ஓமான் வளைகுடா. உலகம் முழுவதும் எரிபொருளை விநியோகிக்கும் கடற்பாதை. அங்குள்ள குறுகலான நீரிணை. இரு கப்பல்களில் திடீரென வெடிப்புச் சத்தம். சற்று நேரத்தில் கப்பல்கள் தீப்பற்றி எரிகின்றன.
ஒரு கப்பலில் 75,000 தொன் எரிபொருள். மற்றைய கப்பலில் 25,000 தொன் எரிபொருள். கடற்கலங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கியதும் மாலுமிகள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். ஒரு கப்பல் கைவிடப்படுகிறது.
கடந்த வியாழனன்று இடம்பெற்ற சம்பவம். இது தனியொரு சம்பவம் அல்ல. கடந்த மே மாதம் 12ஆம் திகதி நிகழ்ந்த சம்பவங்களின் தொடர்ச்சி.
அன்றைய தினம் நான்கு கப்பல்களில் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தச் சம்பவங்களால் கப்பல்கள் பெரும் சேதம் அடைந்திருந்தன.
இந்தச் சம்பவங்கள் மத்திய கிழக்கின் பாதுகாப்பு பற்றி கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளன. இராணுவ மோதல்கள் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இதற்குக் காரணம் உண்டு. பிந்திய தாக்குதல்களுக்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா சாடுவதும், அதனை ஈரான் மறுப்பதும் முதன்மைக் காரணம்.
கப்பல்கள் தாக்கப்பட்டிருந்தால், தாக்கியது யார் என்பதை ஆராய வேண்டும். தீர்க்கமான ஆதாரங்களின் அடிப்படையில் தாக்கியவரை நிரூபிக்க வேண்டும்.
மாறாக, ஈரானே கப்பல்களை நாசமாக்கியது என்பதை புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தியிருப்பதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
இதற்குப் பதில் அளித்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஜவாட் ஸரீப், அமெரிக்காவின் கற்பனைக்கு அமைய சந்தேகம் கூட எழ மாட்டாதெனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கும், பதிலளிப்புகளுக்கும் காரணமாக சம்பவங்கள் இரு விடயங்களின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
உலகம் முழுவதற்குமான எரிபொருள் விநியோகம் என்பது முதல் விடயம். ஈரான் மீது அமெரிக்கா கொண்டுள்ள பகைமை என்பது இரண்டாவது விடயம்.
இந்தக் கடற்பாதையானது அரசியல் அடிப்படையில் மத்திய கிழக்கை இரண்டாக பிளவுபடுத்தும் கோடாகவும் திகழ்கிறது.
ஒருபுறத்தில் ஈரான் இருக்கிறது. மறுபுறத்தில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலான நாடுகள் காணப்படுகின்றன.
இரு தரப்புக்களும் தமக்கு சார்பான படைகளைப் பயன்படுத்தி, லெபனான், ஈராக், சிரியா, பஹ்ரேன் முதலான நாடுகளில் பல வருடங்களாக சண்டையிட்டு வருகின்றன.
யேமனில் ஈரானுக்கு சார்பான குழுவொன்றை தோற்கடிப்பதற்காக சவூதி அரேபியப் படைகளும், எமிரேட்ஸ் படைகளும் நான்காண்டுகளாக நேரடியாக களத்தில் போரிடுகின்றன.
இந்த சண்டைக்கு மத்தியில், மத்திய கிழக்கில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக அமெரிக்காவும் படைகளைக் குவித்திருக்கிறது.
எனவே, வேறு நாடுகளது கொடிகள் பறக்கும் கப்பல்களை ஈரானே தாக்கியதாக அமெரிக்கா மேலோட்டமாகக் கூறுவதன் தாற்பரியத்தை ஆராய வேண்டும்.
மத்திய கிழக்கில் ஆதிக்கத்தை நிலைநாட்டுதல் என்பது அமெரிக்காவின் அவா. அதற்காக ஈரானை ஓரங்கட்டுதல் என்ற மூலோபாயத்தை அமெரிக்கா அனுசரிக்கிறது.
அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கைகள் சகல விதங்களிலும் தோல்வி கண்டுள்ளன. இந்தத் தோல்வியை பல வடிவங்களில் வெளிப்படையாகக் காணலாம்.
இஸ்ரேலிய பலஸ்தீனப் பிரச்சி னையில் தீர்வு என்பது எட்டாக்கனி. இன்று இஸ்ரேலில் வலுவான அரசாங்கத்தை அமைப்பது கூட சாத்தியமில்லாமல் இருக்கிறது.
சிரியாவில் சிவில் யுத்தம். யேமனில் பெரும் மனிதப் பேரவலம். ஈராக்கில் குழுக்களுக்கு இடையிலான சண்டை. பிராந்தியம் முழுவதும் ஐ.எஸ். முதலான இயக்கங்களின் ஆதிக்கம்.
இத்தகைய சூழ்நிலையில், ஈரானை வம்புக்கு இழுத்து, அதனை ஓரங்கட்டுவதன் மூலம், தாம் வெற்றி பெற்றோம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது அமெரிக்காவின் மூலோபாயமாகக் காணப்படுகிறது.
இந்த நடைமுறையில், ஈரானிய அரசாங்கத்தை எப்படியாவது ஆட்சிபீடத்தில் இருந்து கவிழ்த்து விட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி திட்டம் போட்டார்.
இது மூன்று அம்சங்களைக் கொண்டது. ஈரானுடனான அணு உடன்படிக்கையில் இருந்து விலகுதல், பொருளாதாரத் தடைகளை விதித்தல், ஈரானுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குதல்.
அணு உடன்படிக்கை முக்கியமானது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜேர்மனி ஆகிய நாடுகளும் சம்பந்தப்பட்டுள்ளன.
இதன் கீழ், ஈரான் சர்ச்சைக்குரிய அணு உற்பத்தி செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். பதிலுக்கு உலக நாடுகள் ஈரான் மீதான தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம்.
இந்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இதற்கான காரணத்தையும் அறிவித்தார்.
உலக வல்லரசுகள் ஒன்றுகூடி உருவாக்கிய உடன்படிக்கை. அதிலிருந்து விலகுவதற்கு அமெரிக்க ஜனாதிபதியால் தர்க்க ரீதியான காரணமொன்றைக் கூற முடியவில்லை.
இதன்மூலம், சர்வதேச அரங்கில் ஈரானைத் தனிமைப்படுத்துவது அமெரிக்க ஜனாதிபதியின் நோக்கம். தனிமைப்படுத்தினால் ஈரானுக்கு பொருளாதார கஷ்டம் ஏற்படும். ஆட்சியைக் கவிழ்க்கலாமென அவர் கணக்குப் போட்டிருக்கலாம்.
ஆனால், அவரது கணக்கு தப்புக் கணக்காகியது. அணு உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகியதால் ஈரான் அஞ்சவில்லை. உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடுகள் அதனைக் கைவிட விரும்பவில்லை.
அணு உடன்படிக்கையைக் குறைத்து மதிப்பிட வேண்டாமென ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகள் கோரின. ஈரானுடன் பிரச்சினை இருந்தால், அதனை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளுமாறு கோரின. இவற்றில் நான்கு நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்தவர்கள்.
மறுபுறத்தில், அணு உடன்படிக்கையை மதித்தன் மூலம் சர்வதேச கடப்பாடுகள் மீதான விசுவாசத்தை ஈரான் வெளிப்படுத்தியது. உடன்படிக்கையின் நிபந்தனைகளை நிறைவேற்றி, அதிலிருந்து விலகாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் வெற்றி பெற்றது.
ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதாரத் தடைகளால், ஈரானிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும், ஏனைய நாடுகள் தொடர்ந்து ஈரானுடன் வர்த்தகம் செய்தன. ஈரானின் எரிபொருளை காசு கொடுத்து வாங்கின.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலான நாடுகளின் எதேச்சாதிகார அதிகாரிகள் சுன்னத்துல் ஜமாஅத் பிரிவினர்.
