சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் சாலையின் விளிம்பில் நடந்து சென்ற அரசு ஆசிரியை, மகளின் கண்முன்னே டிப்பர் லாரி மோதி உடல் நசுங்கி உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

தாரமங்கலம் அருகே மானத்தாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளயில் பணிபுரிந்தவர் கிறிஸ்டி அகஸ்டா ராணி. இவர் நேற்று மாலை தனது மகளுடன் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

சாலையின் விளிம்பில் நடந்து சென்ற அவர் மீது, நங்கவள்ளியை நோக்கி சென்ற டிப்பர் லாரி மோதியது.

இதில் கீழே விழுந்த ஆசிரியை மீது, லாரியின் முன் மற்றும் பின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்டு அவரது மகள் கதறி அழுதார்.

ஆசிரியை சாலையின் விளிம்பில் நடந்து சென்ற நிலையில் பின்னால் வந்த லாரி எவ்வித தடுமாற்றமும் இன்றி ஆசிரியை மீது மோதியது. இது பார்க்க டிரைவர் வேண்டுமென்றே ஆசிரியை மீது மோதியது போல் தெரிந்தது.

அதே சமயம் எதிர் திசையில் வந்த பேருந்துக்கு வழிவிடுவதற்காக டிப்பர் லாரியின் ஓட்டுநர் இடதுபுறமாக லாரியை இயக்கிய போது ஆசிரியை மீது மோதியுள்ளது.

பேருந்தை பார்த்த டிரைவர் இடதுபுறமாக மாறி உடனடியாக பிரேக் பிடித்திருந்தால் லாரியை நிறுத்தி விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஓட்டுனர் பிரேக் பிடிக்க முயற்சி கூட செய்ததாக தெரியவில்லை.

இதனிடையே விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர், சிறிது தூரத்தில் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற தாரமங்கலம் போலீசார் செம்மண்ணுடன் இருந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version