மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்ததைக் கூட சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கும். அதனை அவர் பாராளுமன்றத்தின் ஊடாக செய்திருந்தால், யாரும் திருப்பிக் கேள்வி கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. மஹிந்தவைப் பிரதமராக்கி விட்டு மறுநாள் பாராளுமன்றத்தையும், 21 நாட்களுக்கு முடக்கினார். இதுதான் மைத்திரிபால சிறிசேனவின் இராஜதந்திரம், அரசியல் அனுபவம், எல்லாவற்றையுமே தலைகீழாக புரட்டிப் போட்டது
மஹிந்த ராஜபக் ஷவை ஏற்றுக் கொள்வதா- ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக் கொள்வதா என்ற குழப்பம் கடந்த 26ஆம் திகதிக்குப் பின்னர் வெளிநாடுகளுக்கு ஏற்பட்டது.
ஆனால், கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை அல்லது வழிமுறை சரியானதா என்ற சந்தேகத்தையே பெரும்பாலும் கொண்டிருந்தன.
பிரதமராகப் பதவியேற்க வருமாறு மைத்திரிபால சிறிசேன அழைத்தார், நான் பதவியேற்றேன் என்று, என்றோ ஒரு நாள் மஹிந்த ராஜபக் ஷ தன்னை நியாயப்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், மைத்திரிபால சிறிசேனவினால் அவ்வாறு செய்யமுடியாது. எனினும், அவர் வேறொரு கதையையும், கூறத் தயங்கமாட்டார், ஏனென்றால், கடந்த மூன்றரை ஆண்டுகளில் அவர் முன்னுக்குப் பின் முரணாக கதைகளை விடுவதில், தனது ஆற்றலை நிரூபித்திருக்கிறார்.
சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து விட்டு அரசியலமைப்புக்கு அமையவே நடவடிக்கை எடுத்தேன் என்று மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற கதைகளை நம்புவதற்கு சர்வதேச சமூகம் தயாராக இருக்கவில்லை. அதனை தெளிவாக கூறியதுடன், இறுக்கமான நிலையில் நின்றதால் தான், அவர் முன்கூட்டியே பாராளுமன்றத்தைக் கூட்டும் நிலை ஏற்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறும் மைத்திரிபால சிறிசேன, அதனை உரிய வகையில் கையாளவில்லை என்பதே, ஜனாதிபதி மீதான அவநம்பிக்கைக்கு முக்கியமான காரணம்.
முதல் நடவடிக்கையாக, மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்ததைக் கூட சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கும். அதனை அவர் பாராளுமன்றத்தின் ஊடாக செய்திருந்தால், யாரும் திருப்பிக் கேள்வி கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை.
மஹிந்தவைப் பிரதமராக்கி விட்டு மறுநாள் பாராளுமன்றத்தையும், 21 நாட்களுக்கு முடக்கினார். இதுதான் மைத்திரிபால சிறிசேனவின் இராஜதந்திரம், அரசியல் அனுபவம், எல்லாவற்றையுமே தலைகீழாக புரட்டிப் போட்டது.
இது அவரது திட்டம் அல்ல என்பதும், மஹிந்த தரப்பின் திட்டம் தான் என்பதும் அனைவருக்கும் தெரியும். எவ்வாறாயினும், துரதிர்ஷ்டவசமாக, அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருப்பவர், மைத்திரிபால சிறிசேன தான்.
பாராளுமன்றத்தை முடக்கியதை, நியாயப்படுத்தும் வகையில் மஹிந்த தரப்பினர் கூறிய, ஏற்றுக்கொள்ள முடியாத நியாயங்களும், அதனை அவர்கள் வெளிப்படுத்திய முறையும், அவர்கள் இன்னமும் அப்படியே தான் இருக்கிறார்கள் – மாறவில்லை என்பதை உணர்த்தியது.
அதனால் தான் சர்வதேச அழுத்தங்களை ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டிய நிலைக்குள்ளானார் மைத்திரிபால சிறிசேன. அவர் பதவியேற்ற மூன்றரை ஆண்டுகளில், இதுபோன்றதொரு அழுத்தத்தை, நெருக்கடியை வெளியுலகில் இருந்து சந்தித்ததேயில்லை.
பதவியேற்ற புதிதில், அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் கூட இடம்பிடித்தவர். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது, அவருடன் படம் எடுத்துக் கொள்வதற்கு முக்கிய வெளிநாட்டுத் தலைவர்கள் முண்டியடித்தனர் என்ற கதையும் அப்போது அவரது அமைச்சர்களால் கூறப்பட்டது.
ஏன், கூட்டமைப்புக் கூட அவரை நெல்சன் மண்டேலா என்றது. மார்ட்டின் லூதர் கிங்கின் மறு அவதாரம் என்றது.
