ஜெர்மனில் உற்பத்தி செய்யப்படும் மிக விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் ரக கார் ஒன்றுக்கு, குஜராத் போக்குவரத்து ஆணையர் சுமார் 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்த சம்பவம் பலரது புருவங்களையும் ஆச்சரியத்தில் உயர்த்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம், வடக்கு அகமதாபாத்தில் போலீஸார் வழக்கமான சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நம்பர் பிளேட் இல்லாத விலையுயர்ந்த போர்ஷ 911 காரை நிறுத்தி சோதித்துள்ளனர்.
ஆனால், கார் ஓட்டுநரிடம் தக்க ஆவணங்கள் இல்லாததால் காரை பறிமுதல் செய்த போலீஸார், 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்தனர்.
தொடர்ந்து, இந்த தகவலை #Rules4All என்ற ஹாஷ்டேக்கை பதிந்து தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அகமதாபாத் போலீஸார் பதிந்திருந்தனர்.
During a routine checking in Ahmedabad West. Porsche 911 was caught by PSI MB Virja. The vehicle had No Number Plate and Valid Documents. Vehicle detained and slapped fine of Rs. 9 Lakh 80 Thousand (9,80,000 INR). #AhmedabadPolice #Rules4All pic.twitter.com/runtd5k8dX
— Ahmedabad Police (@AhmedabadPolice) 29 novembre 2019
போலீஸாரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் (புதன்கிழமை) மற்றொரு ட்வீட்டை பகிர்ந்திருந்த அகமதாபாத் போலீஸார், குஜராத் போக்குவரத்து ஆணையர் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட காருக்கு 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக பதிவிட்டிருந்தனர்.
மேலும், இந்தியாவிலேயே விதிக்கப்பட்ட அதிக அபராத தொகையில் இதுவும் ஒன்று என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
போர்ஷ 911 மாடலின் இந்திய மதிப்பு சுமார் 2.15 கோடி ரூபாய். இந்த காருக்கான இன்ஷுரன்ஸ் தொகை மட்டுமே சுமார் 8 லட்ச ரூபாய்க்கும் அதிகம்.