்கத்தினால் இன்னுமே நிலைநிறுத்தப்படவில்லை என்றதோர் ஆதங்கத்தொனியில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு 80 பக்கங்களைக் கொண்ட நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது.
குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த அரசாங்கத்தினுடைய காணிகளை மீளளிக்கும் பொறுப்பின் முன்னேற்றமானது, மிகப் பரந்த தேசிய பாதுகாப்புக்கான உரிமை கோரலினாலும் வெளிப்படைத்தன்மையற்ற நடவடிக்கைகளினாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று அந்த அறிக்கை விபரம் தெரிவித்திருக்கின்றது.
தேசிய பாதுகாப்பு அவசியம்.அதற்கு முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.ஆனால், யுத்த மோதல்களின் போது பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்த மக்களுடைய காணிகளைக் கைப்பற்றி நிலைகொண்டுள்ள அரச படைகள் அந்தக் காணிகளை உரியவர்களிடம் மீளளிப்பதில் பராமுகமாகச் செயற்படுகின்ற தன்மையும், அந்தக் காணிகளை அரச படைகளின் உடைமையாக்குகின்ற போக்கிலான அரசின் செயற்பாடும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
தேசிய பாதுகாப்பு என்பது வெறுமனே அரசாங்கத்தையும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதல்ல.
அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தைப் பதவியில் இருத்திய இறைமையுள்ள மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகளைப் பாதுகாப்பதிலும்கூட தேசிய பாதுகாப்பு பின்னிப் பிணைந்திருக்கின்றது. இன்னும் அழுத்தமாகக் கூறுவதென்றால், மக்கள் இல்லாமல் அரசாங்கம் இல்லை.
எனவே, மக்களும், மக்களுடைய உரிமைகள், தேவைகளும் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.அதுவே உண்மையான தேசிய பாதுகாப்பாக அமைய முடியும்.
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில்,பயங்கரவாதிகள் என்று உருவகப்படுத்தப்பட்டவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களில் ஒரு பகுதியினருடைய காணிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு,பயங்கரவாதிகளின் ஆதிக்கத்திற்குள் அந்த மக்கள் இருந்த காரணத்தினால், அவர்களால் அல்லது அந்தப் பிரதேசத்தில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது அல்லது அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற அனுமானத்தில் கைப்பற்றப்பட்ட காணிகளில் இருந்து அரச படைகள் வெளியேற மறுப்பதை ஏற்கத்தக்க நடவடிக்கையாகக் கொள்ள முடியாது.
இதனை மனித உரிமைகள் கண்காணிபபு அமைப்பு தனது அறிக்கையில் மறைமுகமாக எடுத்துக்காட்டியிருக்கின்றது.
தங்களுடைய சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கு, கொடூரமான யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என தெரிவித்துள்ள மனித உரிமைகள் காப்பக அமைப்பின் தென்னாசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி, திரும்பத் திரும்ப வழங்கப்பட்ட அதிகாரிகளுடைய வாக்குறுதிகளுக்கு மத்தியில், அதிகாரபூர்வமான உரிமையாளர்களிடம் காணிகளை மீளளிப்பதில் ஏமாற்றமும், விரக்தியும் அடையத்தக்க வகையில், அரச படைகள் தாமதம் காட்டி வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையினர் தமது காணிகளை மீள கையளிக்க வேண்டும் எனக் கோரி மன்னார் மாவட்டம் முள்ளிக்குளத்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதையடுத்து, 100 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக கடந்த 2017 ஆம் ஆண்டு இராணுவம் உறுதியளித்திருந்த போதிலும், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படுவதற்காக இடம்பெயர்ந்துள்ள மக்கள் இன்னும் காத்திருக்கின்றார்கள்.
இப்போது யுத்தம் இல்லை. இது சமாதான காலம். அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் எங்களுடைய சொந்தக் காணிகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாது என்று முள்ளிக்குளத்தைச் சேர்ந்த மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.
விவசாயம் செய்யும் படையினர்
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அதற்கு ஊறு விளைந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கைக்குமாகவே இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளில் இராணுவத்தினர் முக்கியமான முகாம்களையும் இராணுவ நிலைகளையும் அமைத்திருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், இறுதி யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய முயற்சிகளில் முன்னேற்றகரமாக ஈடுபட்டிருந்த படைப் பிரிவுகளுக்கும் படையினருக்கும் போட்டி அடிப்படையில் பரிசில்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. தேசிய பாதுகாப்பின் ஓர் அம்சமாகவா அரச படைகள் இவ்வாறு விவசாயம் செய்திருக்கின்றார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எரிச்சலோடு வினவுகின்றார்கள்.
விவசாயம்,கால்நடை வளர்ப்பு அமைச்சை சேர்ந்த தகுதி வாய்ந்த அதிகாரிகளின் மேற்பார்வையிலும், நடுவர்களாக அவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளிலும் இராணுவத்தினர் மத்தியில் விவசாயச் செய்கையில் திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 641 ஆம் படைப்பிரிவின் தலைமையகத்துக்கு உட்பட்ட படைப்பிரிவுகள், படை அணிகள் மற்றும் படை நிலைகளைச் சேர்ந்த இராணுவத்தினரே விவசாயம் செய்வோம் நாட்டை முன்னேற்றுவோம் என்ற கருத்தில் அமைந்த ‘அபி வவமு, ரட்ட நகமு’ என்ற பெயரிலான விவசாய முயற்சிப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட ஆயுதப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் துஷியந்த ராஜகுரு தலைமையில் இந்த விவசாயப் போட்டிகள் நடைபெற்று வெற்றியாளர்களான படையினரும், படை அதிகாரிகளும், படைப்பிரிவும் தெரிவு செய்யப்பட்டு வைபவரீதியாக பரிசளிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
படையினர் விவசாய முயற்சியில் ஈடுபடுவதென்பது, இரண்டு வழிகளில் இடம்பெயர்ந்த மக்களை பாதிக்கச் செய்திருக்கின்றன.இடம்பெயர்ந்த மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்கள் அபகரித்திருப்பதுடன் நில்லாமல், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் சவால்களுக்கு உள்ளாக்கும் வகையில் அவர்களுடைய ஜீவனோபாயத் தொழிலாகிய விவசாயத்தையும் அரச படைகள் ஆக்கிரமித்திருக்கின்றன.