அப்படிப்பட்ட – சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் பெரியதொரு நம்பிக்கையைப் பெற்றிருந்த மைத்திரிபால சிறிசேன, ஒரே நாளில் தனது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் தொலைத்து விட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மஹிந்த ராஜபக் ஷ பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க உடனடியாகவே அவர் இடமளித்திருந்தால், இந்தளவுக்கு நெருக்கடி அவருக்கோ நாட்டுக்கோ ஏற்பட்டிருக்காது.
எனினும், அவ்வாறு பாராளுமன்றத்தைக் கூட்டியிருந்தால், மஹிந்த ராஜபக் ஷவினால், பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க முடியாமல் போயிருக்கும். அதனைத் தெரிந்து கொண்டே குதிரை பேரத்துக்காகவும், ஆட்களை விலைக்கு வாங்குவதற்காகவும், ஒரு கால இடைவெளியை ஏற்படுத்திக் கொடுத்தார்.
நல்லாட்சி, ஊழலற்ற தூய்மையான நிர்வாகம், என்பன போன்ற விடயங்களை வலியுறுத்தி வந்த மைத்திரிபால சிறிசேன, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மோசமான நிலைக்குத் துணை போயிருக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் மோசடிகள், முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டியிருந்தார் ஜனாதிபதி. அதற்காகவே அந்த அரசாங்கத்தை நீக்கும் முடிவை எடுத்ததாகவும் கூறியிருந்தார். அந்த அரசாங்கத்துக்கு மூன்றரை ஆண்டுகள் அவர் தான் துணையாக இருந்தவர்.
அதுபோலத் தான், முன்னைய ஆட்சிக்காலத்தில் மஹிந்த ராஜபக் ஷவினர் பெரியளவில் நாட்டைச் சூறையாடியதாகவும், வெளிநாடுகளில் பணத்தைக் குவித்து வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியவர் மைத்திரிபால சிறிசேன. அந்த அரசாங்கத்திலும் அவர் பங்காளியாக இருந்திருக்கிறார். இப்போது யாரைக் கொள்ளைக் கூட்டம் என்றும், சர்வாதிகாரிகள் என்றும் வர்ணித்தாரோ, அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார். இங்கும் அவர் துணை போயிருக்கிறார்.
அதுமாத்திரமன்றி, பாராளுமன்றத்தை முடக்கி வைத்து, நாட்டின் அரசியல் கலாசாரத்தை மோசமான நிலைக்குள் தள்ளி, குதிரை பேரத்துக்கும், பாராளுமன்றத்தை விலைக்கு வாங்கும் அரசியலுக்கும் அவர் ஆதரவளித்திருக்கிறார். ஆக, மைத்திரிபால சிறிசேன என்னதான் நியாயங்களையும், காரணங்களையும் முன்வைத்தாலும், தன்னைத் தூய்மையானவராக – ‘கிளீன்’ அரசியல் செய்பவராக காட்டிக் கொண்டாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் – அவர் நேர்மையற்ற அரசியலுக்கும், ஊழலுக்கும் மோசடிகளுக்கும் துணை போயிருக்கிறார் என்பதே உண்மை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை சர்வதேச அரங்கில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுதான், அவர் மீதான சர்வதேச அழுத்தங்கள் ஒன்று குவிவதற்கும் காரணம்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கான சூழலை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்டது அமெரிக்கா. அந்தக் காலகட்டத்தில், ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவராக இருந்த சமந்தா பவர், மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் இலங்கையில் ஜனநாயகத்தை தலைகீழாக புரட்டி விட்டது என்று கருத்து வெளியிட்டிருக்கிறார்.
பொறுப்புக்கூறல், ஜனநாயகம் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு, போர்க்குற்றங்களுக்கும், காணாமல் போனமைகளுக்கும் காரணமானவரை அவர் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார் என்று அவர் விசனத்தை வெளியிட்டிருக்கிறார்.
அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டதும், அமெரிக்கா தான் முதலில் வாய் திறந்தது. எதுநடந்தாலும், அது அரசியலமைப்புக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்று முதலில் கூறியது. அதற்குப் பின்னர், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அதனையே வழிமொழிந்தன.
ஆனால் எந்த நாடுமே, மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஒரு சம்பிரதாயத்துக்காவது வாழ்த்துக் கூறவில்லை. இது மஹிந்த ராஜபக் ஷவுக்கு மாத்திரமன்றி, அவரை இந்தப் பதவிக்குக் கொண்டு வந்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கூட, அவமானத்தையே ஏற்படுத்தியது.
சீன ஜனாதிபதியின், வாழ்த்துச் செய்தியைக் கொடுத்து, சீனத் தூதுவர் மட்டும், வாழ்த்துக் கூறினார். அதற்குப் பின்னர் தான் வேறு வழியின்றி இந்தியா வாயைத் திறந்தது. இந்தியாவும் கிட்டத்தட்ட அரசியலமைப்புக்கு அமைவாகச் செயற்பட வேண்டும் என்றே கூறியது.
அதற்குப் பின்னர், ஐ.நா அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன இரண்டாவது சுற்று அறிக்கையை வெளியிட்டன. நாடாளுமன்றத்தைக் கூட்டி ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று கோரின.
