மைத்திரிபால சிறிசேன- – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கத்துக்குள் இப்போது, கூட்டுப் பொறுப்பும் புரிந்துணர்வும் குறைந்து கொண்டு வருகின்றன என்பதை அண்மைய பல சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
கடந்தமாதம் புதுடெல்லி சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை, இந்திய ஊடகவியலாளர் ஒருவர் பேட்டி கண்டிருந்தார். அதில் அவர், ஜனாதிபதியும், பிரதமரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு சுமத்துவதும், பழிபோடுவதும், சுவாரஷ்யமான நாடகமாக இருக்கிறது என்றும் அதனை தாம் ரசித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஜனாதிபதியைக் கொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான விவகாரம் குறித்து, அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள், ஊடகங்களில் வெளியாகி பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திய பின்னர், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் இதனையே கூறியிருக்கிறார்.
அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் இருக்கின்றன என்பது பகிரங்கமாக வெளிவந்து விட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய விடயங்கள், வெளியே ஊடகங்களுக்குத் திரித்துக் கூறப்பட்டிருக்கிறது என்பதே ஜனாதிபதியின் தரப்பில் இப்போது கூறப்படும் குற்றச்சாட்டு.
ஒன்றுக்கு பல அமைச்சர்களிடம் இந்தச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது என்று தி ஹிந்து ஊடகவியலாளர் கூறியிருக்கிறார்.
ஆனால், குறிப்பிட்ட ஊடகவியலாளருக்கு நான்கு அமைச்சர்கள் இந்த தகவலைக் கூறியிருக்கின்றனர் என்றும் அவர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருக்கிறார்.
2015ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் பதவியேற்ற போது, முன்னைய ஆட்சியில் நடந்த ஊழல் மோசடிகளைக் கண்டுபிடிக்கப் போவதாக, ராஜ பக் ஷ குடும்பத்தினரால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை கண்டுபிடிக்கப் போவதாக, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது என்று கண்டுபிடிக்கப் போவதாக, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்டவர்களின் படுகொலைகள், மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்குக் காரணமானவர்களைக் கண்டறியப் போவதாக, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து கண்டுபிடிக்கப் போவதாக என்று- – “கண்டுபிடிக்கப்படும்” பட்டியலிட்டிருந்த விடயங்கள் ஏராளம்.
அவை ஒன்றும் கூடக் கண்டு பிடிக்கப்படாத நிலையில் தான், இப்போது, அமைச்சரவைக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகளைக் கண்டுபிடிக்கும் வேலையைத் தொடங்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது அரசாங்கம்.
அமைச்சரவைக்குள் நடந்த சம்பவங்களை வெளியே சொல்லக்கூடாது என்பது விதிமுறை. அரசாங்க இரகசியங்களை வெளியிடுவது குற்றமும் கூட. அதனால் தான், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் பதவியேற்கின்ற போது, இரகசிய காப்பு பிரமாணமும் செய்து கொள்வார்கள்.
அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்களை ஒரே குரலில் வெளிப்படுத்துவதற்காகத் தான், அமைச்சரவைப் பேச்சாளர் என ஒரு பதவி உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டு அரசாங்கம் என்பதால், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அவ்வப்போது வெளியிடுகின்ற தகவல்களே நிராகரிக்கப்படுகின்ற- சம்பவங்கள் நடக்கின்ற சூழலில், தான் இந்தச் சம்பவமும் நடந்திருக்கிறது.
அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கூறாத விடயங்களை, அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்பை மீறி நான்கு அமைச்சர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்று ஜனாதிபதிக்கு நெருக்கமான அமைச்சரான மகிந்த சமரசிங்க கூறியிருக்கிறார்.
ஜனாதிபதி கூறாத விடயங்களை இவர்கள் ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்களேயானால், அது நிச்சயம் பாரதூரமானது- உள்நோக்கம் கொண்டது என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை, ஒரு அமைச்சர் அல்ல, நான்கு அமைச்சர்கள், ஜனாதிபதி கூறியதாக ஒரு விடயத்தை, வெளிப்படுத்தும் போது, ஊடகங்கள் அதனைச் செய்தியாக்கியதில், பொய், புரட்டு, தீய நோக்கம் கொண்டது என்று புலம்புவதிலும் அர்த்தமில்லை.
அமைச்சரவையில் பேசப்பட்ட ஒரு விடயத்தை, அரசாங்கத்தில் உள்ள நான்கு அமைச்சர்கள், உறுதிப்படுத்தியிருந்த போது, எந்தவொரு ஊடகமும் அதனைத் தட்டிக்கழிக்காது.
அவ்வாறாயின், இங்கு உள்நோக்கத்துடன், தீய எண்ணத்துடன் நடந்து கொண்டது ஊடகங்களா அல்லது அரசாங்கத்துக்கு உள்ளேயே இருக்கின்ற அமைச்சர்களா என்ற கேள்வி வருகிறது.
ஒரு ஜனாதிபதி அல்லது பிரதமர் நம்பிக்கையான – விசுவாசமாகச் செயற்படும் அமைச்சரவையைக் கொண்டிருந்தால், இதுபோன்ற செய்திகள் வெளியே கசியாது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் நிலை அவ்வாறானது அல்ல.
இங்கே காலை வாருவதற்கும், இழுத்து விழுத்துவதற்கும் ஆளை ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐ.தே.க.வுக்கும் இடையில் மாத்திரமே பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தமில்லை. அமைச்சரவைக்கு வெளியே உள்ள புறச்சக்திகளும் கூட இதில் தலையீடு செய்கின்றன.