மக்களாட்சி நிலவுகின்ற ஒரு நாட்டில், ஜனநாயகத்திற்கு முதலிடம் கொடுத்துச் செயற்படுவதாகப் பெருமையோடு கூறுகின்ற ஓர் அரசாங்கத்திற்கு இது ஓர் அவப்பெயரையே பெற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஜனநாயகம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. உண்மையான ஜனநாயக அரசாங்கம் ஒருபோதும், இறைமையுள்ள மக்களுடைய வாழ்விடங்களையும், அவர்களுடைய வாழ்வாதாரத் தொழில்களையும் இராணுவத்தின் ஊடாக ஆக்கிரமிக்க முற்படமாட்டாது.
இராணுவத்தினர் சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்களுடைய காணிகளையே இவ்வாறு ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளவர்களாகிய இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களுடைய காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது என்பது, சிறுபான்மை இன மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இனவாத ரீதியிலான ஓர் இராணுவ அடக்குமுறையாகவே நோக்க வேண்டியிருக்கின்றது. அதுமட்டுமல்ல.
தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை, சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையின் ஓர் அம்சமாகக் கருதுவதிலும் தவறு இருக்க முடியாது.
அரச நிறுவனங்களுக்கிடையில் கைமாறும் காணிகள்
அரசபடைகள் வசமுள்ள பொதுமக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், உரிமையாளர்களிடம் அந்தக் காணிகள் மீளளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டு வீதிகளில் எதிரொலித்து வருகின்றது. ஆனால், அரசாங்கம் அந்தக் கோரிக்கையை உரிய முறையில் கவனத்தில் எடுத்துச் செயற்படுவதாகத் தெரியவில்லை.
அரச படைகளினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை அள்ளிக் கொடுப்பதற்குப் பதிலாக சிறுகச் சிறுக கிள்ளிக்கொடுக்கின்ற ஒரு போக்கையே அரசு கடைப்பிடித்து வருகின்றது. அரச படைகள் தேவைகளின் நிமித்தம், தாங்கள் நிலைகொண்டுள்ள காணிகளில் இருந்து வெளியேறுகின்றபோது சில சந்தர்ப்பங்களில் அந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் மீளளிப்பதற்குப் பதிலாக, வேறு அரச பிரிவினரிடம் கையளித்துச் செல்கின்ற சம்பவங்கள் குறித்த தகவல்களையும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
மன்னார் கடலோர புறநகர்ப்பகுதியாகிய பள்ளிமுனையில் 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வையடுத்து இடம்பெயர்ந்த மக்களுடைய காணிகளை இராணுவம் கைப்பற்றியிருந்தது. அங்கிருந்து இராணுவம் வெளியேறிய போது பொலிஸார் அவற்றைக் கைப்பற்றி நிலைகொண்டிருந்தபோது, அவற்றை மீளக் கையளிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் விடுத்திருந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர்கள் உறுதியளித்திருந்தனர். ஆனால், பொலிஸார்! அங்கிருந்து வெளியேறியதும், கடற்படையினர் அந்த இடத்தைக் கைப்பற்றி நிலைகொண்டிருக்கின்றனர்.
மன்னார் பள்ளிமுனையில் மட்டுமல்ல பல இடங்களிலும் இவ்வாறு படையினர் மத்தியில் காணிகள் கைமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பதாகவும், இதனால் தமது சொந்தக் கிராமங்களிலேயே தாங்கள் இடம்பெயர்ந்து வேறிடத்தில் தஞ்சமடைய வேண்டியிருப்பதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம் காரணமாக இருபது முப்பது இடங்களுக்கு மக்கள் பாதுகாப்பு தேடி மாறி மாறி இடம்பெயர்ந்த காரணத்தினால், பற்றைகள் வளர்ந்து, அவர்களுடைய காணிகள் காடாக மாறியிருப்பதையடுத்து, வனபரிபாலன திணைக்களம் அந்தக் காணிகளுக்கு உரிமை கோருகின்றது. ஆனால், உறுதிப்படுத்தப்பட்ட உரிய காரணங்கள் இல்லாமலேயே பல இடங்களில் தொல்லியல் திணைக்களத்தினர் தமது மூக்கை நுழைத்து, பொதுமக்களின் காணிகளில் உரிமை கோரிய சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த நிலையில் பொதுவான ஒரு கொள்கையின் அடிப்படையில் ஒரு பொது வேலைதிட்டத்தின் கீழ் அரசாங்கம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்காத காரணத்தினால் பல இடங்களுக்கும் பல தடவைகள் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றம் சிக்கல் மிகுந்த நடவடிக்கையாக மாறியுள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுக்கு பொறுப்பு கூறுவதாக சர்வதேசத்திற்கு அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் பராமுகமாக நடந்து கொள்கின்ற சூழலில் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்கள் அரசாங்கத்தின் கபடத்தன்மையை தோலுரித்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றன.
இந்த போக்கில் இருந்து விடுபட்டு அரசாங்கம் எப்போது நேர்மையாகச் செயற்படப் போகின்றது என்பதே இப்போதைய முக்கிய கேள்வியாக எழுந்திருக்கின்றது.