இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளனர். இந்த ஆண்டு சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது.
புத்தாண்டு தினத்தன்று உலகில் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற தகவலை ஆண்டுதோறும் ஐ.நா. சபை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 2020-ம் ஆண்டு புத்தாண்டு தினமான நேற்று எந்தெந்த நாடுகளில் எத்தனை குழந்தைகள் பிறந்தன என்ற தகவலை ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. சபையின் கணக்கெடுப்பின்படி புத்தாண்டு தினமான நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 078 குழந்தைகள் பிறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. வழக்கமாக குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் சீனா முன்னிலை வகித்தது.
இந்த ஆண்டு சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் நேற்று 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளனர். இது புத்தாண்டு தின குழந்தைகள் பிறப்பு சதவிகிதத்தில் 17 சதவிகிதம் ஆகும்.
சீனா நாட்டில் 46 ஆயிரத்து 299 குழந்தைகள் பிறந்து பிறப்பிடத்தில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. நைஜீரியா 26 ஆயிரத்து 039 குழந்தைகளுடன் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 16 ஆயிரத்து 787 குழந்தைகள் பிறப்புடன் 4-வது இடத்திலும், இந்தோனேசியா 13 ஆயிரத்து 20 குழந்தைகள் பிறப்புடன் 5-வது இடத்திலும் உள்ளன.
அமெரிக்காவில் 10 ஆயிரத்து 452 குழந்தைகள் பிறந்துள்ளன அந்த நாடு புத்தாண்டு தின குழந்தைகள் பிறப்பில் 6-வது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய நாடுகள் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் மிக மிக பின் தங்கியுள்ளன.
ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு தினத்தன்று குழந்தை பிறப்பதை மிகவும் அதிர்ஷ்டகரமானதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் பல்வேறு நாடுகளில் கருதப்படுகிறது. இதனால் சில நாடுகளில் 1-ந்தேதி தினத்தன்று சிசேரியன் மூலம் ஏராளமான பெண்கள் குழந்தை பெற்றிருப்பதாக ஐ.நா. சபை தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.