இலங்கையிலுள்ள தௌஹீத் ஜமாஅத் அமைப்பிலுள்ள சிலர் சட்டத்தை கையில் எடுத்தார்கள் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.

ஏனைய மதங்களை போல முஸ்லிம்களிடையேயும் சில பிரிவுகள் இருப்பதாக கூறிய அவர் ஸஹ்ரான் போன்ற வேறு நபர்கள் கிடையாது என்றும் கூறினார்.

21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணை நேற்று முன்தினம் நான்காவது நாளாக பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.

இதில் சாட்சியமளிக்கையிலேயே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி : சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை வழங்கியதாக கூறப்படுகிறது?

பதில் : 2012நவம்பர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டல் பேச்சு தொடர்பில் முறையிட்டோம். ஹலால் தொடர்பிலே முதலில் பிரச்சினை தொடங்கியது.கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் கடிதம் மூலம் அறிவித்தோம். குர்ஆனுக்கு எதிரான விமர்சனம் குறித்தும் எழுதினோம்.பொதுபல சேனாதான் இவற்றை செய்தது.

2014இல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை அளுத்கமையில் இடம்பெற்றது. ஐ.எஸ் இற்கு எதிராக பேசிய சிலரில் நானும் ஒருவன். 2014இல் முதலில் பேசினேன். ஐ.எஸ்சுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

கேள்வி: அளுத்கமை சம்பவத்திற்கும் ஐ.எஸ்சுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

பதில்: அளுத்கமை தாக்குதலின் பின்னரே ஐ.எஸ் கருத்துணர்வு இலங்கையில் பரவ ஆரம்பித்தது. மஹரகமவில் பொதுபலசேனா அமைப்பு வெறுப்பூட்டும் பேச்சுக்களை முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பியது.

பின்னர் அளுத்கம சம்பவம் நடந்தது. சில இளைஞர்கள் ஐ.எஸ் குறித்து பேச ஆரம்பித்தார்கள். ஆதில் என்பவரே ஐ.எஸ்ஸிற்கு பின்புலமாக இருந்தார்.

இவர் என்னை காபிர் என்றார். அண்மையில் ஆதில் கைதானார்.தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றன.சகிக்க முடியாத விதத்தில் சம்பவங்கள் நடந்தன. இறைவனை கீழ்த்தரமாக விமர்சித்தார்கள்.

இஸ்லாத்திற்கு எதிராக பேசுவோரை நாம் வெறுக்கவில்லை.

2012இலிருந்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வந்தோம்.

கேள்வி: ஆதில் என்பவர் உங்களை காபிர் என விமர்சித்தார்.அவர் யார் என்று தெரிந்திருந்தீரா?

பதில்: இல்லை. எனக்கு எதிரான சமூக வலைத்தள விமர்சனங்களை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கினோம்.

கேள்வி: ஏப்ரல் 21சம்பவம் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்.

பதில் : 2014ஆம் ஆண்டு முதன் முதலில் ஐ.எஸ்சுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை பகிரங்கமாக அறிவித்தோம்.

2015இல் நிலாம் என்பவர் ஐ.எஸ்ஸில் இணைய சிரியா சென்றார்.ஐ.எஸ்சுக்கு ஆதரவு வழங்கிய ஒருவர் இறந்ததார். இதன் போது எமக்கும் ஐ.எஸ்சுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை நூல் ஒன்றை வெளியிட்டு அறிவித்தோம்.

கேள்வி: கொலை செய்வது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா?

பதில்: இல்லை.

இஸ்லாத்துக்கும் சஹ்ரானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பாதுகாப்புத்துறையில் இவர் பற்றி கூறியிருந்தோம்.

12நிறுவனங்கள் ஒன்றிணைந்து தான் ஐ.எஸ்ஸிற்கு எதிரான நூலை வெளியிட்டோம். அதில் அ.இ. தௌஹீத் ஜமாஅத்தும் கையெழுத்திட்டது.

கேள்வி: அந்த சமயம் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு இருந்ததா?.

பதில்: இல்லை.தௌஹீத் ஜமாத் இந்தியாவுடன் தொடர்புபட்டது.

பரகஹதெனியவில் தான் முதலில் இந்த அமைப்பு ஆரம்பமானது. பின்னர் பல குழுக்களாக பிரிந்தார்கள்.

கேள்வி : பிரச்சினை எவ்வாறு ஏற்பட்டது.பலர் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்?

பதில் : ஐ.எஸ் தொடர்பில் முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டார்கள். மனதை மாற்ற ஒருவிடயம் போதும்.

கேள்வி : எத்தனை பேர் தீவிரவாத ​போக்கில் உள்ளனர்.

பதில்: ஒரு சிலரே உள்ளனர். 500க்கும் குறைவானவர்களே இருப்பர். அதில் கூகுல் பயங்கரவாதிகளும் அடங்குவர், சிலர் சிரியாவிற்கு சென்று இங்கு வர சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது.

