2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய தேசியக் கட்சியும்) இணைந்து உருவாக்கிய “அரசியல் உறவுப் பாலம்” (”நல்லாட்சி அரசு”) உடைந்து நொறுங்கி விட்டது. இந்தப் பாலத்தை நம்பி மேற்கொள்ளப்பட்ட அத்தனை பயணங்களும் இப்பொழுது தடைப்பட்டுள்ளன. இதற்கு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்குப் பொறுப்பாக இருந்த அனைவரும் பொறுப்பாளிகள். அவர்களில் யாரும் இதிலிருந்து தப்ப முடியாது. அப்படித் தப்பினாலும் வரலாற்றுப் பழி அவர்களைச் சூழும்.
2015 இன் அதிசயம், கனவு, வியப்பு, நம்பிக்கை, எதிர்பார்ப்புகள் எல்லாமே நான்காண்டுகளுள் முற்றாகச் சிதைக்கப்பட்டுவிட்டன. (தானாகச் சிதையவில்லை. பொறுப்பின்மைகளாலும் அரசியல் போட்டிகளாலும் சிதைக்கப்பட்டன. இது மக்களுக்கும் நாட்டுக்கும் இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமாகும்)
“ஆற்றைக் கடக்கும் வரையில்தான் அண்ணன் தம்பி உறவு. அப்புறம் அதெல்லாம் கிடையாது” என்ற மாதிரி ராஜபக்ஸக்களை அதிகாரத்திலிருந்து இறக்கும்வரையில்தான் ஐ.தே.க – சு.க கூட்டு. அதற்குப் பிறகு மைத்திரி வேறு. ரணில் வேறு. அரசியல் கூட்டு வேறு என்றாகி விட்டது.
இப்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. பனிப்போர் முடிவடைந்து பகிரங்கப்போரே தொடங்கி விட்டது.
இதற்கு இரண்டு எளிய உதாரணங்களை இங்கே கூறலாம். பனிப்போரின் முடிவில் ரணிலைத் தோற்கடிக்கும் நோக்கில் மகிந்த ராஜபக்ஸவை 2018 ஒக்ரோபரில் பிரதமராக்கினார் மைத்திரி. அதை ரணில் முறியடித்ததுடன் இப்பொழுது 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்புகளுக்கு மைத்திரியைப் பொறுப்பாளியாக்கித் தோற்கடிப்பதற்குப் பாராளுமன்றத் தெரிவுக்குழு என்ற பொறியை உருவாக்கியுள்ளார்.
இதன்மூலம் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரசிங்கவினால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் (மைத்திரிபால சிறிசேனவின்) அதிகாரம் (அஸ்திரங்கள்) குறைப்பட்டிருக்கிறது.
இதுகூட ராஜபக்ஸக்கள் உண்டாக்கிய அதிருப்தியைச் சரியாகப் பயன்படுத்திய ரணிலின் கைங்கரியமே.
தனக்கான அரசியற் சூழ்ச்சிக்காகச் சிறிசேனவைத் தலைவராக்கி (ஜனாதிபதியாக்கி) அவருடைய சம்மதத்தோடு 19 ஆவது திருத்தத்தைச் செய்தார் ரணில். இதன்மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அவர் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டை மீற முடியாத நிலைக்குள்ளாக்கப்பட்டார்.
இதன்மூலம் மகிந்த ராஜபக்ஸவைத் தோற்கடித்ததோடு மைத்திரியையும் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார் ரணில் விக்கிரமசிங்க.
எனினும் ஜனாதிபதிக்கிருக்கும் அதிகாரங்களைப்பற்றிய அதீத நம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்ட சிறிசேனவின் அரசியல் தீர்மானங்கள் (Political decisions) அவரைப் பெரிதும் பலவீனப்படுத்தியுள்ளன.
இதற்கிடையில் ஈஸ்டரில் குண்டுகள் வெடித்து மேலும் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டிருக்கின்றன. இந்தக் குண்டு வெடிப்புகள், அரசியல் இழுபறிகளின் விளைச்சல்கள், அரசியல் பொறுப்பின்மைகளின் விளைவுகள் தானென்பதை பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னால் அளிக்கப்படும் சாட்சியங்கள் நிரூபிக்கின்றன.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னால் பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரிகள், செயலர்கள் தெரிவிக்கும் உண்மைகளையும் பின்னணிக் காட்சிகளையும் கண்டு நாடு உறைந்து போயிருக்கிறது.
