இலங்கை இராணுவத்தின் சேவைகள் பற்றி புகழ் பாடும் விதமான “அயலவன்”  என்னும் சஞ்சிகைகள் முல்லைத்தீவு கல்வி வலயத்தின் சில பாடசாலைகளில் விநியோகிக்கப்பட்டுள்ளது .

 

ஆசிரியர்கள் காலை பாடசாலைக்கு வருகைதந்தபோது பாடசாலை நுழைவாயிலில் காவல் பணியிலிருந்த இராணுவத்தினரால்  மேற்படி சஞ்சிகைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது . இராணுவத்தினர் தமிழர்களுக்கு செய்யும் உதவித்திட்டங்களை மையப்படுத்தும் விதமாக குறித்த சஞ்சிகையின் செய்திகள் அமைந்திருந்ததோடு இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வடக்கில்  இராணுவமயமாக்கலை நியாயப்படுத்தும் விதமாக இந்த சஞ்சிகைகள் படையினரால் விநியோகிக்கப்பட்டுவருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் .

இது தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கருத்துத்தெரிவிக்கையில்,

கடந்த 2019.05.06 அன்று எமது பாடசாலை இரண்டாம் தவணைக்காக மீளத்தொடங்கிய போது படையினரின் பிரசன்னத்தினால் பாடசாலை மாணவர்கள் வழமைக்கு மாறாகவே காணப்பட்டிருந்தனர். பாடசாலை மாணவி ஒருவர் மயங்கியும் வீழ்ந்திருந்தார்.

பின்னர் ஒரு நாள் பாடசாலை வகுப்பறை வரை ஆயுதம் தாங்கிய நிலையில் இராணுவச்சிப்பாய் ஒருவர் மாணவர்களோடு உரையாடும் வகையில் உள் நுழைந்திருந்தார். உடனடியாக அவரை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றினோம்.

militarization__1_

ஒருசில நாள்கள் ஏழு மணி தாண்டியும் இராணுவத்தினர் பாடசாலை வளாகத்துள் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர். பொறுப்பதிகாரிக்கு முறைப்பட்டு மாணவர் வருகை தரும் நேரங்களில் ஆயுதங்களோடு இராணுவத்தினர் பாடசாலையுள் தரிப்பது பொருத்தமற்றது என்று கூறினோம்.

இந்நிலையில் இன்று பாடசாலைக்கு வரும் ஆசிரியர்களிடம் இவ்வாறு சஞ்சிகைகள் கொடுக்கப்படுகின்றன.

வெளிப்படையாக அவர்களின் இவ்வாறான எல்லை மீறல்களை எதிர்க்கமுடியவில்லை எனவும் பிள்ளைகளுக்கு கற்பிக்கவென காலை வருகை தரும் நிலையில் இவ்வாறான செயல்கள் மனதை குலைப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version