ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தியதாக இரானிய பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு ஒரு தெளிவான விவரத்தை சொல்லும் என நம்புகிறேன் என்று ஐஆர்ஜிசி கமாண்டர் மஜ் -ஜென் ஹுசைன் சலாமி கூறியதாக இரான் நாட்டு பத்திரிகை கூறுகிறது.
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் நடுவில் தற்போது இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் எம் க்யூ -9 என்ற ஆளில்லா விமானத்தை டேங்கர்கள் மீது உள்ள கவனத்தை திருப்ப சுட்டு வீழ்த்த முயற்சி செய்ததாக அமெரிக்கா இரான் மீது குற்றம் சாட்டியது.
அதற்கு முன்பே அந்த ஆளில்லா விமானம் கப்பலில் தீ பற்றியதை கவனித்து விட்டது என கூறினார் கடற்படை அதிகாரி.
கடந்த வாரம் வேறு ஒரு எம் க்யூ -9 என்ற ஆளில்லா விமானத்தை ஹூதி கிளர்ச்சி குழு சுட்டு வீழ்த்தியது.
ஹூதி குழுவின் சக்திக்கு மேலானது இந்த தாக்குதல். இதற்கு இரானே பயிற்சி அளித்திருக்க வேண்டும் என்று எங்களுக்கு தோன்றுகிறது என அமெரிக்க ராணுவம் கூறியிருந்தது. ஆனால் இரான் இதனை மறுத்தது.
திங்கள்கிழமையன்று கூடுதலாக ஆயிரம் படைவீரர்களை இரானிய படைகளுக்கு எதிராக அந்த பகுதியில் நிறுத்திவைப்பதாக அமெரிக்க பாதுகாப்பு துறை கூறியிருந்தது.
கடந்த வியாழக்கிழமையன்று அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தங்களுடைய எல்லை பகுதியில் வந்ததால்தான் சுட்டு வீழ்த்தினோம் என இரானிய ராணுவம் கூறியதாக இரானிய பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இரானிய உயர் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் புதனன்று இரான் எந்தவித எல்லைமீறலையும் பொறுக்காது என் எச்சரித்தார்.
எங்களுடைய வான்வெளி எல்லை தான் எச்சரிக்கை கோடு ,அதை மீறினால் இரான் அதற்கு பதிலடி கொடுக்கும் என டாஸ்னிம் செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார் அலி ஷம்கஹ்னி.
ஈரான், வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது.
வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என கருதப்பட்ட அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுக்கிறது.
ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை.
இதில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவரது கருத்து. இதன் காரணமாக கடந்த ஆண்டு திடீரென இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது.
அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை பின்னுக்கு செல்ல வைத்தது.
இதுவரை இல்லாத வகையில் ஈரான் நாணய மதிப்பு சரிவை சந்தித்தது. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் பாதித்தன.
ஈரானை புதிய ஒப்பந்தம் போட வைக்க வேண்டும், அந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் மட்டுமின்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று அமெரிக்கா கணக்கு போடுகிறது.
ஈரானும் மிரட்டல் விடுத்து வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் தடையை ஏற்படுத்தி விடுவோம் என்கிறது. இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு பெரும் தடைச்சுவராக அமைந்து விடும்.
இந்த நிலையில், ஈரான் மீது கண் வைத்து அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் நகர்த்தியது.
அண்மையில் ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஈரான்தான் காரணம் எனக்கூறி மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு கூடுதலாக ஆயிரம் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது.
இதனால் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா–ஈரான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தங்கள் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் வான்பரப்பில் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் எந்த நாட்டுடனும் போரை விரும்பவில்லை. ஆனால் ஈரானைப் பாதுகாக்க நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம் எனக் கூறியுள்ளது.
தங்கள் நாட்டு ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. ஆனால் விமானம் ஈரானின் வான்பரப்பில் நுழையவில்லை, சர்வதேச நீர்பரப்புக்கு மேலே பறந்ததாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.