அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த – அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, றோ வுடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது என்று கூறியிருந்தார் என்கிறார். ஜனாதிபதியின் ஆலோசகர், றோ என்று கூறவில்லை இந்தியப் புலனாய்வுச் சேவை என்று கூறப்பட்டது என்று கூறுகிறார்.
ஆனால், ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையிலோ, இந்த சதித் திட்டத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்பின் ஈடுபாடு பற்றி ஜனாதிபதி எதையுமே கூறவில்லை என்று கூறப்பட்டிருந்தது
மூடிய அறைக்குள் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்ட ஒரு விடயம் இப்போது, இந்தியா- –இலங்கை இடையிலான உறவுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கூறியதாக வெளியாகிய செய்திகள் தான் இந்தச் சர்ச்சைக்குக் காரணம்.
தன்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்துக்குப் பின்னால், இந்தியாவின் றோ புலனாய்வு அமைப்பு இருந்தது என்று ஜனாதிபதி கூறினார் என இந்தியாவின் தி ஹிந்து நாளிதழும், இலங்கையின் சில ஊடகங்களும் அடுத்த நாள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதுபற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாமல் இருக்கலாம். உலகில் பல புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய முயற்சிகளை அந்த நாடுகளின் தலைவர்கள் அறிந்திருப்பதில்லை என்று பொதுப்படையாகவே ஜனாதிபதி கூறியதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்படிக் கூறவேயில்லை என்று மறுப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட மறுப்புக்களில் சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பதை கூர்ந்து நோக்க முடிகிறது.
அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி, இந்தியப் புலனாய்வு அமைப்பான றோ மீது அப்படிக் குற்றம்சாட்டவேயில்லை என்று கூறியிருந்தார். இந்த கொலைச் சதித் திட்டத்தை இந்தியாவுடன் தொடர்புபடுத்தி சிலர் குற்றம்சாட்டுகின்றனர் என்றே குறிப்பிட்டார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
அடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி எந்த இடத்திலும், ‘றோ்’ என்ற பதத்தைப் பாவிக்கவேயில்லை, என்றும், இந்தியப் புலனாய்வு சேவை என்றே குறிப்பிட்டார் எனவும், ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் ஷிரால் லக்திலக்க கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கூறியிருந்தார்.
அத்துடன், தலைவர்களைக் கொலை செய்யும் இரகசிய புலனாய்வு அமைப்புகளின் முயற்சிகள் தொடர்பாக, ஜனாதிபதி பொதுப்படையாகவே பேசினார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சதி முயற்சியில் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் எந்தவொரு ஈடுபாடு தொடர்பாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிடவில்லை என்றே கூறப்பட்டிருந்தது.
அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த – அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, றோ வுடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது என்று கூறியிருந்தார் என்கிறார். ஜனாதிபதியின் ஆலோசகர், றோ என்று கூறவில்லை இந்தியப் புலனாய்வுச் சேவை என்று கூறப்பட்டது என்று கூறுகிறார். ஆனால், ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையிலோ, இந்த சதித் திட்டத்தில் இந்திய புலனாய்வு அமைப்பின் ஈடுபாடு பற்றி ஜனாதிபதி எதையுமே கூறவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
றோ மீது அல்லது இந்திய புலனாய்வுப் பிரிவு மீது குற்றம்சாட்டப்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று கூறினாலும், இதனைச் சார்ந்த விவகாரம் அமைச்சரவையில் பேசப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகியிருக்கிறது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அண்மையில் நியூயோர்க்கில், வெளியிட்ட ஒரு கருத்தும் இப்படித் தான் சர்ச்சையில் முடிந்தது. போரின் இறுதிக்கட்டத்தில், புலிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பைத் தாக்கப் போகிறார்கள் என்று தகவல் கிடைத்ததும், அரச, இராணுவ உயர்மட்டத் தலைவர்கள் வெளிநாட்டுக்கு ஓடி விட்டார்கள், நான் தான் போரை நடத்தினேன் என்று அவர் கூறியிருந்தார். சரத் பொன்சேகா, மஹிந்த ராஜபக் ஷ, கோத்தாபய ராஜபக் ஷ எல்லோருமே அது பச்சைப் பொய் என்று நிராகரித்திருந்தனர்.