ஆனால் இது மட்டுமல்ல உண்மைகள். இதற்கப்பாலும் உண்மைகளுண்டு. அதாவது இந்த மாபெரும் அனர்த்தத்தில் ரணில் தரப்புக்கும் பொறுப்புண்டு.
இதனால்தான் தெரிவுக்குழுவின் முன்னே யாரும் சாட்சியமளிக்கத் தேவையில்லை. அதற்கு இடமில்லை என்று ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.
உலைவாயை மூடலாம். ஊர்வாயை மூடுவது எப்படி?
அரசியல் போட்டிகளின் விளைவு பொறுப்பின்மைகளை உருவாக்கியிருக்கிறது. அந்தப் பொறுப்பின்மைகளுக்குப் பொறுப்பாளியாக்கும் போட்டி மறுபடியும் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படுகிறது. இது எவ்வளவு கேவலமானது? இந்த நாட்டுக்கு இது எவ்வளவு இழுக்கானது. இதைக்குறித்து மக்களுடைய அக்கறைகள் என்ன? அபிப்பிராயம் என்ன? நிலைப்பாடு என்ன?
அப்படியென்றால் அடுத்தாக என்ன நடக்கும்?
எதுவுமே தெரியாத நிலையில் நாட்டு மக்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த அரசியல் போட்டிகளின் விளைவாக உயிர்ப்பலிகளும் பெரிய அளவிலான பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
இதற்கு யார் பொறுப்பேற்பது? யார் பரிகாரம் காண்பது? யார் நீதி வழங்குவது?
இதற்கெல்லாம் காரணமான குற்றங்களையும் தவறுகளையும் மறைப்பதோ ஆளை ஆள் குற்றம் சாட்டுவதோ அல்லது யாராவது ஒருத்தரின் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்புவதோ சரியானதல்ல. அது அரசியல் பண்புமல்ல. தலைமைத்துவத்துக்குரியதுமல்ல.
ஆனால் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அரசியல் காட்சிகள் அனைத்தும் நாட்டைக் கேடு சூழ்ந்திருப்பதாகவே உணர்த்துகின்றன.
ரத்ன தேரர் என்ற ஒரு பௌத்த பிக்குவினால் இரண்டு மூன்று நாட்களிலேயே ஒரு சமூகத்தின் (முஸ்லிம்களின்) அரசியல் உரிமைகளைப் பலவீனப்படுத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறானதொரு இதற்கு முன்னெப்போதும் நிகழ்ந்ததில்லை. முஸ்லிம்களின் முழு ஆதரவுடன், அவர்களுடைய முழு நம்பிக்கையில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசில்தான் முஸ்லிம்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் அமைச்சர்களின் பதவி துறப்பென்பது இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கமே. சரி, பிழைகளுக்கு அப்பால் அத்தகையதொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கக் கூடாது. அதை ஏற்படுத்திய அரசுக்கும் சிங்களப் பெருந்தேசிய வாதத்துக்கும் சிங்கள பௌத்தத்துக்கும் இதுவொரு இழுக்கே.
சிங்கள மக்கள் இதையிட்டு எதையும் பேசாதிருக்கலாம். ஆனால், இதைக்குறித்து அவர்கள் சிந்திக்காமலிருக்க முடியாது.
தவறுகளை உரிய நேரத்தில் சுட்டிக்காட்டத் தவறியதன் விளைவுகளைத் தொடர்ச்சியாக தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் வரலாற்றுப்பாடமாகக் கொண்டிருக்கின்றன.
அந்த மௌனங்கள் உண்டாக்கிய பேரழிவுகளும் பின்னடைவுகளும் சாதாரணமானதல்ல. அவற்றிலிருந்து படிப்பினைகளைக் கொள்ள வேண்டும். ஆனால், அதற்கான கரிசனைகள் இல்லை என்பது பெருந்துக்கமே.
