தனக்குத்தானே பேசிக்கொள்வது நல்லது – உளவியல் மருத்துவம் சொல்லும் உண்மை! உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்கிறீர்களா… நீங்கள் அறிவாற்றல் கொண்டவர்… – உளவியல் மருத்துவம் சொல்லும் உண்மை!
`என்ன வாழ்க்கைடா இது…’ என்று தனக்குத்தானே புலம்பிக்கொள்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். `உனக்கென்ன, நீ அழகன்டா…’ என்று தன்னைத்தானே பாராட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
இப்படி தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பதை யாரேனும் கவனித்தால், `மனநோயாளியா இருப்பானோ… நேத்துவரை நல்லாத்தான இருந்தான்…’ என்று வருத்தப்படுவார்கள்.
ஆனால், இதுபோல உங்களோடு நீங்களே பேசிக்கொள்வது மன நோயல்ல… ஆரோக்கியமான மனநிலை… அதிக அறிவாற்றல் கொண்ட செயல்பாடு’ என்கிறது சமீபத்திய ஆய்வு.
`உட்கார்ந்து பேசினால் எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்’ என்பார்கள். `பேசவேண்டியது மற்றவர்களுடன் அல்ல, உங்களுடன்…’ என்று அடித்துச்சொல்கிறது அந்த ஆய்வு.
தனக்குத்தானே பேசிக்கொள்பவர்களைப் பற்றி, பிரிட்டனின் வடக்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், தனக்குத்தானே பேசிக்கொள்பவர்கள் சவாலான பணிகளையும் எளிதாகச் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
பேசுதல்
“இரண்டு பேருக்கு இடையே நடக்கும் உரையாடலை ஆங்கிலத்தில் `டயலாக்’ (Dialogue) என்போம். ஒருவர் தனக்குத்தானே பேசிக்கொள்வதை `மோனோலாக்’ (Monologue) என்று சொல்வோம்.
உளவியலாளர்கள் இதை `செல்ஃப் டாக்’ (Self-talk) அல்லது `தனக்குத்தானே பேசுதல்’ (Talking to Yourself) என்பார்கள்.
உண்மையில் இது மனநோயின் அறிகுறி கிடையாது; நல்ல மனநிலைதான்…” என்று உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்தும் சொல்கிறார். உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்
“மனம் பல்வேறு எண்ணங்களாலும், நினைவுகளாலும் நிறைந்தது. அது ஓய்வாக இருக்கும்போதுகூட எதையாவது சிந்தித்துக்கொண்டிருக்கும். நம்மையும் அறியாமல் மனதின் உள்ளே ஓர் உரையாடல் நடந்துகொண்டே இருக்கும். ஆனால், இதைப் பலரும் கவனித்திருக்க மாட்டோம்.
இது எப்போதெல்லாம் நடக்கிறது?
முக்கியமாக, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்று தோன்றும்போதுதான் நடக்கும். உதாரணமாக நடைப்பயிற்சியின்போதோ, குளியலறையிலோ, தனியாக ஒரு அறையில் இருக்கும்போதோ இப்படிப் பேசிக்கொள்வார்கள்.
பெரும்பாலும் அந்தப் பேச்சானது அன்றாடப் பிரச்னைகள், முடிவு எடுக்க முடியாத விஷயங்கள், நிறைவேறாத ஆசைகள், கனவுகள் பற்றித்தான் இருக்கும்.
`விடு, இப்ப என்ன நடந்துபோச்சு, பாத்துக்கலாம்’ என்று சிலர் மோசமான மன உளைச்சலின்போது அவர்களுக்குள்ளே சமாதானம் சொல்லிக்கொள்வது இத்தகைய சூழலில்தான்.
இப்படி, மனத்துக்குள்ளே பேசுவதையும் வாய்விட்டுப் பேசுவதையும் இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று பாசிட்டிவ்… நேர்மறையான எண்ணம்.
மற்றொன்று நெகட்டிவ்… எதிர்மறையான எண்ணம். அந்தந்த சூழலைப் பொறுத்தும் நபரைப் பொறுத்தும் இந்த எண்ணங்கள் வெளிப்படும். அவை பாசிட்டிவ்வாக இருந்தால் உற்சாகத்தைத் தரும். நெகட்டிவ்வாக இருக்கும்பட்சத்தில் நம்முடைய செயல்பாட்டைப் பாதிக்கும்.