உதாரணத்துக்கு, ஐ.தே.க.வை விரட்டி விட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் கனவுடன் மஹிந்த அணி சுற்றிக் கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு இரட்டைக் கோபம், ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது, அடுத்தது ஐ.தே.க.வின் மீது.
முதலில் ஐ.தே.க.வை வீழ்த்தி விட்டு, அடுத்து ஜனாதிபதியைப் பார்த்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் கணிப்பு. ஐ.தே.க.வை வீழ்த்தி விட்டால், ஜனாதிபதியை கையாளுவது கடினமல்ல. அவருக்கு பரந்துபட்ட செல்வாக்கும் இல்லை. ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு அவ்வளவாக இடம்கொடுக்க மறுத்து வருவது தான், மஹிந்த அணிக்குக் கோபம்.
அதேவேளை, தாம் அரியணையில் ஏற்றி விட்ட ஜனாதிபதி, தமக்குத் துரோகம் செய்து விட்டு, மஹிந்தவுடன் சேர்ந்து இடைக்கால அரசாங்கத்தை அமைத்து விடுவாரோ என்பது ஐ.தே.க.வுக்கு உள்ள சந்தேகம்.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி,, ஜனாதிபதியை ஐ.தே.க.விடம் இருந்து பிரிக்கும் முயற்சிகளில் மகிந்த அணியும் தாராளமாகவே ஈடுபட்டிருக்கிறது.
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஒரு அஞ்சலோட்டத்தின் ஒரு பகுதியாகத் தான், இந்த அமைச்சரவை கூட்டத்தின் விபரங்கள் கசிந்த விவகாரத்தை பார்க்க வேண்டியுள்ளது.
அமைச்சரவையில் பேசப்படாத விடயங்கள் வெளியே கசியவிடப்பட்டிருக்கின்றது என்பது உண்மையானால், அதற்கு நிச்சயம் ஒரு உள்நோக்கம் இருந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. அது வெறுமனே கட்சி அரசியல் போட்டிக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் என்றே சந்தேகிக்க வேண்டும்.
இதனை, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் முயற்சி என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும், ராஜித சேனாரத்னவும் கூறியிருக்கின்றனர். அவ்வாறாயின், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைச் சீர்குலைப்பதன் மூலம், இலாபம் அடைய முனையும் தரப்பு எது என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் சிண்டு முடிந்து விடுவதன் மூலம், இலாபமடைய இரண்டு தரப்புகள் விரும்பக் கூடும். முதலாவது உள்ளூர் தரப்பான, அரசாங்கத்துக்கு வெளியெ இருக்கின்ற மஹிந்த ராஜபக் ஷ அணி.
கடந்தமாதம் இந்தியாவுக்கு சென்று வந்ததில் இருந்து மஹிந்த ராஜபக் ஷ உற்சாகமாக இருக்கிறார். அரசாங்கத்தைக் கவிழ்க்க இந்தியா உதவும் என்று மஹிந்த அணியைச் சேர்ந்தவர்கள் சிலர் பகிரங்கமாகவே கூறியிருந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் முரண்பாட்டை விரும்பும் இன்னொரு தரப்பு, இலங்கைக்கு வெளியே இருக்கின்ற ஒரு புறச்சக்தியாக இருக்கலாம்.
இந்தியாவுக்கு போட்டியாகச் செயற்படும், சீனாவாகவும் கூட இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ், ஹட்சன் நிறுவகத்தில், கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி உரையாற்றிய போது, சீனா தனது மூலோபாய நோக்கங்களுக்கு இடமளிப்பதாக வாக்குறுதி அளிக்கும், கட்சிகள், வேட்பாளர்களுக்கு நேரடியாக ஆதரவளித்து, சில நாடுகளின் அரசியலை சீர்குலைக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் சீனாவோ, இந்தியாவோ தொடர்புபட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் முன்வைக்கப்படாவிடினும், இரண்டு நாடுகளும் இலங்கையை பொதுவானதொரு போட்டிக் களமாக பயன்படுத்துகின்றன என்பதால், இத்தகைய சந்தேகங்கள் எழுவது இயல்பு.
அரசாங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பும், உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுக்கிடையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதையும் இங்கு அவதானிக்கலாம்.
அமைச்சரவைக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகள் யார், அவர்கள் யாருக்காக பணியாற்றுகின்றனர் என்பதை ஜனாதிபதியினால் கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
ஆனால் அரசாங்கத்துக்குள் விரிசல்கள் அதிகரித்து வருகின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.
ஜனாதிபதியை படுகொலை செய்யும் சதித்திட்டம் குறித்த விசாரணைகள், வேகமாக முன்னெடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதியின் ஆலோசகர், சிறிரால் லக்திலக கூறியிருக்கிறார். அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜனாதிபதி அதனையே கூறியிருந்தார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பாரதூரமான ஒரு விடயத்தில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்படவில்லை என்பது அவர்களின் தரப்பு குற்றச்சாட்டாக உள்ளது.
அதேவேளை, அலரி மாளிகையில் நடந்த இந்தியப் பெருங்கடல் மாநாட்டில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றிருந்த ஒரு சூழலில், ஜனாதிபதி மேடையில் ஏறி தனது ஆசனத்தில் அமராமல், திடீரென எழுந்து வெளியே சென்றதும், உள் முரண்பாடுகளின் வெளிப்பாடு தான்.
அரசாங்கத்துக்குள் புரிந்துணர்வும், கூட்டுப்பொறுப்பும் குறையத் தொடங்கியுள்ள இந்தச் சூழல், அரசாங்கத்தைக் கவிழ்க்க முனையும் புறச்சக்திகளுக்கு மிகவும் வாய்ப்பானதே. அதனைத் தான் அவர்கள் செய்யத் தொடங்கியிருக்கின்றனர் போலத் தெரிகிறது.