அப்படியென்றால் நல்லாட்சி என்பது தனியே சிங்கள மக்களின் நலன்களுக்கான ஒன்றா? அதுவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவருக்கு நெருக்கமான தரப்புகளுக்குமான ஒரு ஏற்படா?
இப்போது நல்லாட்சி என்ற சொல்லை யாருமே சொல்வதில்லை. நல்லாட்சியைப் பிரகடனப்படுத்தியவர்களே அந்தச் சொல்லைக் கண்டு வெட்கப்படுகிறார்கள். அச்சமடைகிறார்கள். அல்லது ஒழிந்துகொள்கிறார்கள்.
நல்லாட்சியின் உருவாக்கத்தில் பங்கேற்றிருந்த விக்டர் ஐவன், கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தொடக்கம் சந்திரிகா குமாரதுங்க வரையான அணியினர் இதைக்குறித்தெல்லாம் என்ன சொல்கிறார்கள்? கனத்த மௌனத்தின் பின்னே ஓடி மறைந்தனரா?
2015 இல் ஐ.தே.கவும் சு.கவும் இணைந்து நல்லாட்சி அரசை உருவாக்கியிருந்தபோது பலருக்கும் அதுவொரு நல்லாச்சரியமாக இருந்தது. புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையின் அதிசயம் என்ற வரலாற்றுப் பெருமிதம் கூடப் பலருக்கேற்பட்டிருந்தது.
அத்தனையும் பொய்யாகிற்று. அதுவொரு பொய்த்தோற்றம். மாயக்கனவு என்றாகிற்று.
அடிப்படையில் மாற்றங்களில்லாத, குணாம்ச வேறுபாடுகளற்ற இரண்டு அதிகாரத்தரப்புகளின் உறவு தற்காலிகமானதாகவே இருக்கும் என்பதொன்றும் புதியதோ ரகசியமானதோ அல்ல.
ஏற்கனவே இந்த அரசியல் உறவைப்பற்றியும் நல்லாட்சியைப்பற்றியும் சனங்களிடமும் வரலாற்றறிவு உள்ளவர்களிடத்திலும் கேள்விகளிருந்தன.
இன்று அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
“சாயம் வெளுத்திட்டுது” என்று சொல்வார்களே. அதைப்போல நீலம் – பச்சை என்ற இரண்டு நிறங்களின் கலவை – கூட்டுச் சாயம் – வெளுத்து விட்டது.
கடந்த நான்காண்டுகளில் எத்தகைய அரசியல் பெறுமதிகளையும் உருவாக்க முடியாத நிலையில் நல்லாட்சி கழிந்திருக்கிறது. – கவிழ்ந்திருக்கிறது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் தொடங்கி, 2018 ஒக்டோபர் ஆட்சிக் கவிழ்ப்பு, அரசியலமைப்புத்திருத்தத்தைக் காலவரையற்றுப் பின்தள்ளியமை, யுத்தத்திற்குப் பிந்திய நிலைமாறுகாலகட்ட நீதிச்செயற்பாடுகளைத் தவிர்த்தமை, பொறுப்புக்கூறலிலிருந்து பின்வாங்கியமை, மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்தத் தவறியமை, ஈஸ்டரின் போது நடந்த குண்டு வெடிப்புகள், அதனாலேற்பட்ட பெரும் உயிரிழப்புகள், பொருளாதார முடக்கம், முஸ்லிம் அமைச்சர்களின் பதவி துறப்பு, தெரிவுக்குழுவின் முன்னான பாதுகாப்புத்தரப்பின் அம்பலப்படுத்தல்கள் என எல்லாமே எதிர்மறையாகவே நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்குள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆள் தேடும் படலத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகளின் முயற்சிகள்.
பாராளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்ற தீவிர யோசனையில் அரசியல் கட்சிகள்.