தனியே பேசிக்கொள்ளுதல் உளவியல் மருத்துவம்
`செல்ஃப் டாக்’ என்பது எந்த அளவுக்கு பாசிட்டிவ்வாக இருக்கிறதோ அந்தளவுக்கு நல்லது. உதாரணமாக, ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதுபற்றிப் பேசினால் அது நல்லது. மாறாக, `ஏன் நம்மோட வாழ்க்கையில மட்டும் இப்படி நடக்குது’ என்றோ `அவ்வளவுதான்… வாழ்க்கை முடிஞ்சுபோச்சு’ என்பதுபோன்றோ எதிர்மறையாகப் பேசுவதோ நல்லதல்ல.
மனதின் உள்ளே நடக்கும் இத்தகைய உரையாடல்களை ஸ்கேன் செய்து பார்த்தால், பெரும்பாலும் எதிர்மறையான எண்ணங்களே மேலோங்கியிருக்கும். அவற்றைக் கவனித்து தவிர்த்தால் திறம்படச் செயல்பட முடியும்.
Chitra_arvind
நமக்குள் பேசிக்கொள்வதால் என்ன பயன்?
நமக்குள்ளேயே பேசிக்கொள்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். உங்கள் பிரச்னையை நீங்கள் மற்றவர்களிடம் சொல்லவில்லை என்பதால், ரகசியம் பாதுகாக்கப்படுகிறது.
நேர்மறையாகப் பேசுவதால் நம்பிக்கை அதிகரிக்கும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, `நான் நன்றாக ஓட்டுவேன்…’, `என்னால் வாகனம் ஓட்ட முடியும்…’ என்று நாம் சொல்லிக்கொண்டால் நிச்சயம் தன்னம்பிக்கையை அதிகரித்துச் சிறப்பாக வாகனம் ஓட்டத் தொடங்குவோம்.
மனம் பதற்றத்தில் இருக்கும்போது இப்படிச் சொன்னால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆனால் அதை மனபூர்வமாகச் சொல்லவேண்டும்.
துயரமான நிகழ்வுகளை வாய்விட்டுப் பேசும்போது மன பாரம் குறையும். இதை மனநல சிகிச்சைக்கும் பயன்படுத்துவோம்.
சிலர், கடந்த காலத்தில் நடந்த துயரமான நிகழ்வுகளை மறக்க நினைப்பார்கள். அவர்களிடம் `என்னுடைய பழைய வாழ்க்கையிலிருந்து என்னை விடுவிக்க முடிவு செய்துவிட்டேன்’ என்ற வாக்கியத்தை 50 முறை குறிப்பிட்ட காலம்வரை சொல்லச் சொல்வோம். அப்படிச் சொல்லும்போது, அவர்களிடம் மாற்றம் ஏற்படும்.
நம்முடைய பிரச்னை பற்றித் திரும்பத் திரும்பப் பேசுவதால், ஆழ்மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் விஷயங்களை வெளியே கொண்டுவர முடியும்.
அதனால் அந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு மற்றொரு வழிமுறையும் இருக்கிறது.
அதாவது, மனதில் சிக்கிக்கொண்டு இருக்கும் விஷயத்தை வெளியே கொண்டுவர, அவர்களது பிரச்னை என்ன என்பதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதச் சொல்வோம். இதன்மூலம் அவர்களது பிரச்னைக்கு முடிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
`ஐ லவ் மைசெல்ஃப்’ என்று கண்ணாடி முன்னாடி நின்றுகொண்டு, 10, 20 முறை வாய்விட்டு சொல்லச் சொல்வோம். ஆனால் தொடக்கத்தில், `நீ எதுக்கும் லாயக்கற்றவன்’ என்பதுபோன்ற நெகட்டிவ்வான விஷயங்களைப் பற்றி மனம் பேசத்தொடங்கும். தொடர்ச்சியாகப் பயிற்சி செய்யும்போது நம்மைப்பற்றிய நல்லெண்ணங்கள் வெளிப்படும்.
மனதுக்குள்ளேயே பேசுவது, வாய்விட்டுப் பேசுவது, கண்ணாடிமுன் நின்றபடி பேசுவது, ஒரு பேப்பரில் எழுதி வைப்பது என எல்லா வழிமுறைகளிலும் நிச்சயம் சில பலன்கள் கிடைக்கும்.
ஆனால் இவையெல்லாம் மனதைக் கட்டுக்குள் வைக்கும் ஒரு பயிற்சி முறை மட்டுமே. அது உங்களது கட்டுப்பாட்டை மீறினால் மனநலப் பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.
உதாரணமாக, பொது இடங்களில் உரத்த குரலில் பேசுவது போன்றோ, மாயக்குரல் காதில் கேட்பது போன்ற உணர்வோ இருந்தால் மனநல மருத்துவரை அணுகுவது நல்லது” என்கிறார் சித்ரா அரவிந்த்.