அவதந்திரமான  (சூழ்ச்சி) வழிகளைப் பின்பற்றினால் அந்தரித்து அலைய வேண்டிய நிலைமையே ஏற்படும்.

‘திருகோணமலை பன்குளத்தில் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி, 11 பொலிஸார் கொல்லப்பட்டனர். மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர்.

வவுனியா, ஓமந்தையில் படையினரின் எறிகணை வீச்சில், புலிகளில் எட்டுப் பேர் மரணமடைந்துள்ளனர்’. இவை, பத்து ஆண்டுகளுக்கு முற்பட்ட அன்றாடச் செய்திகள் ஆகும்.

ஆனால், நாடாளுமன்றத்தில் மஹிந்த அணியினரின் தாக்குதலில் 11 பொலிஸார் காயமடைந்தனர் என்பது, இன்றைய செய்தி ஆகும்.

கலைகளை வளர்க்கும் கலா மன்றங்கள், வாசிப்பு, பொது வேலைகளை ஊக்குவிக்கும் சனசமூக நிலையங்கள், கிராமங்களை அபிவிருத்தி செய்யும் கிராம அபிவிருத்தி மன்றங்கள் எனப் பல அமைப்புகள் நாட்டில் இயங்குகின்றன. ஆனால் அந்த நாட்டையே, ஒட்டுமொத்தமாக ஆளுகின்ற மன்றமே, நாடாளுமன்றம் ஆகும்.   

இலங்கைத் திருநாட்டின் நாடாளுமன்றம், குத்துவெட்டுகளும், கூச்சல் குழப்பங்களும், அடிதடிகளும், அமளிதுமளிகளும் நிரம்பி வழிகின்ற கூடாரமாக உருமாற்றம் கண்டுள்ளது.

ஒரு கோவிலுக்குச் சமமாகப் பார்க்கப்பட வேண்டிய நாடாளுமன்றம், இன்று நகைப்புக்குரிய இடமாகப் பார்க்கப்படுகின்றது.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அத்திவாரத்தின் மீதே, ஒரு கட்டடம் உறுதியாக, நீண்ட காலம் நிலைத்து நிற்கும். அது போலவே, பல்வேறு சட்டங்களை அடித்தளமாகக் கொண்டு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தேசமே அழகானதாகும்.

இந்த நோக்கத்தில், மக்களுக்காக சட்டங்களை இயற்றுவதும், அது நடைமுறைப்படுத்தப்படுவதை ஒட்டுமொத்தமாகக் கண்காணிப்பதே  நாடாளுமன்றத்தின் முதன்மைப் பணியாகும்.  அது, இன்று நாடாளுமன்றம் மக்களால் கண்காணிக்கப்பட வேண்டியதாகியுள்ளது.   

ஆசனத்தைப் பிடித்தல், பிடித்த ஆசனத்தைத் தக்கவைத்தல், எந்த விலையைக் கொடுத்தேனும், தனது இறுதி மூச்சு வரை அதில் நிலைத்திருத்தல் ஆகியன போன்ற எண்ணக்கருக்களே நமது நாட்டின், அரசியலின் பொதுவான ஆணிவேராக உள்ளது.

இந்நிலையில், புதிய பிரதமர் தெரிவில், ஜனாதிபதியிடம் இருந்து வௌிப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்  மக்களால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைப் பிரதமராக்குவதற்கான முயற்சிகளாகவே காணப்பட்டன; காணப்படுகின்றன.

ஜனாதிபதியால், பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்ட மஹிந்த, உடனடியாக நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்த நிகழ்வுகளால் ரணில் உள்ளூற அழுதாலும், அலரி மாளிகையைத் தொடர்ந்து அலங்கரித்தார்; அலங்கரிக்கின்றார்.

ஆனாலும், நவம்பர் 14, 16ஆம் திகதிகளில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில், மஹிந்த அணியினரால் பெரும்பான்மையை நிலை நாட்ட முடியவில்லை. இந்நிலையில் மஹிந்த, அவரசப்பட்டு விட்டார்; அல்லது, மஹிந்தவை அவசரப்படுத்தி விட்டார்கள்.