கிட்டத்தட்ட அதுபோன்ற ஒரு நிலை தான் இப்போதும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம், நியூயோர்க்கில் ஜனாதிபதி கூறிய கருத்துக்கு -வெளியே இருந்து சரத் பொன்சேகா, மஹிந்த ராஜபக் ஷ ,கோத்தாபய ராஜபக் ஷ போன்றவர்கள் மறுப்பு வெளியிட்டனர்.
ஆனால், இப்போது, நான் அப்படிக் கூறவில்லை என்று ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் மறுக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது,இது தான் அந்த வித்தியாசம்.
ஜனாதிபதி, அமைச்சரவைக் கூட்டத்தில் றோ பற்றியோ அல்லது இந்திய புலனாய்வு அமைப்பு பற்றியோ எதையேனும் கூறவில்லை என்று மறுத்திருந்தாலும், இதனைச் சார்ந்த விவகாரங்கள் குறித்து அங்கு பேசப்பட்டிருக்கிறது. இது இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தன்னை இந்தியப் புலனாய்வு அமைப்பே பதவியில் இருந்து அகற்றியது என்று மஹிந்த ராஜபக் ஷ பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் அப்போது இந்தியா எதையும் கூறவில்லை. அந்தக் கருத்தை நிராகரிக்கவோ ஏற்கவோ இல்லை. அதற்காக மஹிந்தவுக்கு அழுத்தங்கள் எதையும் கொடுத்ததாகவும் தெரியவில்லை.
ஆனால், மைத்திரிபால சிறிசேன இந்தக் கருத்தைக் கூறியதும், இந்தியா பதற்றமடைந்தது என்பதை விட கோபமடைந்தது என்பதே பொருத்தம்.
ஏனென்றால், ஒரு அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பதற்கு அப்பால், ஒரு நாட்டின் தலைவரைப் படுகொலை செய்யும் சதியுடன் தொடர்புடைய விவகாரம் பாரதூரமானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது வரும் நாட்களில் ஒரு தாக்குதல் முயற்சி நடந்தால் கூட அந்தப் பழியை இந்தியாவோ இந்திய புலனாய்வு அமைப்போ தான் சுமக்க நேரிடும்.
அதைவிட, ஒரு நாட்டின் தலைவரைக் கொல்வதற்கு இன்னொரு நாடு சதித் திட்டம் தீட்டுவதென்பது மிகவும் பாரதூரமான விடயம். அதுவும் இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு இது மிகப்பெரிய அவமானத்தையே தேடித் தரும்.
அதனால் தான் புதுடெல்லி பதற்றமும் பரபரப்பும் அடைந்தது.
காலையில் செய்திகள் பரவத் தொடங்கியதுமே, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சென்று பார்த்தார்.
இந்தியாவின் கரிசனையையும் கவலையையும் பகிர்ந்து கொண்டார்.
இந்தியா இந்த விவகாரத்தை மிகவும் பாரதூரமாக கருதுகிறது என்பதை அவர் வெளிப்படுத்திய பின்னர் தான் மைத்திரிபால சிறிசேனவுக்கே நிலைமையின் விபரீதம் புரிந்திருக்கிறது.
அவர் தனது நிலையை விபரித்து, விளக்கமளித்திருக்கிறார். அதன் பின்னர் தான், அரசாங்கத் தரப்பில் இருந்து அடுத்தடுத்து மறுப்புகள் வெளியாகத் தொடங்கின. கடைசியாக, மாலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் அழைத்துப் பேசினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இதன் போதும், தாம் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் மீது குற்றம்சாட்டவில்லை என்றும், ஊடக அறிக்கைகள் தீய நோக்கத்துடன் வெளியிடப்பட்டவை என்றும் கூறி விளக்கமளித்து தப்பித்திருந்தார்.
அந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரம் பற்றி எதுவுமே கூறப்படவில்லை.