அந்த அழுத்தங்களின் பின்னர் தான், ஜனாதிபதி, வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து தன்னை நியாயப்படுத்தினார். அரசியலமைப்பில் ஆங்கிலத்தில் இல்லாத – சிங்கள மொழி பெயர்ப்பில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே ஆட்சியைக் கவிழ்த்ததாக அவர் கூறியிருக்கிறார். இலங்கையில் இரண்டு அரசியல் சட்டங்கள் உள்ளன அது மொழிக்கு மொழி வேறுபடுகிறது என்ற உண்மையை மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்ட தருணம் அது. ஒரு நாட்டுக்கு இரண்டு அரசியலமைப்புகள் என்பது ஆச்சரியமானது.
உலகில் வேறெங்கும் இதுபோன்றதொரு அரசியலமைப்பும் குழப்பமும் இருந்திருக்குமா என்பது ஐயமே. ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு விதமான அரசியலமைப்பு இருக்கும் இலங்கை தான், பழம்பெரும் ஜனநாயக நாடு என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
இங்கு ஆச்சரியமான ஒரு விடயம் என்னவென்றால், உலகில் எந்தவொரு நாடுமே, மைத்திரிபால சிறிசேன செய்தது சரியான நடவடிக்கையே, என்று வாய் திறக்கவில்லை. இந்த இடத்தில் தான், அவர் உலக அரங்கில் இருந்து தனிமைப்பட்டுப் போயிருந்தார்.
சர்வதேச சமூகமே தனக்குப் பின்னால் இருக்கிறது என்று கூறிய அவரை, இன்று சர்வதேசம் எப்படிப் பார்க்கிறது என்பது அவருக்கே நன்றாகத் தெரியும். அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதற்கு, அவரைப் பற்றிய இந்த மாற்றத்துக்குக் காரணம், பூகோள அரசியலோ, அதிகாரப் போட்டியோ அல்ல. ஆட்சிக்கவிழ்ப்பை அவர், அரசியலமைப்புக்கு அமைவாக மேற்கொள்ளவில்லை. அதற்குப் பின்னரும், ஜனநாயகப் பண்புகளை மதிக்கவில்லை. அது தான். அந்தக் காரணம்.
அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்குமாறும், அதற்கமைய நடக்குமாறும், ஜனநாயக மாண்புகளைப் பாதுகாக்குமாறும், சர்வதேசம் திரும்பத் திரும்ப அறிக்கைகளை வெளியிட்டு நினைவுபடுத்தும் நிலைக்கு, ஒரே நாளில் நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. சர்வதேச சமூகத்துடனான அவரது உறவுகளில் ஒரு பெரிய விரிசல்- அல்லது ஓட்டை விழுந்திருக்கிறது, இதனை அவர் எப்படிச் சரி செய்து கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை. ஏனென்றால், அவர் விரும்பியோ விரும்பாமலோ எடுத்த நடவடிக்கை, அவரைப் பொறிக்குள் தள்ளியிருக்கிறது.
இனி அவர் சூழ்நிலைக் கைதியாகவே காலத்தைக் கடத்த வேண்டியிருக்கும் என்பதால், சர்வதேச சமூகத்தின் கருத்துக்களை அவரால், அவ்வளவு இலகுவாக மதிக்க முடியாது.
பாராளுமன்றத்தைக் கூட்டுமாறும், ஜனநாயக மாண்புகளைக் காக்குமாறும், அமெரிக்கா அழுத்தங்களைக் கொடுத்தபோது. அதற்கு டலஸ் அழகப்பெரும போன்ற ராஜபக் ஷ சகபாடிகளிடம் இருந்து வந்திருக்கின்ற விமர்சனங்கள், 2015இற்கு முற்பட்ட காலத்தையே வெளிப்படுத்தியது.
இத்தகையவர்களை அருகில் வைத்துக் கொண்டு மைத்திரிபால சிறிசேனவினால், சர்வதேச சமூகத்துடன் ஏற்பட்டுள்ள தற்போதைய விரிசலை ஒட்ட வைக்க முடியாது.
இந்த ஆட்சிமாற்றச் சூதாட்டம் ஒரு சர்வதேச அரசியல் சதியாகவே பார்க்கப்படும் நிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கு, இனி மேற்குலகின் கதவுகள் அவ்வளவு சுலபமாகத் திறக்கும் என்று நம்பி விட முடியாது.
சர்வதேச சமூகத்தின் பேராதரவுடன், ஆட்சிக்கு வந்த அவரால், அந்த ஆதரவுத் தளத்துடன் வெளியேபோகும் நிலை இருக்கப் போவதில்லை.
எப்போதுமே தன்னை ஒரு தியாகி போலக்காட்டிக் கொள்வதில், அக்கறை கொண்ட சிறிசேன, உண்மையில் மஹிந்த ராஜபக் ஷவுக்காக தனது, புகழையும், மதிப்பையும் தியாகம் செய்யும் நிலை வரும் என்று ஒருபோதும் எண்ணியிருக்கமாட்டார்.