சவூதி, எமிரேட்ஸ் கூட்டணியுடன் இஸ்லாமிய நாடுகளின் ஸ்தாபனத்தை இணைத்து ஈரானுக்கு எதிராக திருப்ப முனைந்தார், ட்ரம்ப். இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசாங்கத்தையும் இணைத்துக் கொள்ளும் வகையில் காய்களை நகர்த்தினார்.
இந்த நகர்வுகளால் ஈரானிய மக்களை அச்சுறுத்த முடியவில்லை. மாறாக, இறைமையுள்ள பாரசீக தேசத்தவர்களாக ஈரானிய மக்கள் ஒன்றுபட்டார்கள். அயல்நாடுகளில் இருந்து விடுக்கப்படும் அச்சுறுத்தல் ஈரானிய மக்கள் மத்தியிலான பிளவுகளையும் நீக்கியது எனலாம்.
பேரழிவு தரும் ஆயுதங்கள் உள்ளதாகக் கூறிக்கொண்டு, 2003ஆம் ஆண்டில் அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஊடுருவியதன் விளைவுகளை ஈரானிய மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். எனவே, அந்நிய ஆக்கிரமிப்பிற்கு இடமளிக்கக்கூடாது என்ற எண்ணம் ஈரானியர்கள் மத்தியில் மேலோங்கியது.
அமெரிக்க ஜனாதிபதி இன்னொரு காரியத்தையும் செய்தார். தமது மக்களவையின் எதிர்ப்பை மீறி, சவூதி அரேபியாவிற்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் நவீன ரக ஆயுதங்களை பெருமளவில் விற்பனை செய்தார். யேமன் யுத்தத்தில் ஈரானை தோல்வி காணச் செய்தல் அவரது தந்திரோபாயம்.
யேமனில், ஹவுதி கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஈரானியப் படைகள் உதவுகின்றன. சவூதி, எமிரேட்ஸ் படைகள் இணைந்து நடத்தும் தாக்குதலில், ஈரானின் மூக்கு உடைபட வேண்டும். இதன்மூலம், தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என ட்ரம்ப் நினைத்தார்.
ஆனால், நடந்தது வேறு. சவூதி, எமிரேட்ஸ் படைகளுக்கு கிடைத்த ஆயுதங்கள் மூலம் கூடுதலாக பொது மக்களே கொல்லப்பட்டார்கள். யேமன் போர்க்களமாக மாறி, அங்கு பசியும் பட்டினியும் தாண்டவமாடும் நிலை தோன்றியது. இதற்கு அமெரிக்காவே காரணம் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
ஈரானுக்கு எதிரான துப்பாக்கி ராஜதந்திரத்தில் தமக்கு ஏற்பட்ட தோல்வியை அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டாது. எனவே, இன்னொரு வழியில் ஈரானைத் தனிமைப்படுத்தக்கூடிய வழியைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் ட்ரம்பிற்கு எழுந்திருக்கலாம்.
இந்த நிர்ப்பந்தமே கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் மீது பழிபோடும் படலமாக மாறியிருக்கிறது. ஈரானைக் குற்றவாளியாக நிரூபித்து விட்டால், உலக அளவிலான எரிபொருள் விநியோகத்தை முடக்கிய தேசமாக முத்திரை குத்தி விடலாம் என்பது ட்ரம்பின் எண்ணம்.
இந்தக் கைங்கரியத்தைச் செய்ய வேண்டுமாயின் வெறுமனே குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் பயனில்லை. மாறாக தகுந்த ஆதாரங்களுடன் ஈரான் குற்றவாளி என்பதை அமெரிக்க ஜனாதிபதி நிரூபிக்க வேண்டும்.
எப்படியென்றால், பேரழிவு தரும் ஆயுதங்கள் இருப்பதாகக் கருதி ஈராக்கிய மண்ணை ஆக்கிரமித்த பின்னர், அங்கு எந்தவொரு ஆயுதத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதை போல அதனை தொடர்ந்து உலக மக்கள் மத்தியில் தார்மிக குற்றவாளியாக நின்றதைப் போலவேனும் நிரூபிக்கலாம்.