எனினும், இந்தியப் பிரதமர் செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், றோ மீதான குற்றச்சாட்டு தொடர்பாக வெளியாகிய செய்திகள் பொய், என்றும், இருதரப்பு உறவுகளைச் சீர்குலைக்கும் தீய நோக்கம் கொண்டது என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன், இந்த அறிக்கையை பகிரங்கமாக நிராகரிக்க தாமும், அரசாங்கமும் எடுத்த நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுத்துக் கூறியதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
அதற்கு, பகிரங்கமாக இதனை தெளிவுபடுத்தி மறுப்பதற்கு அவசரமாக எடுத்த நடவடிக்கைகளுக்காக இந்தியப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியத் தூதுவருடனான சந்திப்பு, இந்தியப் பிரதமருடன் நடத்திய தொலைபேசி உரையாடல், மறுப்பு அறிக்கைகள் எல்லாமே இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும் என்று கருதுவதற்கில்லை.
ஏனென்றால், ஜனாதிபதியைக் கொல்லும் சதித் திட்டம் தொடர்பாக வெளியான தகவல்களை அடுத்து, ஒரு இந்தியர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் றோவின் உறுப்பினர் என்று விமல் வீரவன்ச சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
அதேவேளை, அவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியானதுமே, குறித்த நபர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று இந்தியத் தூதரகம் கூறியிருந்தது. இந்தத் தகவலும் சந்தேகங்களைக் கிளப்பியது.
கைது செய்யப்பட்ட இந்தியர் அப்பாவியாக – றோவுடன் தொடர்புபடாதவர் என்று உறுதி செய்யப்படும் வரை, இந்த விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தவே செய்யும்.
ஒருவேளை அவருக்கான தொடர்புகள் உறுதி செய்யப்பட்டால் அங்கேயும் வில்லங்கம் ஏற்படும்.
ஏனென்றால், இந்தியப் பிரதமருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும், வழக்கமாக புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய முயற்சிகளை நாடுகளின் தலைவர்கள் அறிவதில்லை என்று பொதுப்படையாக ஜனாதிபதி கூறியதாக ஒரு தகவல் உள்ளது.
ஆனாலும், கைது செய்யப்பட்ட இந்தியருக்கு சதித்திட்டத்தில் தொடர்பு இருப்பது உறுதியானால், அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று இந்தியத் தூதரகம் அவசரமாக சான்று கொடுக்க முயன்றது ஏன் என்ற கேள்வியும் எழும்.
எனவே, இந்த விவகாரம் இப்போதைக்கு ஓயப் போவதில்லை. இது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட ஒரு வலிய காயமாகவே இருக்கும்.
றோவின் தலையீடுகள் பற்றிய செய்திகளின் உண்மைத் தன்மைகளுக்கு அப்பால், இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான நல்லுறவுகளுக்கு அப்பால், புலனாய்வுப் பிரிவுகள் செயற்பட முனைகின்றனவா என்ற சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக் கட்டத்தை நோக்கி நகரும் சூழலில், அரசாங்கமும் கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் இன்னும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
எதுஎவ்வாறாயினும், ஒரு விடயம் மாத்திரம் இன்னமும் குடைச்சலாகவே இருக்கிறது. ஜனாதிபதியை கொல்ல ஏன் சதித் திட்டம் தீட்ட வேண்டும் என்பதே அது.
இந்தியாவுக்கு தண்ணி காட்டியதற்காக மஹிந்த ராஜபக் ஷவைக் கூட, தேர்தலின் மூலம் அகற்றுவதற்குத் தான் முயற்சிக்கப்பட்டது. அவரளவுக்கு மைத்திரிபால சிறிசேன ஒன்றும் பலமான தலைவராக இல்லாத போது, ஏன், கொலைச் சதித்திட்டம் தீட்ட வேண்டும்?
இந்தக் கேள்விக்குச் சரியான விடையைத் தேடாமல், கொலைச் சதித் திட்டம் பற்றிய விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படும் போலத் தெரியவில்லை.