சஹ்ரான் குழு என்னை பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தி விமர்சித்தார்கள். ஞானசார தேரருடன் என்னை தொடர்புபடுத்தினார்கள்.

கேள்வி: இது தொடர்பில் முறையிட்டீர்களா?

பதில்: சஹ்ரான் தொடர்பான இறுவெட்டை ஜனவரியில் பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கினோம்.

கேள்வி: இறுவெட்டில் என்ன காணப்படுகிறது?.

பதில்: சகவாழ்வு பற்றி நாம் பேசுகையில் அவர் அதற்கு எதிராக பேசினார். அவரின் இரு உரைகள் அதிலுள்ளன.

கேள்வி: எப்பொழுது ஆற்றிய உரை இவை?

பதில்: திகன தாக்குதலுக்குப் பின்னரே இந்த உரைகள் நிகழ்த்தப்பட்டன. முன்னணி இஸ்லாமிய அறிஞர்களை கொல்லுமாறும் அவர் கூறியிருந்தார்.

கேள்வி: சஹ்ரான் குழு திகன சம்பவத்தை வைத்து முஸ்லிம் இளைஞர்களை தூண்டியதா?

பதில்: உலமா சபையின் 130கிளைகள் எமக்கிருக்கின்றன. 2017இருந்து சஹ்ரான் தொடர்பில் செயற்பட்டோம். சஹ்ரான் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரினோம்.

அவரின் கொள்கைகள் இஸ்லாத்துடன் தொடர்புடையவையல்ல. இவ்வாறான சம்பவம் நடக்குமென கனவிலும் நினைக்கவில்லை. பயங்கரவாத தாக்குதலையும் எதிர்பார்க்கவில்லை.

இலங்கையிலுள்ள தௌஹீத் ஜமாஅத் அமைப்பிலுள்ள சிலர் சட்டத்தை கையில் எடுத்தார்கள்.

கேள்வி: சஹ்ரானை போன்று வேறு நபர்கள் உள்ளனரா.

பதில் : இல்லை.

கேள்வி : அப்துல் ராஸிக் பற்றி என்ன தெரியும்?

பதில்: அவர் எம்முடன் சேர்ந்து செயற்படுபவரல்ல. அவர் பி.ஜே.வழியில் செல்பவர்.

கேள்வி: ஐ.எஸ் தொடர்புள்ளவர்கள் பற்றி 2014/2015இல் அறிந்திருந்தீர்களா?.

பதில்: ஆம்.

கேள்வி: ஐ.எஸ். அமெரிக்காவின் தயாரிப்பு தானே.

பதில்: ஐ.எஸ்சுடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு கிடையாது.

கேள்வி: தௌஹீத் அமைப்புகள் பற்றி என்ன கூறுகிறீர்கள் ?

பதில்: பௌத்த பீடங்கள் போன்று இங்கும் பிரிவுகள் இருக்கின்றன. கிறிஸ்தவர் மத்தியிலும் இவ்வாறு பிரிவுகள் உள்ளன.குர்ஆன், ஹதீஸை விளங்கிக் கொள்வதில் உள்ள முரண்பாடுகளை வைத்து இந்த குழுக்களை அடையாளங் காணலாம்.

கேள்வி: இளைஞர்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரவுவதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?.

பதில்: குர்ஆன் வசனத்தை வைத்திருந்ததற்காக நோன்பில் இளைஞர்கள் கைதாகியுள்ளனர். 2000பேர் வரை இவ்வாறு கைது செய்யப்பட்டார்கள். வாள் வைத்திருந்ததற்காக கைதாகியுள்ளனர்.இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் போது அடிப்படைவாத உணர்வுகள் வளர வாய்ப்புள்ளது.இந்த நிலைமையை மாற்ற வேண்டும்.

கேள்வி: 2000அல்ல 600பேர் வரையே உள்ளனர்.அதில் பலர் விடுதலையாகியுள்ளனர். சந்தேக நபர்களாகவே பலர் கைதாகியுள்ளனர்.சொற்பமான பயங்கரவாதிகளே கைதாகியுள்ளனர்.

பதில்: நாம் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து செயற்படுகிறோம். ஒவ்வொரு பள்ளிவாசல்களினூடாகவும் இளைஞர்களை அடையாளம் செய்து சகவாழ்வு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கேள்வி: பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை தொடர நேரிடும். இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த முடியாது. ஒரு பிரச்சினை நடந்தால் முழுமையாக விசாரணை நடத்துவது உகந்தது.

பதில்: எம்முடன் உள்ள 7000மௌலவி மார்களும் அரசின் செயற்பாடுகளுக்கு உதவ தயாராக இருக்கிறோம்.

நாம் சகிப்புத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் தான் போதிக்கிறோம்.எமது அமைப்பு சவூதி அரேபியா சார்ந்ததல்ல.

Share.
Leave A Reply

Exit mobile version