625.500.560.350.160.300.053.800.900.160.90மஹிந்த மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவி வகிக்க வேண்டும் என, முன்கூட்டியே தேர்தலை நடத்தி, 2015இல் மைத்திரியிடம் தோல்வி கண்டார்.

அதேபோல, இரண்டாவது தடவையாகப் பிரதமராகப் பதவி வகிக்க வேண்டும் என அவசரப்பட்டு, நாட்டின் அரசியலைச் சாக்கடையாக்கியுள்ளார்.

இந்நிலையில், மஹிந்த இம்முறை சற்று அடக்கி வாசித்திருப்பின், அடுத்து நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தென்பட்டிருந்தன.

ஏனெனில், அதிகரித்த விலையேற்றங்கள், பெருகும் ஊழல்கள், வேலைவாய்ப்பு இன்மைகள் போன்ற காரணங்களால், நல்லாட்சியில் மக்கள் வெறுப்புக் கொண்டிருந்தனர்.

இது தொடர்பில், ஐனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபைக் காட்டிலும், ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மீதே, மக்கள் கூடுதல் வெறுப்பைக் காட்டினர். இது கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதிபலித்தது.

இது இவ்வாறிருக்க, வரவிருந்த(?) புதிய அரசமைப்பை, ரணில் தலைமையிலான அரசாங்கம், தமிழ் மக்களுக்கு வழங்க உள்ள ‘ஈழம்’ என்பதாகவே, பெரும்பான்மையின மக்களுக்கு, ‘மொட்டு அணி’ மொழி பெயர்ப்புச் செய்திருந்தது.

பெரும் சிரமங்களுக்கு மத்தியில், படையினரால் உயிர்த் தியாகம் புரியப்பட்டுப் பெறப்பட்ட சுதந்திரம், மீண்டும் பறிபோகப் போகின்றது என்பதாகவே கூறப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இந்தப் பிரசாரம் எடுபட்டது; வெற்றி கண்டது. அதனால், அக்காலப் பகுதியிலேயே, புதிதாக மலர்ந்த மொட்டு (பொதுஜன பெரமுன), பெரு வெற்றியை அள்ளிச் சுருட்டிக் கொண்டது.

இந்நிலையில், தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவு பெற்று, பொதுத்தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில், மொட்டு அணி பெரும் ஆரவாரங்களுடன் களம் இறங்கியிருக்கும். அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தின் தோல்விகளையும் தனது வெற்றிகளாக மாற்றியிருக்கும்.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் புறந்தள்ளி, குறிப்பிடும்படியான வாக்குகளைப் பெற, வாய்ப்புண்டு. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோடு கரம் கோர்த்தால் மேலும் அதிகப்படியான, சிங்கள மக்களது வாக்குகளைப் பெற்றிருக்கலாம்.

மலையக மக்களது நீண்ட காலக் கோரிக்கையான 1,000 ரூபாய், அடிப்படைச் சம்பளம் பெற்றுத் தருவதாக வாக்குக் கொடுத்து, மலையக வாக்குகளையும் பெற முயற்சிக்கலாம்.

ஏனெனில், நல்லாட்சியில் இக்கோரிக்கை நீண்ட காலமாகவே நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றப்படும் சந்தர்ப்பங்களும் மங்கலாகவே உள்ளன.

ஆகவே, மஹிந்தவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கலாம் என, மலையக மக்களும் சிந்தித்திருக்க வாய்ப்புண்டு.

இவ்வாறாக, மஹிந்த வெற்றியை அடையலாம்; அண்மிக்கலாம். இந்த வழிகளில் முயற்சிகளை எடுத்தும் ஆட்சியை அமைக்க முடியாது போனாலும், அவரது தோல்வி கூட, கௌரவமாகவே நோக்கப்படும்.