எரிகிற வீட்டில் பிடுங்கியது மிச்சம் என்ற கணக்கில் அரசியல் குழப்பங்களும் பொருளாதார நெருக்கடியும் மிகுந்திருக்கும் தருணம் பார்த்து, இலங்கையைத் தன்னுடைய பிடிக்குள் கொண்டு வரும் நோக்கிலான இந்தியப்பிரதமரின் இலங்கை விஜயம்…
இப்படியே நாட்டில் நற்சகுனங்கள் என்று ஏதுமில்லை.
எல்லாமே நாட்டுக்கும் சனங்களுக்கும் எதிரான கிரக நிலையாகவே தென்படுகின்றன.
இப்படியான சரிவு ஏன் ஏற்பட்டது? இதற்கெல்லாம் யார் காரணம்?
முதற்காரணம் மக்களே.
இங்கே நாடு என்பதை விட அவரவர் தத்தம் சமூகம் என்ற அடையாளத்தின் நிமித்தமே சிந்திக்கின்றனர். இவ்வாறு சமூக ரீதியாகக் குறுகிச் சிந்திக்கும் வரையில் நாட்டைப் பாதுகாக்கவோ மேம்படுத்தவோ முடியாது. வெளிச்சக்திகளுக்குத் தம்மையும் நாட்டையும் பலவீனப்படுத்தவே முடியும்.
நாடு என்பது நாம் வாழ்வதற்கான அடித்தளமாகும். அந்த அடித்தளம் சிதையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும்.
சுற்றுச் சூழலினாலும் அரசியலினாலும் பண்பாட்டினாலும் மக்களின் வாழ்க்கையினாலும் அறிவியலினாலும் அந்த அடித்தளம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படிப் பாதுகாக்கப்பட்டாலே நாடு பாதுகாக்கப்படும்.
இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்தவை.
இதற்கு உயரிய சிந்தனை தேவை. இலங்கையில் இத்தகைய சிந்தனையாளர்களை அரசியலில் உள்வாங்கும் முறைமையும் பண்பாடும் இல்லாது போய் விட்டது. பதிலாக அரசியலுக்குச் சிந்தனையாளர்கள் சேவை செய்ய வேண்டும். கட்டுப்பட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது.
இதுவே எதிர்மறையான ஒன்றுதான்.
இப்படி எதிர்மறையான விசயங்களை வைத்துதான் நாட்டையும் ஆட்சியையும் கொண்டு செல்ல முற்படுகிறார்கள் எல்லோரும். சனங்களும் இதற்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இப்பொழுது கூட மாற்று அரசியலை, மாற்று அரசியலாளர்களை, மாற்றுப் பண்பாட்டை, மாற்றுச் சிந்தனையைப்பற்றிப் பேசினால் மெல்ல ஒவ்வொருவரும் விலகிச் சென்று விடுகிறார்கள். அல்லது அவ்வாறானவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
பதிலாக பழகிய வழித்தடத்திலேயே மந்தைகளாகச் சென்று விட விரும்புகிறார்கள் எல்லோரும். அதிலேயே சுகம் காண்கிறார்கள். நம்பிக்கை கொள்கிறார்கள்.
இது தவறு என்று எத்தனை தடவை எந்தப் பெரிய மேதைகள் சொன்னாலும் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொள்வதற்கு யாருமில்லை. எனவேதான் அழகிய இலங்கைத்தீவு அழிவுத்தீவாகத் தொடர்ந்திருக்கிறது.
இப்போது நடந்து கொண்டிருப்பதெல்லாம் மன்னிக்கவே முடியாத அரசியல் தவறுகள், அரசியல் சீரழிவுகள் என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால் இதை மறுக்கவோ மீறிச்செல்லவோ யாருமே இல்லை என்பதே துயரம்.
இதில் வலது – இடது என்ற பேதங்களில்லை. புரட்சியாளர்கள், எதிர்ப்புரட்சியாளர்கள் என்ற விலகல்கள், வேறுபாடுகள் எதுவுமில்லை. எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
எனவேதான் சொல்கிறேன், தமிழ், சிங்களம், முஸ்லிம், மலையகம் என்ற அடையாள வேறுபாடுகளில் நம்மைச் சிக்க வைத்துக் கொண்டு நாட்டை அழிக்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என.
இதைக்கூட எத்தனைபேர் பொருட்படுத்தக் கூடும்!?