ஆனால், ஒக்ரோபர் 26இல் மஹிந்த, குறுக்கு வழி மூலம் பி​ரதமராக வந்ததும், அதைத் தக்கவைத்துக்கொள்ள எடுத்த முனைப்புகளும் ஜனநாயகத்துக்கு விரோதமானதும், பாவப்பட்டதும் வெறுக்கத்தக்கதுமான செயற்பாடாகவே மக்களால் நோக்கப்படுகின்றது.   

ஒக்டோபர் 26, ஐக்கிய தேசியக் கட்சியால் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக, மாபெரும் மக்கள் போராட்டம் கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

‘ரணில் வீழ்த்தப்படப் போகின்றார் என, நான் இங்கு வரவில்லை. ஜனநாயகம் வீழ்த்தப்படக் கூடாது என்பதற்காகவே இங்கு வந்தேன்’ என்ற சுலோகங்களைத் தாங்கிய பதாகைகளுடன் பேரணில் கலந்துகொண்ட மக்கள் காணப்பட்டனர்.

ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவுக் கூட்டத்துக்கு வந்தவர்கள் அனைவரும், ஐ. தே. கட்சியைப் பாதுகாக்க வந்தவர்கள் அல்லர்.

மாறாக, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வந்தவர்கள். இது தவிர, சிறுபான்மைக் கட்சிகள் கூட, மஹிந்த தோல்வி அடைய வேண்டும் என்பதற்காக, மஹிந்தவை எதிர்க்கவில்லை. ஜனநாயகம் தோல்வி அடையக் கூடாது என்பதற்காகவே அவரை எதிர்க்கின்றனர்.

மிகுதியாக உள்ள நல்லாட்சியில், பிரதமர் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்க, ஜனாதிபதி மைத்திரியால் முடியாது என்றே, ஒக்ரோபர் 26இல் புதிய பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் ஒன்று நினைக்க, தெய்வம் இன்னொன்று நினைத்தது மாதிரி நிலைமைகள், நடப்புகள் ஆகிவிட்டன.   

அதாவது, பெரும்பான்மையை நிரூபிக்கத் தவிறியதால், மஹிந்த பிரதமர் பதவியைத் தொடர்ந்து தக்க வைக்கப் படாதபாடு படும் நிலை இன்றுவரை காணப்படுகிறது.

அது போல, கட்சியின் தலைமையைச் சிறப்பாக வழி நடத்தத் தவறுகின்றார் போன்ற இன்னோரன்ன குற்றச்சாட்டுகள் காரணமாக, ரணில் மீண்டும் பிரதமர் பதவியை அடைவது கடினம்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பும் பிரதமர் பதவியும் சஜித் பிரேமதாஸவை நோக்கிச் செல்லும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

ரணிலைப் பழிவாங்கும் ஜனாதிபதியின் திட்டத்தில், ஒரு கல்லில் இரு மாங்காய்கள், சஜித்தை நோக்கி விழப் போகின்றன. ஏந்துவதற்கு அவரும் தயார் போலவே கள(மன)நிலைகள் உள்ளன.

இரண்டு தசாப்தத்துக்கு மேற்பட்ட காலமாக, ரணில் கட்சித் தலைமைப் பதவியை இறுகப் பற்றிப் பிடித்திருந்தார். தலை(மை)க்கு வந்த பல சவால்களைத் தலைப்பாகையை மட்டும் கொடுத்துக் காப்பாற்றி இருந்தார்.

இம்முறை அவரிடம் தலைப்பாகை இல்லை; தலையைத்தான் கொடுக்க வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில், ரணில் முட்டுக்கட்டைகளைப் போட முடியாது. ரணில் முட்டுக்கட்டைகள் போட எத்தனிப்பின், கட்சி ஆதரவாளர்களால் மூக்குடைபட வேண்டிய நிலை ஏற்படலாம்.

இந்நிலையில், பதவியை அடைவதற்கும் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் முயற்சிக்கும் வழிகள் அறத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அவதந்திரமான வழிகளைப் பின்பற்றினால் அந்தரித்து அலைய வேண்டிய நிலைமையே ஏற்படும்.   

– காரை துர்க்கா

Share.
Leave A Reply

Exit mobile version